பாரதி நினைவு நாள் | நவீனத் தமிழ் இலக்கியத்தின் தந்தை

பாரதி நினைவு நாள் | நவீனத் தமிழ் இலக்கியத்தின் தந்தை
Updated on
2 min read

பாரதிக்கு மகாகவி, முண்டாசுக் கவிஞர் எனச் சிறப்புப் பெயர்கள் பல உண்டு. அவரைக் குறித்த திரைப்படமும் கதைகளும் தெய்விகக் கதைகளுக்கு நிகரான அற்புதம் கொண்டவை. ஆனால், பாரதியின் இலக்கியச் செயற்பாடு புதிய தலைமுறையினரால் சரியாகக் கவனிக்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதுதான். பாரதியின் பங்களிப்பை பத்தோடு பதினொன்றாகப் பட்டியலுக்குள் அடைத்துவிட முடியாது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனப் பாரதியை முன்னிறுத்துவது சாலப் பொருந்தும்.

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ எனப் பாரதி தன் கவிதையில் சொல்வதிலிருந்து தமிழை நவீனப்படுத்துவது குறித்த அவரது விருப்பத்தை அறிந்துகொள்ள முடியும். இந்தக் கவிதையின் தொடர்ச்சியில் அவர் ‘அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்கிறார். மேற்குலக இலக்கியத்தில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளைத் தொடர்ந்து கவனித்துவந்த பாரதி, அம்மாதிரியான முயற்சிகள் தமிழில் இல்லை என்கிற கவலையை இந்தக் கவிதையில் வெளிப்படுத்தியிருப்பார். ‘அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை/ சொல்லவும் கூடுவதில்லை/ அவை சொல்லுந் திறமை தமிழ் மொழிக்கில்லை’ என இந்தக் கவிதையின் முன் வரிகளில் மேற்கில் தோன்றிய அறிவியல் சித்தாந்தங்களை உள்வாங்கும் திறனை, தமிழ் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். தமிழ் அறிவியல் கலைக்களஞ்சியத்தின் தேவையை முன்னறிந்து உரைத்திருக்கிறார் என இதைக் கொள்ளலாம்.

புதியன தந்தவர்: ‘சொற்புதிது சோதிமிக்க/ நவ கவிதை’ என்பதில் அவருக்கு இலக்கியத்தின் நவீன வடிவங்கள் மீதிருந்த காதலைப் புரிந்துகொள்ள முடியும். மேற்கில் தோன்றிய சிறுகதை என்னும் நவீன வடிவத்தைத் தமிழுக்கு 1910இல் பாரதி அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘ஆற்றிலொரு பங்கு’ என்கிற தலைப்பிட்ட அந்தக் கதை, தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக்கு விதையானது (முதல் கதையாகச் சொல்லப்பட்டு வந்த வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ 1915இல் வெளிவந்தது). இன்று வார இதழ்களில் பின்பற்றப்படும் பல்சுவை கலந்த பத்தி எழுத்து வடிவத்தைத் ‘தராசு’ என்கிற தலைப்பில் தமிழில் பாரதி தொடங்கிவைத்துள்ளார். உதாரணமாக, ஒரே பத்தியில் இந்தியக் கலைப் பண்பாட்டு அறிஞர் ஆனந்த குமாரசாமி இந்தியச் சிற்பவியலுக்கு ஆற்றிவரும் பங்கு, சீனக் குடியரசு, காங்கிரஸ் மாநாடு, செய்யூரில் ஒரு 70 வயதுக் கிழவர், 16 வயதுச் சிறுமியை மணக்க இருந்த விஷயம் எனப் பலவற்றைப் பற்றிச் சுவைமிகு நடையில் சொல்லியிருக்கிறார்.

நவீனக் குறுநாவல்: ‘ஞானரதம்’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய உரைநடை ஒரு புதிய வடிவம்தான். நவீன குறுநாவல் என அதை அழைக்கலாம். திருவல்லிக்கேணி வீரராகவத் தெருவில் கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஒரு வீட்டின் திண்ணையில் இருக்கிறார் பாரதி. பின்மாலைப் பொழுதின் ஒளி அவரை ஈர்க்கிறது. குளியல் போட்டுவிட்டு, ஒரு குதிரை வண்டியில் ஏறி கடற்கரை ஓரமாக அடையாற்றுக்குப் போய் காளிதாஸனின் சகுந்தலையைப் படிக்க மனுஷனுக்கு ஆசை. ஆனால், அவரிடம் ரதம் இல்லையே? அதனால் அவர் ஞானமாகிய ரதத்தைக் கொண்டுவர சங்கல்பனிடம் (கற்பனை) உத்தரவிடுகிறார். பிறகு, ரதத்தில் ஏறிப் பல உலகங்களுக்குப் பயணம் போகிறார். பாரதி நடத்திய இந்த நினைவின் தேரோட்டம் தமிழுக்குப் புதிது. ‘நவதந்திரக் கதை’களையும் பாரதியின் இந்தப் புதுமைகளுள் ஒன்று எனலாம்.

நவ கவிதை: தாகூர், வால்ட் விட்மன், ஷெல்லி ஆகியோரின் கவிதைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் பாரதி. ஷெல்லிதாசன் என்கிற புனைபெயரில் பாரதி கவிதைகள் எழுதியிருக்கிறார் என்ற தகவல் உண்டு. ‘காட்சி’ கவிதையில் ‘இவ்வுலகம் இனிது..’ என்று பாரதி தொடங்கிவைத்த புதுக்கவிதைதான், இன்று தமிழில் உயிர்த்திருக்கும் கவிதை வடிவமாக இருக்கிறது. வால்ட் விட்மனின் ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ‘எதுகை, மோனை, தளை என ஒன்றுமே கிடையாது. எதுகை, மோனையில்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும்’ எனப் பாரதி குறிப்பிடுகிறார். கவிதை தன் மரபான எதுகை, மோனை, தளைகளைக் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரம் அடைவது அதன் வளர்ச்சிக்கு நல்லது; அதுதான் எதிர்காலமாக இருக்கும் என்று கருதியிருக்கிறார் என்கிற துணிபுக்கு நாம் வரலாம். சொல்லடுக்கில் கவிதையைக் காட்டக் கூடாது; பொருளில் வெளிப்படுத்த வேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஓர் ஆழ்ந்த ஓசையைக் கவிதை வெளிப்படுத்தினால் போதுமானது எனப் புதுக்கவிதைக்கான ஒரு முன்மாதிரி இலக்கணத்தையும் அவர் வனைந்திருக்கிறார்.

பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு பாரதி எழுத்தாளராகத் தன்னைத் திருத்தமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். மேற்குறிப்பிட்ட முயற்சிகளே இதற்கான சான்று. இந்த விதத்தில் பாரதியைத் ‘தமிழ் நவீன இலக்கியத்தின் தந்தை' எனத் தயக்கமின்றி அழைக்கலாம்.

- ஜெயகுமார், தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in