எலிசபெத் மரபு தொடருமா?

எலிசபெத் மரபு தொடருமா?
Updated on
3 min read

‘இங்கிலாந்து என்பது ஒரு குடும்பம்’ என்றார் ஜார்ஜ் ஆர்வெல். ‘தவறான நபர்களே எப்போதும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள்.’

கடந்த 70 ஆண்டுகளாகப் பிரிட்டனை ஆளும் பொறுப்பை ஏற்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்துள்ளார். அம்மாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் புதிய மன்னராகப் பொறுப்பேற்றிருக்கிறார் 73 வயது மூன்றாம் சார்லஸ்.

ராணியின் மறைவையொட்டி எழுதப்பட்டுள்ள எல்லா இரங்கல் கட்டுரைகளும் அவருடைய குறிப்பிடத்தக்க சாதனை என்று தவறாமல் சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.

ஆயிரம் இக்கட்டுகளுக்கு மத்தியில், ஆயிரம் மாற்றங்களுக்கு மத்தியில், கடும் அரசியல் பொருளாதாரச் சமூக நெருக்கடிகள் கடந்து, முடியாட்சியை இவ்வளவு காலம் தக்க வைத்திருக்கிறார் எலிசபெத். பழம்பெரும் வரலாற்று மரபொன்றை மிகக் கவனமாகப் பேணிக் காத்ததோடு, தன் மகன் அந்த மரபை இனி தொடர்வதற்கும் அவர் வழி வகுத்திருக்கிறார். இனி சார்லஸுக்குப் பிறகு அவர் வாரிசுகளும் அவர்களுக்குப் பிறகு மற்ற வாரிசுகளும் முடியாட்சியைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள்.

ராணியான இளவரசி: என்ன நடந்தாலும் சரி, அரச வம்சம் தழைத்திருக்கும், தழைத்திருக்க வேண்டும் என்பதில் எலிசபெத்துக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. உலகறிந்த முகம் அவருடையது. உலகறிந்த குடும்பம் அவருடையது.

அவர், அவர் கணவர், அவருடைய நான்கு குழந்தைகள், அவர்களுடைய குழந்தைகள் என்று அனைவரைப் பற்றியும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதப்பட்டுவிட்டன. ஏகப்பட்ட விவாதங்கள் எல்லா ஊடகங்களிலும் நிகழ்த்தப்பட்டுவிட்டன.

1952இல் தனது 25ஆவது வயதில் ராணியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார் எலிசபெத். ஓர் அரசரை (அப்பா), ஓர் அரசியை (அம்மா), இரு இளவரசிகளை (சகோதரி, டயானா), ஓர் இளவரசரை (கணவர் பிலிப்) தன் வாழ்நாளில் அவர் இழந்திருக்கிறார். தனது மரணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி வரவேற்றிருக்கிறார்.

ராணி சந்திக்கும் 15ஆவது பிரதமர் இவர். முதல் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில். தந்தையும் அரசருமான ஆறாம் ஜார்ஜை இழந்த கையோடு, கென்யாவிலிருந்து எலிசபெத் பறந்து வந்தபோது, அவரை வரவேற்க சர்ச்சில் விமான நிலையத்தில் காத்திருந்தார். சர்ச்சிலுக்கு எலிசபெத்தின் தந்தையைப் பிடிக்கும்.

எலிசபெத் அவரைக் கவரவில்லை. அனுபவமற்றவர்; ஒரு நல்ல ராணியாக இருக்க முடியாது என்றுதான் தொடக்கத்தில் கருதியிருக்கிறார். விரைவில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதோடு எலிசபெத்துக்கு நெருக்கமானவராகவும் மாறினார்.

எதை எலிசபெத்தின் சாதனை என்று பிரிட்டன் குறிப்பிடுகிறதோ அதையேதான் விவாதப் பொருளாகவும் நாம் மாற்ற வேண்டியிருக்கிறது. பழங்கால மரபுகள் எல்லாமே போற்றத்தக்கவை அல்ல; எல்லாமே தொடரப்பட வேண்டியவையும் அல்ல என்றே வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. காலனியம் என்பதும் ஒரு மரபுதான்.

