

“நான் படம் எடுப்பதே அரசியல் பேசத்தான்” என்று ஒரு படைப்பாளியாகத் தன்னுடைய நோக்கத்தையும் தன்னை இயக்கும்விசையையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டவர் இயக்குநர் பா.இரஞ்சித். அவர் இயக்கிய, தயாரித்த திரைப்படங்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து, அதை விவாதிப்பவையாக இருந்துள்ளன. அதே நேரம், படத்தில் பேசப்படும் அரசியல் சார்ந்தும் கலை நேர்த்தி சார்ந்தும் அவருடைய திரைப்படங்கள் விமர்சனங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளன. அவருடைய புதிய படைப்பான ‘நட்சத்திரம் நகர்கிறது’ம் இதற்கு விதிவிலக்கல்ல.
ரஞ்சித்தையும் அவருடைய திரைப்படங்களையும் வெறுக்கும் சாதி உணர்வாளர்கள், அவர் படங்களின் மீதான விமர்சனங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளக்கூடும். அதே நேரம், அவருடைய திரைப்படங்கள் மீதான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்களைக்கூட, ஆதிக்க சாதி உணர்விலிருந்து விடுபட முடியாதவர்கள் என்று வலிந்து முத்திரைகுத்தும் போக்கும் நிலவிவருகிறது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை விமர்சிப்பவர்கள் மீதும் இத்தகைய முத்திரை குத்தப்படுவதைப் பரவலாகச் சமூக ஊடகங்களில் காண முடிகிறது. படத்திலும் இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய இசை அல்லது பொதுவெளிச் செயல்பாடுகளுக்காக விமர்சிப்போர் குறித்து முதன்மைக் கதாபாத்திரமான ரெனே (துஷாரா விஜயன்) வெளிப்படுத்தும் கருத்துகளும் இதே போன்ற முத்திரை குத்தலாக இருப்பதை யதேச்சையானதாகக் கடந்துவிட முடியாது.
வாய்ப்பு மறுக்கும் உரையாடல்: இந்தப் படத்தில், ரெனேயை அவருடைய காதலனான இனியன் (காளிதாஸ் ஜெயராம்) சாதியைச் சொல்லி இழிவுபடுத்துகிறார். அதனால் அவர்கள் காதல் முறிகிறது. சாதியைக் குறிப்பிட்டுப் பட்டியலினப் பெண்ணைப் “புத்தி போகாதுல்ல” என்று சொல்பவராகவும் முற்போக்குச் சிந்தனைகளுடன் இருந்தாலும் அரைகுறை அரசியல் புரிதல் உடையவராகவும் காட்டப்படும் இனியன், “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும்” என்று ஃபேஸ்புக்கில் எழுதுகிறவர் என்று காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர் பி.எச்.டேனியலின் ‘ரெட் டீ’ (எரியும் பனிக்காடு) நாவலையோ அதற்குப் பின்னணியாக அமைந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அனுபவித்த கொடுமையையோ கேள்விப்பட்டிராதவராக காட்டப்பட்டிருக்கிறார். இனியன் இடதுசாரி அரசியல் தரப்பைச் சேர்ந்தவர் என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லைதான். ஆனால், வர்க்கம் என்ற சொல் இடதுசாரிகளுடன்தான் காலம்காலமாகத் தொடர்புபடுத்தப்பட்டுவந்துள்ளது. சாதி ஒழிப்புக்கு வர்க்க ஒழிப்பே அடிப்படை என்று பேசுவதும் இடதுசாரிகள்தான். அந்தப் பார்வையை விமர்சனத்துக்கு உட்படுத்த உரிமை உண்டு. ஆனால், வர்க்க ஏற்றத்தாழ்வைக் களைய வேண்டும் என்பதை முதன்மைப்படுத்தும் இடதுசாரிகள் தரப்பின் வாதங்களுக்குப் படத்தில் சிறிதளவுகூட இடமளிக்கப்படவில்லை.
‘காலா’ படத்தில் இடதுசாரி அடையாளம் கொண்ட லெனின் (மணிகண்டன்) கதாபாத்திரத்துக்கும் இதேபோல் தன் அரசியல் தரப்பை முன்வைப்பதற்கான வாய்ப்பே வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. இரஞ்சித் தன் படைப்புகளின் வழியாக உரையாடலைத் தொடங்க விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், மாற்றுக் கருத்தை வெளிப்படுத்த இடமளித்துவிட்டு, அதை மறுத்துப் பேசுவதுதானே நேர்மையான உரையாடல்?
எதிரியாக நிறுத்தப்படும் இடதுசாரிகள்: இடதுசாரி அரசியலைப் பின்பற்றுகிறவர்கள் அல்லது பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிறவர்களில் சாதி உணர்வாளர்கள், பிழையான அரசியல் புரிதலுடன் செயல்படுகிறவர்கள் யாருமே இல்லை என்று சொல்ல முடியாது. அதே நேரம், சமூகத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பரவியிருக்கும் இந்தப் பிரச்சினைகளை இடதுசாரிகள், கம்யூனிஸ ஆதரவாளர்களுக்கு மட்டுமே உரியதுபோல் அடையாளப்படுத்தி, அவர்களை எதிரியாக அல்லது தனித்து ஒதுக்கப்பட வேண்டியவர்களாகச் சித்தரிக்க வேண்டிய தேவை என்ன?
