ஈ-சிகரெட் தேவையா, தேவையில்லையா?

ஈ-சிகரெட் தேவையா, தேவையில்லையா?
Updated on
1 min read

புகையிலைப் பொருட்களால் ஆண்டுதோறும் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகக் கருதப்படுகிறது. சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட் களை அன்றாட வாழ்வில் பலர் தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு கள்குறித்து, சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். தற்போது, சுகாதார நிபுணர்களின் கவனம் ஈ- சிகரெட் மீது திரும்பியுள்ளது. சிகரெட்டுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்த மின்னணுப் பொருள் ஆரம்பத்தில், புகைப் பழக்கம் கொண்டவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க உதவுவதாகக் கருதப்பட்டது. இதையடுத்து, இவற்றின் விற்பனையும் அதிகரித்தது. ஐரோப்பிய நாடுகளில்தான் ஈ-சிகரெட் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 24 வயதுள்ளவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், உலகெங்கும் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்கள் 100 பேர் இணைந்து, உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் மார்கரெட் சானுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.

புகையிலைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதில் எத்தனை கவனம் செலுத்தப் படுகிறதோ, அதே அளவு கவனம் ஈ-சிகரெட்டுகளைக் கட்டுப்படுத்துவதிலும் இருக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலைப் பொருட்களால் விளையும் தீமைகளைக் குறைக்கும் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ-சிகரெட்டால் எந்த நன்மையும் இல்லை. மேலும், ஈ-சிகரெட் விற்பனையின் பின்னணியில் புகையிலைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். தங்கள் பாவத்தைக் குறைக்கும் பாவனையில் புகையிலைப் பொருட்களுடன் சேர்ந்தே, இந்த ஈ-சிகரெட்டை அவர்கள் சந்தையில் விற்கின்றனர் என்ற குரல் எழுந்துள்ளது. எனினும், இதற்குச் சில நிபுணர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

“புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபட உதவும் ஈ-சிகரெட்டைத் தடைசெய்வது சரியான முடிவல்ல” என்று குறிப்பிடும் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் வெஸ்ட், “அதேசமயம், புகையிலைப் பொருட்களின் தயாரிப்பாளர்களே ஈ-சிகரெட்டையும் விற்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான்” என்கிறார். ஈ-சிகரெட் பற்றிய இந்த சர்ச்சை சுகாதாரத் துறையில் கவனம் பெற்றுள்ளது.

- தி கார்டியன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in