

முன்பெல்லாம் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.
நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், இந்தப் படிப்புகளில்தான் சேர வேண்டும் எனும் பிம்பத்தை இச்சமூகம் கட்டமைத்து, அதனை ஒரு கௌரவம்போல ஆக்கிவிட்டிருக்கிறது. அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகள் சார்ந்த பாகுபாடு இன்னமும் இச்சமூகத்தில் இருப்பது தெளிவாகப் புலப்படுகிறது.
பாகுபாடு ஏன்?: மொழித்தாள்களுக்கு (ஆங்கிலம், தமிழ்) உரிய அங்கீகாரம் இல்லாத சூழ்நிலை தொடர்வதால், இந்தப் பாகுபாடு பள்ளிகளிலிருந்தே தொடங்கிவிடுகிறது. உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவியல் பாட மதிப்பெண்களைக் கணக்கில்கொண்டு, மொழித்தாள்களின் மதிப்பெண்களைக் கணக்கில்கொள்வதில்லை.
இதனால், போட்டித் தேர்வுகளில் பல மாணவர்கள் மொழித்திறன் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆங்கில மொழித்திறன் இல்லாதிருப்பது வங்கித் தேர்வில் பலரால் தேர்ச்சிபெற முடியாமல் போவதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஒருவரின் கற்பனைத் திறனை அவர்தம் நடையில் எழுதுவதற்கு மொழித்தாள்களே அடிப்படை. ஆனால், எத்தனை பள்ளிகள் ஒரு மாணவரின் கலைத்திறனை மொழிசார்ந்து ஊக்குவிக்கின்றன என்பது கேள்விக்குறிதான். மொழித்தாள்கள் எல்லாம் சம்பிரதாயத்துக்கே என்ற நிலைதான் இதற்கெல்லாம் காரணம். பள்ளிகளில் மொழித்தாள்களுக்கும் உரிய மதிப்பைக் கொடுத்தால் மட்டுமே இந்நிலையைச் சரிசெய்ய முடியும்.
பாகுபாட்டின் பின்னணி: சாதி, பணம் என்ற இரண்டு நிலைகளில் அறிவியல், சமூக அறிவியல் மீதான பாகுபாட்டை உணரலாம். இன்னார் இந்தப் படிப்புதான் படிக்க வேண்டும் என்ற நிலை காலப்போக்கில் குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் பணபலம், அறிவியல் சார்ந்த கல்வியை இப்போதும் விலைபேசி வருகிறது.
பிள்ளைகளின் விருப்பத்துக்கு மாறாகப் பொருளாதார வசதி இல்லாத பெற்றோர்கள், இருப்பதை விற்றுத் தம் பிள்ளைகளை அறிவியல் சார்ந்த உயர் கல்விப் படிப்புகளில் சேர்த்துவிட முற்படுகின்றனர். மேலும், உயர் கல்வித் துறையில் சேர்க்கைக்கான பயிற்சி நிலையங்களின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தானின் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலைகள் அடிக்கடி அரங்கேறுகின்றன.
இசை, எழுத்து, ஓவியம் எனத் துறை சார்ந்த அவர்களின் திறமையை வளர்த்துவிடுவதற்கு மாறாகப் பயிற்சி நிலையங்களில் அவர்களின் கனவுகள் நசுக்கப்படுவதால், மன அழுத்தம் அதிகரித்து, இறுதியில் தற்கொலை வரை செல்கின்றனர். அறிவியல் கல்விக்குத் தரும் முக்கியத்துவம், நிதி ஒதுக்கீட்டைச் சமூக அறிவியல் சார்ந்த கலை, அறிவுப் படிப்புகளுக்கு அரசாங்கம் தருவதில்லை.
மும்பையில் இருக்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 4.5% மட்டுமே சமூக அறிவியல் சார்ந்த பாடப்பிரிவைச் சேர்த்துள்ளது. ஆனால், அமெரிக்காவின் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம், அதே பாடப்பிரிவுக்கு 20% சமூக அறிவியல் சார்ந்த பாடப்பிரிவை வைத்துள்ளது. அதனால்தான் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது; இந்தியத் தொழில்நுட்பக் கழகமோ 50ஆவது இடத்தில்கூட இல்லை.
என்ன செய்ய வேண்டும்?: தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்ப் பாடம் ஒரு கட்டாயத் தேர்வாக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்தியத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலம் சார்ந்த மொழித்திறன் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இந்தப் பின்னணியில், ஆங்கிலம்-தமிழ் பாடங்களைப் பள்ளிகள் ஏன் இவ்வளவு மெத்தனமாகக் கையாள்கின்றன என்பது மொழித்தாள்களின் மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லாததே காரணமா என்ற கேள்விக்கு இட்டுச் செல்கிறது. ‘சமூக அறிவியல் – கலை, இலக்கியத்தை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்.
ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தை அறிவியலாளர்கள் மட்டுமே விமர்சனம் செய்ய முடியும் என்றிருப்பதே பாகுபாடுதான்’ என்ற போலியோவுக்குத் தடுப்பூசி கண்டறிந்த ஜோனஸ் சால்க்கினின் கூற்றையும் மறுத்துவிட முடியாது.
கடினமான பிரச்சினைகள் சிலவற்றைத் தீர்க்க, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கணினி அறிவியல் தொழில்நுட்பம் மூலம் செயல்படுத்த தத்துவவியலாளர், வழக்கறிஞர், பொருளியலாளர், உளவியல் நிபுணர் எனப் பலரின் உதவியிருந்தால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில் அறிவியல், சமூக அறிவியல் என இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை என்பதை வளர்ந்துவரும் தொழில்நுட்பமே நமக்கு உணர்த்துகிறது.
எனவே, அறிவியல் – தொழில்நுட்பத் துறைகள் அனைத்துக்கும் தீர்வளித்துவிடாது. ‘தொழில்நுட்பமானது பன்முகக் கலை, சமூக அறிவியல் துறைகளுடன் ஆக்கபூர்வ உறவு கொண்டால், அதனால் விளையும் முடிவுகள் பெரும் ஆற்றல் கொண்டவை’ என ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியது காலா காலத்துக்கும் பொருந்தும். ஆகவே, கலையுடன் சேர்ந்த அறிவியலே நாளும் கல்வியைத் தழைக்க வைக்கும்.
- செ.சரத், தொடர்புக்கு: saraths1995@gmail.com