எப்படி முடியாட்சிக்குப் பின்னால் ஒரு நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறதோ அதேபோல் காலனியத்துக்கும் நீண்ட, நெடிய வரலாறு இருக்கிறது. முடியாட்சி பிரிட்டனின் முக்கியமான மரபென்று ஒருவர் வாதிட்டால் அவரிடம், காலனியமும் உங்கள் முக்கிய மரபுதான் என்றே நாம் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். வேறெந்த நாட்டையும்விட காலனியத்தால் அதிகம் செழுமைபெற்ற நாடு பிரிட்டன்.

சூரியன் மறையாத பேரரசாக உலக அரங்கில் பிரிட்டன் ஒரு காலத்தில் மின்னிக்கொண்டிருந்ததற்குக் காரணம், காலனியம்தான். ஆனால், அந்த மரபு ஒரு கட்டத்துக்கு மேல் நீள முடியாமல் அறுபட்டு விழுந்தது. அது தானாகவே நடந்துவிடவில்லை.

ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரை பற்றிப் படர்ந்த மக்கள் எதிர்ப்புதான் காலனியத்தை உடைத்தது. அதேபோல், அடிமை முறை மூலம் மிகுந்த பலனடைந்த நாடுகளுள் ஒன்று பிரிட்டன். பழங்கால மரபென்று அதையும்கூட அழைக்க முடியும்தான். எதிர்ப்புகள் காரணமாக அதையும் பிரிட்டன் கைவிட வேண்டியிருந்தது.

வீழாத முடியாட்சி: நியாயப்படி முடியாட்சியும் காலப்போக்கில் உதிர்ந்திருக்க வேண்டிய ஒன்றுதான். இந்த 21ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மட்டுமல்ல, எந்தவொரு நாட்டுக்கும் முடியாட்சி தேவைப்படாது என்பதே நிஜம். ஆனாலும் பிரிட்டன் அதை அணைத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், எலிசபெத் என்கின்றனர் பலர்.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வழிநடத்திய சர்ச்சிலை மக்கள் அதன் பின் நிராகரித்துவிட்டனர். ஆனால், எலிசபெத்தை அவர் மரணமடையும் வரை பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் நேசித்திருக்கின்றனர். இந்த நேசத்துக்குப் பின்னாலுள்ள உளவியல் ஆராயத்தக்கது.

எந்தவித சட்ட அங்கீகாரமும் இல்லாத, இன்றைய காலத்துக்கு எந்தவிதப் பொருத்தப்பாடும் இல்லாத ஓர் அலங்காரப் பதவியை ஏன் பிரிட்டிஷ் மக்கள் விட்டொழிக்க மறுக்கிறார்கள்? எலிசபெத்தை அவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்கு அப்பால், இதற்கான விடையை நாம் தேட வேண்டியிருக்கிறது.

உலக அரசியலை, உலகப் பொருளாதாரத்தை, உலகப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் தனிப்பெரும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த பிரிட்டன், இன்று பெட்டிப் பாம்பாகச் சுருங்கியிருக்கிறது. இன்று பிரிட்டனைக் கண்டு எந்தவொரு நாடும் அஞ்சுவதில்லை; மலைப்பதில்லை.

பிரிட்டிஷ் பேரரசின் பெருமைக்குரிய குடிமக்களாக இருந்தவர்களுக்கு இன்று எஞ்சியிருப்பவை பழங்கால நினைவுகள் மட்டுமே. எங்கள் மரபென்றும், எங்கள் வரலாறென்றும், எங்கள் பெருமிதம் என்றும் உயர்த்திப் பிடிக்க இன்று அவர்களுக்கு நினைவுகள் மட்டும்தான் இருக்கின்றன. இந்தப் பழங்கதைகளின், பழம்பெருமிதங்களின், பழங்கால மரபுகளின் ரத்தமும் சதையுமான அடையாளமாக எலிசபெத் அவர்களுக்குக் காட்சி தந்திருக்கிறார்.

