Published : 11 Sep 2022 11:05 AM
Last Updated : 11 Sep 2022 11:05 AM
தமிழறிஞர்களும் தமிழ்நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுமாய் 126 ஆளுமைகள் சுப்பிரமணிய பாரதி குறித்து எழுதிய, பேசிய கருத்துகளைத் திரட்டி 646 பக்கங்களில் ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ (பொருநை-பொதிகை-கரிசல், கதைசொல்லி, கலைஞன் பதிப்பகம் கூட்டு வெளியீடு) என்ற தலைப்பில் பெருந்தொகுப்பொன்றை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இவற்றில் பெரும்பாலானவை கிடைப்பதற்கு அரிதானவை. சில கட்டுரைகள், தமிழ்நாட்டுக்கு வெளியே வாராணசியிலும் நகுலன் வழியாகத் திருவனந்தபுரத்திலிருந்தும் தேடிச் சேகரிக்கப்பட்டவை. பாரதியின் 125ஆவது பிறந்தநாளில் இதே தலைப்பில் சிறிய அளவில் வெளியான இந்நூல், இடைப்பட்ட ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட புதிய கட்டுரைகளையும் சேர்த்து பாரதி நினைவு நூற்றாண்டுச் சிறப்பு வெளியீடாகப் பெருநூல் வடிவத்தைக் கண்டுள்ளது.
தலைவர்கள் பார்வையில்...
பாரதி குறித்து வ.உ.சி., ராஜாஜி, திரு.வி.க., எஸ்.சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், மு.கருணாநிதி, வைகோ, என்.சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன் என்று பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் தத்தம் நோக்கிலிருந்து பாரதியைக் கொண்டாடியிருக்கிறார்கள். பாரதியின் பாடல்களைப் போலவே, ‘வருத்தமின்றி பொருளைப் புலப்படுத்தும்’ அவரது சிறந்த உரைநடைப் பாணியையும் போற்றியுள்ளார் உ.வே.சா., பாரதியின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சியை மாணிக்கவாசகரோடும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரோடும் ஒப்பிட்டுப் பாநலம் பாராட்டியுள்ளார் ப.ஜீவானந்தம்.
தமிழ்நாட்டில் உப்புச் சத்தியா கிரகத்தைத் தலைமையேற்று நடத்திய ராஜாஜி, ‘தமிழர்களாகிய நாம் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் நமக்கு ஒரு சிறந்த இடம்பெற முடிந்ததற்குப் பாரதியாரே காரணமானவர்’ என்று விடுதலைக் கவியை நினைவுகூர்ந்துள்ளார். பாரதியின் பாடல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையொட்டி 1928இல் சட்டப்பேரவையில் பேசிய எஸ்.சத்தியமூர்த்தி, ‘இருக்கும் அத்தனை பாரதியார் பாடல் பிரதிகளையும் பறிமுதல் செய்துவிட்டாலுங்கூட தனியொரு தமிழ் மகனே உயிர் வாழும் அளவும் இப்பாடல்கள் தமிழினத்தின் விலைமதிக்கவொண்ணா பிதுரார்ஜிதச் செல்வமாக நிலைத்து நிற்கும்’ என்று முழக்கமிட்டுள்ளார்.
திராவிடக் கவி
தேசிய இயக்கங்களான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மட்டுமின்றி தென்னகத்தை மையமாகக் கொண்ட திராவிட இயக்கமும் பாரதியைப் போற்றியிருக்கிறது என்பதற்கான உதாரணம், ‘பாரதி பாதை’ என்ற தலைப்பிலான அண்ணாவின் கட்டுரை. ‘எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர் என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார்’ என்பது அண்ணாவின் துணிபு. தேசியக் கவிஞர் என்ற அடையாளத்தால் மறைக்கப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதி என்பது அவரது மதிப்பீடு.
பாரதியின் அத்வைதம் உள்ளிட்ட இன்ன பிற சார்புகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்கள் திராவிட இயக்கத்தில் இன்றளவும் தொடர்கின்றன. அதே நேரத்தில், பாரதிதாசனின் பார்வை வழியே குணம்நாடி பாரதியை அணுகும் போக்கே பிரதானமாக இருக்கிறது. 1985இல், சென்னை கிண்டியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்ற விழாவில் பேசிய மு.கருணாநிதி, பாரதிதாசனின் நினைவுக் குறிப்புகளிலிருந்து பாரதியின் புதுச்சேரி நாட்களை நினைவுகூர்ந்துள்ளார்: ‘பலரறிய புதுவை நகரத்தினுடைய நடுவீதியில் நின்று, முஸ்லிம்களுடைய கடையிலே தேநீரை வாங்கி அருந்தி, இந்துக்கள்-முஸ்லிம்கள் என்ற பேதம் இல்லை என்பதைச் செயல்மூலம் காட்ட அந்தக் காலத்திலேயே முயற்சி எடுத்துக்கொண்ட பெருமை பாரதிக்கு உண்டு’. முஸ்லிம்களுடைய தேநீர்க் கடையிலே இந்து என்று சொல்லப்படுகிற ஒருவர் தேநீர் அருந்துவதேகூட, மதவிரோதம் என்று கருதப்பட்ட சூழல் அது. அந்தச் சூழலை விரும்புபவர்களும்கூட பாரதியின் உருவப்படங்களை இன்றைக்கு கையிலேந்தி நிற்கிறார்கள். சமய நல்லிணக்கத்தைக் காண விரும்பிய பாரதியை வரலாற்றிலிருந்து மீண்டும் துலக்கியெடுத்தாக வேண்டும்.
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT