செரீனா வில்லியம்ஸ் ஓயாத பேராறு

செரீனா வில்லியம்ஸ் ஓயாத பேராறு
Updated on
3 min read

இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற விளையாட்டு வீரராக அறியப்பட்டவர் முகமது அலி. குத்துச்சண்டை வளையத்துள் வெல்வதற்கு அரியவராக அவர் இருந்தார் என்பது மட்டுமே அதற்குக் காரணமன்று. ஒலிம்பிக் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை நிறவெறித் தாக்குதலுக்கு எதிராக ஆற்றில் எறிந்ததாக அவர் கூறியது, வியட்நாம் போரில் கலந்துகொள்ள மறுத்தது முதலிய பல்வேறு செயல்பாடுகளின் தாக்கம், அவரை விளையாட்டு அரங்குக்கு வெளியிலும் முன்னிலைப்படுத்தின.

முகமது அலிக்கு இணையாக வைத்துப் பார்க்கக்கூடிய சாதனைகளை விளையாட்டு அரங்கிலும் வெளியிலும் இந்த நூற்றாண்டில் நிகழ்த்தியவர் செரீனா வில்லியம்ஸ். எனவேதான், இந்த ஆண்டோடு டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தப்போவதாக அவர் அறிவித்தபோது, ‘ஓய்வுபெறுதல் என்ற சொல் எனக்கு எப்போதும் உவப்பானதாக இருந்ததில்லை. அதை நவீனமான சொல்லாக நான் உணரவில்லை. இதை ஒரு நிலைமாற்றமாக நினைக்கிறேன். நான் செய்யவிருப்பதை விளக்க, ‘பரிணமித்தல்’ என்பதே சிறந்த சொல்லாக இருக்கலாம்’ என்று வோக் (Vogue) இதழில் எழுதினார்.

கறுப்பினத்தின் பிரதிநிதி: டென்னிஸ் உலகில் 1968இல் தொடங்கிய பொதுக்காலத்தில் (Open era), 23 முதன்மைக் கோப்பைகளை (கிராண்ட் ஸ்லாம்) வென்று, வேறு ஆணோ பெண்ணோ எவரும் எட்டாத உச்சத்தை செரீனா எட்டினார். அதற்கு முன் தொழில்முறை ஆட்டக்காரர்கள் முதன்மைத் தொடர்களில் அனுமதிக்கப்படாத காலத்தில், மார்கரெட் கோர்ட் மட்டுமே 24 முதன்மைக் கோப்பைகளை வென்றுள்ளார். செரீனாவின் வெற்றி, வெறும் தனிமனித வெற்றியாகவோ ஒற்றைக் குடும்பத்தின் வெற்றியாகவோ அமைந்துவிடவில்லை. உலகெங்கும் உள்ள கறுப்பின மக்களுக்கும் சமஉரிமை கோரும் பெண்களுக்கும் தடைகளைக் கடந்து உச்சத்தை எட்ட முனையும் அனைவருக்கும் அவரது வெற்றிகள் உந்துதலாக அமைந்துள்ளன. செரீனாவுக்கும் முன்பாக அவருக்கான பாதையை அமைக்கத் தொடங்கியவர் அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸ். அவர்களது குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது இணைத் தயாரிப்பில் வெளிவந்த ‘King Richard’ திரைப்படத்தில், 14 வயது வீனஸ் வில்லியம்ஸிடம் தந்தை ரிச்சர்ட், “நீ எடுத்துவைக்கப் போகும் அடுத்த அடி, உனக்கானது மட்டுமல்ல. இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு கறுப்பினச் சிறுமிக்கும் நீ பிரதிநிதியாக இருப்பாய். அந்த அடைபட்ட கதவைத் தாண்டிச் செல்பவளாக நீ இருப்பாய்” என்று கூறுவார். அது உண்மை.

நிறம் தந்த ஒவ்வாமை: வீனஸ் வில்லியம்ஸ் ஏழு முதன்மைக் கோப்பைகளை வென்று, உலகின் முதல் நிலை ஆட்டக்காரராக உயர்ந்தார். அவரையும் கடந்து இதுநாள் வரையிலான மிகச்சிறந்த ஆட்டக்காரராகக் கருதப்படும் இடத்தைச் செரீனா அடைந்தார். குத்துச்சண்டை, கூடைப்பந்து, தடகளப் போட்டிகள், கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுகளில் கறுப்பினத்தவர் கோலோச்சியிருந்தாலும், டென்னிஸில் நுழைவது அரிதாக இருந்துள்ளது. பொதுக்காலத்தில் முதன்முறையாகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தவர் வீனஸ் வில்லியம்ஸும் அவரைத் தொடர்ந்து செரீனாவும்தான். பொதுக்காலத்திற்கு முன்னர் ஆல்தியா கிப்சன் மட்டுமே முதலிடத்தை எட்டியிருக்கிறார்.

கிளாடியா ரேன்கின் என்ற அமெரிக்கக் கவிஞர் ‘Citizen: An American Lyric’ என்ற கவிதை நூலில் செரீனா வில்லியம்ஸ் சந்தித்த சவால்கள் குறித்த வலிமிகுந்த சித்திரத்தை அளிக்கிறார். செரீனாவை அரங்கத்துக்குள்ளும் வெளியிலும் எரிமலையாக்கிய கணங்களை உற்றுநோக்குகிறார். ‘வெற்றியோ தோல்வியோ அடைகிற கறுப்பினப் பெண்ணுடல், வழமையான வெள்ளை வெளியில் எவ்வாறு தோற்றமளிக்கும்?’ என்ற வினாவை எழுப்புகிறார். ‘டென்னிஸ் மிகக் கூர்மையான வெள்ளைப் பின்னணி கொண்டது’ என்கிறார் ரேன்கின். 2001இல் இந்தியன் வெல்சில் நடைபெற்ற போட்டியில் செரீனா கோப்பையை வென்றபோது கூட்டத்தினர் அவரது குடும்பத்தை நோக்கி நிறவெறிக் கூச்சலெழுப்பியபடி இருந்தனர். அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு அங்கு விளையாடுவதற்குச் சகோதரிகள் இருவருமே மறுத்துவிட்டனர். நிறவெறிக்கு எதிரான சூழல் மலர்ந்த பிறகுதான் அவர்கள் மீண்டும் அங்கு விளையாடினர்.

2004ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியின் இறுதியாட்டத்தில் ஜெனிஃபர் கேப்ரியாட்டியோடு மோதியபோது, நடுவராகச் செயல்பட்ட மரியானா ஆல்வஸ் செரீனாவுக்கு எதிராக ஐந்து புள்ளிகளைத் தவறாக வழங்கினார். செரீனா விரலை ஆட்டியபடி, ‘இல்லை, இல்லை, இல்லை’ என்று பதறினார். தோல்வியுற்றார். இதன் விளைவாகத்தான் அடுத்த ஆண்டு ‘Hawk-eye’ முறையில் மைதான எல்லைக்கோடு சார்ந்த முடிவுகளைச் சரிபார்க்கத் தொடங்கினர். ‘செரீனாவின் கரிய உடல் குறித்து எவரும் வெளிப்படையாகச் சொல்லாதிருந்தபோதும், ஆல்வஸின் பார்வைக் கோணத்துக்குக் குறுக்கே அவ்வுடல் வந்தது என்று நினைத்த பார்வையாளர் நீங்கள் மட்டுமன்று’ என்று ரேன்கின் எழுதுகிறார். இது ஆடுகளத்தில் செரீனா சந்தித்த முதல் பாகுபாடோ கடைசிப் பாகுபாடோ அல்ல. இந்தியாவில்கூட நம்மில் எத்தனை பேருக்கு செரீனா வில்லியம்சோ வீனஸ் வில்லியம்சோ விருப்ப விளையாட்டு வீராங்கனைகளாக இருந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதே.

மீண்டும் வந்த புயல் : நிகரற்ற முதற்பந்தெறிவு கொண்ட செரீனா, கருவுற்ற நிலையிலும் விளையாடி வென்ற செரீனா, உயிரை அச்சுறுத்திய பிரசவத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே சிறப்பு உடையுடுத்திப் பலருடைய கேலியையும் புறந்தள்ளி மீண்டும் ஆடவந்த செரீனா, நிறவெறிச் சிறுமை கண்டு பொங்குகிற செரீனா, தன்னை அடியொற்றி வந்த பல நிற இளம் வீரர்களோடு மோதி வெல்லவும் தோற்கவும் செய்த செரீனா என்று செரீனாவின் பல தோற்றங்களைப் பார்த்துவிட்டோம்.

அவர் தொடங்கியுள்ள ‘செரீனா வென்சர்ஸ்’ நிதி வழங்கியவற்றுள் 78 விழுக்காடு நிறுவனங்கள் பெண்களும் வெள்ளையர் அல்லாதோரும் தொடங்கியவை. இதுவரை பிற புதுத் தொழில் முதலீட்டு நிறுவனங்கள் வழங்கிய நிதியில் 2% கூடப் பெண்களுக்குத் தரப்பட்டதில்லை என்கிறார் செரீனா. தற்போது நடைபெறும் அமெரிக்க ஓபன் தொடரில் வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையைச் செரீனாவால் சமன்செய்ய முடியவில்லை. ஆனால், அரங்குக்கு வெளியே செரீனாவின் அடுத்த வெற்றி ஆட்டம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

- த.கண்ணன், தொடர்புக்கு: tkan75@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in