எலிசபெத்தின் ஆளுகை: தன் குடிமக்களின் உளவியல் தேவைகளை வேறெவரையும்விட எலிசபெத் நன்கு அறிந்திருந்தார். பொதுவெளியில் அவர் அதிகம் பேசுவதில்லை. சுற்றி நடைபெறும் எதுவும் அவரை அசைப்பதில்லை. எந்தப் பிரதமரையும் அவர் ஆதரித்ததில்லை. எவரையும் எதிர்த்ததில்லை.

ராணியின் அரசியல் நிலைப்பாடு என்ன, உலக விவகாரங்கள் குறித்து அவர் என்ன நினைக்கிறார்? தெரியாது. முடுக்கிவிடப்பட்ட ஒரு பொம்மைபோல் வாழ்வதுதான் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரே வழி என்பது அவருக்குத் தெரியும். இப்படி அவர் இருந்தால் மட்டுமே அதிகாரத்தை அவரிடம் கொடுத்து வைத்திருக்க முடியும் என்று மக்களுக்கும் தெரியும்.

ஜனநாயக நாடுதான் என்றாலும் அரசுக்கும்கூட முடியாட்சிக் கால நினைவுகளும், அதைவிட முக்கியமாகச் சில முடியாட்சி காலப் பண்புகளும் தேவைப்படுகின்றன. தியாகம், கடமை, கட்டுப்பாடு, உறுதி, கடும் உழைப்பு போன்ற பண்புகளை இன்றைய குடிமக்களிடம் அரசு எதிர்பார்க்கிறது. ஆக, மக்களும் அரசும் விரும்புவதால்தான் பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வரை உயிர்த்திருக்கிறது.

நாளை என்னாகும்?: இப்போதே சில அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. பிரிட்டனின் முன்னாள் காலனியும் காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாகவும் இருந்த பார்படோஸ், இனி எலிசபெத் எங்கள் ராணியல்ல; நாங்கள் அவருடைய குடிமக்களும் அல்ல என்று அறிவித்துள்ளது.

அரச குடும்ப வாரிசுகளான வில்லியம், கேட் இருவரும் கரீபியன் நாடுகளுக்கு அண்மையில் வருகை தந்தபோது பெலிஸ், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலிருந்த மக்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்திருக்கிறார்கள். ‘இளவரசர் வாழ்க’, ‘ராணி வாழ்க’ என்ற முழக்கங்களை எதிர்பார்த்துச் சென்றவர்களைக் காலனிய எதிர்ப்பு முழக்கங்கள் வரவேற்றிருக்கின்றன.

பிரிட்டன் தனது கடந்த காலக் குற்றங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்னும் முழக்கம் இந்தியா தொடங்கி ஆப்பிரிக்கா வரை பல பகுதிகளில் வலுவடைந்துவருகிறது.

எலிசபெத் இந்தக் குரல்களையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. சார்லஸாலும் அம்மாவைப் போலவே எதற்கும் காது கொடுக்காமல், எப்போதும் புன்னகை அரும்பிய முகத்தோடு இருந்துவிட முடியும்தான். பக்கிங்ஹாம் அரண்மனைதான் என் உலகம் என்று அதற்குள் சுருண்டிருந்து ஒரு அரசராக வாழ்ந்துவிட முடியும்தான்.

அம்மா அளவுக்குச் செல்வாக்கு இல்லை என்றாலும் புதிய அரசரைப் பிரிட்டனும் ஏற்றுக்கொண்டுவிடும். பிரிட்டனுக்கும் பிரிட்டிஷாருக்கும் வேண்டுமானால் பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு மகத்தான மரபின் நினைவாக இருக்கலாம். ஒரு காலத்தில் பிரிட்டனின் காலனியாக இருந்தவர்கள் அவ்வாறு கருதவில்லை என்பதையே வலுத்துவரும் எதிர்ப்புகள் உணர்த்துகின்றன.

- மருதன், எழுத்தாளர். ‘இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: marudhan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in