

தான் பயன்படுத்திய தொலைக்காட்சி ஒன்று, கைவிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் பத்திரமாக இருக்கிறது என்றும் அந்தத் தொலைக்காட்சி இன்றும் இயங்கும் தன்மையுடன் இருக்கிறது என்றும் அறிந்தால் ஒருவர் மனநிலை எப்படி இருக்கும்? இதே போன்றதொரு மனநிலையில்தான், அமெரிக்காவின் டென்னிஸ் விங்கோ என்ற விண்வெளி ஆராய்ச்சியாளரும் அவரது ஸ்கைகார்ப் குழுவினரும் இருக் கின்றனர். 36 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா அனுப்பிய ஐ.எஸ்.ஈ.ஈ.-3 விண்கலத்தை மீண்டும் பூமிக்குக் கொண்டுவரும் திட்டத்தில் இக்குழுவினர் இருக்கின்றனர்.
சூரியனிலிருந்து பூமியை நோக்கிவரும் வரும் சூரியக் காற்றை ஆய்வு செய்வதற்காக முதன்முதலாக, 1978-ல் அனுப்பப்பட்ட விண்கலம் அது. பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பிய அந்த விண்கலத்தின் செயல்பாட்டை, 1997-ல் நாஸா நிறுத்திவிட்டது. அதன் முக்கியமான பரிமாற்றக் கருவிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன. எனினும், தொலைதூரக் காட்டில் கொண்டுவிடப்பட்ட வீட்டுப்பூனை போல, எஜமானரின் கட்டளையை எதிர்பார்த்தபடி விண்வெளியில் சுற்றிவருகிறது அந்த விண்கலம். அதன் ரேடியோ கருவி இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.
அந்த விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு வருகிறது. அதாவது நிலவின் நிலப்பரப்புக்கு மேலே 30 மைல் தொலைவில் இந்த விண்கலம் வரவுள்ளது. அப்போது அந்த விண்கலத்தின் மீது நிலவின் ஈர்ப்புவிசை செலுத்தக்கூடிய இழுப்புவிசையின் உதவியுடன், நவீனத் தொழில்நுட்பம் கொண்ட விண்கலம் ஒன்றை வைத்து இதைப் பிடித்துவிடலாம் என்று ஸ்கைகார்ப் குழு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு இந்த விண்கலம் ஒரு அரிய காட்சிப்பொருளாக இருக்கும் என்று அந்தக் குழு கருதுகிறது. எனினும், “ஏன் இந்த வேண்டாத வேலை?” என்று நாஸா சலித்துக்கொண்டதாம். இதையடுத்து, உலகமெங்கும் உள்ள 2,200 ஆர்வலர்களிடம் ரூ. 96 லட்சம் நிதியுதவி பெற்று முழுமூச்சாகக் காரியத்தில் இறங்கியிருக்கிறது ஸ்கைகார்ப் குழு. அதேசமயம், அந்த விண்கலத்தைத் தொடர்புகொள்வதற்கான கட்டளைகள் எதுவுமே கைவசம் இல்லை. இருந்தபோதிலும் நவீனத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அந்த பழைய நண்பனை மீட்டுவிடலாம் என்று நம்புகிறது அக்குழு.