“நீங்க கம்யூனிஸ்ட்டா?” என்று ரெனேயிடம் அர்ஜுன் (கலையரசன்) கேட்க, “அம்பேத்கரைட்” என்கிறார் ரெனே. சமூகத்தில் நிகழும் தவறுகள் தொடங்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடியது வரையிலான வரலாறு தமிழகக் கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு. வெண்மணி தொடங்கி எத்தனையோ உதாரணங்களை இதற்குச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், படத்தில் அந்த வகையில் இல்லாமல் கம்யூனிஸத்தையும் அம்பேத்கரியத்தையும் எதிரெதிராக நிறுத்துவதைத் தவிர, இந்த உரையாடலுக்கு வேறெந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.
எல்லா விஷயங்களிலும் மிகவும்பிற்போக்கான கருத்துகள் கொண்டவராகவும் பெண்கள், தன்பாலீர்ப்பாளர்கள், திருநர்கள் ஆகியோரிடம் மது அருந்திவிட்டு, மோசமாக நடந்துகொள்கிறவராகவும் காண்பிக்கப்படும் அர்ஜுன் ரெனேயிடம் அடுத்த காட்சியிலேயே மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டுவிடுகிறார். அதன் பிறகு, அந்த நாடகக் குழுவில் அவர் தொடரலாம் என்று ரெனே முன்மொழிகிறார். நாடகக் குழுவின் தலைவரும் அதை ஏற்றுக்கொள்கிறார். இதில் அர்ஜுனால் இழிவுபடுத்தப்பட்ட பிறரின் கருத்து கேட்கப்படுவதே இல்லை. அரசியல் சரித்தன்மை என்பது ஒற்றைத் தருணத்தில் நிகழ்ந்துவிடுவதல்ல. அது ஒரு தொடர் செயல்பாடு என்று இந்த இடத்தில் அர்ஜுனிடம் சரியாகவே சொல்கிறார் ரெனே. ஆனால், அந்த வாய்ப்பு இனியனுக்குக் கடைசிவரை வழங்கப்படாமல் போவதற்கு என்ன காரணம்?
பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு: ரெனே, இனியன், அர்ஜுன் ஆகியோருடன் நாடகக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் தன்பாலீர்ப்பாளர்கள், திருநர்கள் ஆகியோரின் வழியே அவர்களையும் அவர்களுக்கு இடையேயான காதலையும் இயல்பாக்கம் செய்திருப்பதற்காக இந்தப் படத்தைப் பாராட்டலாம். ஆனால், படத்தின் மையக் கதாபாத்திரங்களும் அவர்களும் ஒரே நாடகக் குழுவிலிருந்து உரையாடிக்கொள்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன தொடர்பிருக்கிறது? படத்தின் மையக்கருவுடன் அவர்கள் எப்படி இணைந்திருக்கிறார்கள்? இந்தப் பிரச்சினைகளையும் சேர்த்துக்கொள்வோம் என்பதற்காகப் பேசியதுபோலத்தான் இருக்கிறது. இந்தப் பிரிவினரின் பிரச்சினைகளைப் பேசிய முதல் திரைப்படமும் இதுவல்ல. எல்லா தரப்புப் பிரதிநிதிகளும் நாடகக் குழுவில் இருப்பதுபோல் கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் நாடக வரலாற்றில், குறிப்பாக வீதி நாடக வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த நேரடி இடதுசாரி ஒருவர்கூட இந்த நாடகத்தில் இடம்பெறாதது யதேச்சையானதா?
சாதி ஆணவக் கொலைக்குத் தமது துணையைப் பறிகொடுத்த பெண்கள் சிலர், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பகிர்ந்துகொள்வதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சிகளில் பேசப்படும் கருத்துகள் மிக முக்கியமானவை. அதே நேரம் சாதிரீதியாக ஒடுக்கப்படுவோரைத் தமது அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று அரசியல்வாதிகள் மீது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை அவர்களில் ஒரு பெண் முன்வைக்கிறார். அரசியல் கட்சிகளுக்குச் சாதியக் கணக்குகளே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும் தமிழ்நாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருப்பதில், சாதியக் கொடுமைகளை தொடர்ந்து எதிர்ப்பதில் இடதுசாரி-திராவிட-தலித் அரசியல் கட்சிகள் மறுக்க முடியாத பங்காற்றியிருக்கின்றன.
உண்மை இப்படியிருக்க, அரசியல் கட்சிகள் மீது இப்படி ஒரு பொத்தாம்பொதுவான குற்றச்சாட்டை முன்வைக்கும் படைப்பாளியின் நோக்கம் என்ன? சாதிப் பிரச்சினையைச் சினிமா லாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள் என்னும் குரல் தங்களை நோக்கி எழுப்பப்படுவதற்கு வெகுநாட்கள் ஆகாது என்பதையும் திரைப்படப் படைப்பாளிகள் உணர்ந்து செயல்படுவது நல்லது. தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றை மதிப்பவர்கள், இன்றைய சிக்கலான நிலைமையை உள்வாங்கிக்கொண்டவர்கள் உண்மை எதிரிகளுக்கு எதிராகப் போராடுவார்களே தவிர, இல்லாத ஒரு எதிரியை வலிந்து கட்டமைக்க நிச்சயமாக முயலமாட்டார்கள்.
- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in