

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மிகயீல் கொர்பசேவ் கடந்த வாரம் மறைந்தார். அந்தச் செய்திக்கான எதிர்வினைகளைப் பார்க்கும்போது, இந்த உலகம் கிட்டத்தட்ட அவரை மறந்துவிட்டிருந்தது என்கிற உண்மை தெரியவருகிறது.
முந்தைய தலைமுறை அறிவுஜீவிகள் பலர் அஞ்சலிக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தார்கள். அவரது சொந்த நாடான ரஷ்யாவில்கூட, அவர் மீதான துக்கம் பெரிதாக வெளிப்பட்டிருக்கவில்லை.
சோவியத் ஒன்றியத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டார் என்கிற அளவிலும் வலதுசாரிகளுக்கு அவர் மிகவும் பிடித்தமானவர். சோஷலிச முகாமை அடகு வைத்துவிட்டார், அழித்துவிட்டார் என்கிற அளவில் இடதுசாரிகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டவர்.
சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களில் 1917 புரட்சிக்குப் பின் பிறந்தவர்களில் முதலும் கடைசியுமானவர் கொர்பசேவ். 1985இல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராகவும் பிறகு ஒன்றியத்தின் அரசுத் தலைவராகவும் கொர்பசேவ் பொறுப்பேற்றார்.
அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையிலான பனிப்போரில் சோவியத் முகாம் ஏற்கெனவே தள்ளாடிக்கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் படையினரால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தர முடியவில்லை. அமெரிக்காவில் ரொனால்டு ரீகனும் பிரிட்டனில் மார்கரெட் தாட்சரும் நவதாராளவாதப் பொருளாதாரத்தை முன்னெடுத்திருந்த நேரமும்கூட.
சோவியத் ஒன்றியம் உருவாக்கப்பட்டு மூன்றாவது தலைமுறை, அந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்புகளுக்கு வந்திருந்தது. லெனின்-ஸ்டாலின், குருசேவ்-பிரஷ்நேவ் காலங்கள் முடிவடைந்து கொண்டிருந்தன. ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மூத்த தலைவர்களின் தொடர் மரணங்களுக்குப் பிறகு கொர்பசேவ் தலைவரானார்.
பனிப்போரின் விளைவுகள்: இரண்டாம் உலகப் போருக்குப் பின் அறிவியல்-தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், தொழில் உற்பத்தி, தொடக்க காலக் கணினி அறிவியல் போன்ற துறைகளில் சோவியத்தின் வளர்ச்சி பிரம்மாண்டமானதாக இருந்தது; விண்ணுலகையும் ஆளத்தொடங்கியிருந்தார்கள்.
ஆனால், உள்நாட்டில் அடித்தளப் பொருளாதாரம் மிகவும் சிக்கலானதாகவும் சோவியத் வாழ்க்கைத் தரம் கவலைக்குரியதாகவும் இருந்தது. சோஷலிசக் கட்டுமானம் என்கிற வரலாற்றில் முற்றிலும் புதிய பரீட்சையை மேற்கொண்டிருந்த சோவியத் ஒன்றியத்தால், உலகெங்கும் பொருளாதாரச் சுரண்டலை நடத்திய அமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை.
அது சோவியத்தின் கஜானாவைக் காலிசெய்துகொண்டிருந்தது. சோவியத் முகாமிலிருந்து வெளியேறி அமெரிக்க பாணியைச் சீனா நெருங்கியது. பொருளாதாரத் தேக்கத்தாலும் ஆயுதப் போட்டிக்கான அதீதச் செலவினங்களாலும் சோவியத் தடுமாறியது. சோவியத் மத்தியத் திட்டமிடல் பொருளாதாரம், ஓரளவுக்கு மேல் செயல்பட மறுத்தது. அதிகாரக்குவிப்பும் மையப்படுத்தலும் அதன் வரம்பை எட்டியிருந்தன.
சோவியத்தின் யதார்த்தம் உறைத்தாலும் அதைப் பற்றி விமர்சிக்கவோ, மாற்றுக்களை முன்மொழியவோ யாருக்கும் துணிச்சலில்லை. ஏனென்றால், புரட்சிக்காலத்திலும் போர்க்காலத்திலும் நடைமுறையிலிருந்த கருத்துச் சுதந்திரக் கட்டுப்பாடு, நிரந்தரமான அரசியல் நடைமுறையாகவே சோவியத் நாட்டில் மாறியிருந்தது.
இந்தத் தேக்கநிலைக்கும் சிறைவாசத்துக்கும் முடிவுகட்டுவதற்கான முயற்சியை எடுத்தார் கொர்பசேவ். அவர் செய்த நல்ல காரியமும் அதுதான், சோவியத் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் அவரை வீசியெறிந்த தவறான காரியமும் அதுதான்.
பெரஸ்ட்ரொய்கா-கிளாஸ்னாஸ்ட்: பெரஸ்ட்ரொய்கா (பொருளாதாரச் சீர்திருத்தம்), கிளாஸ்னாஸ்ட் (கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டு முயற்சி) என்கிற இரண்டும் கொர்பசேவால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவர் கொண்டுவந்த நோக்கத்துக்கு நேரெதிராகவே அவை முடிந்தன.
அவர் சோவியத் பொருளாதாரத்தில் நவீன உற்பத்தி வடிவங்களையும் சந்தைப் பொருளாதாரத்தின் நெகிழ்ச்சியையும் அறிமுகப்படுத்த விரும்பினார். அவர்களது சிந்தாந்தப் பங்காளியான சீனா, அதை ஏற்கெனவே முயன்றுகொண்டிருந்தது. அந்த நெகிழ்ச்சியால் உருவான இடத்தை அமெரிக்காவும் அதனோடு தொடர்பிலிருந்த உள்நாட்டு வருங்கால முதலாளிகளும் சட்டென்று பிடுங்கிக்கொண்டனர்.
கிளாஸ்னாஸ்ட் மூலமாக அவர் உருவாக்கிய வெளிப்படைத்தன்மை, அவரது அரசியல் எதிரிகளான போரீஸ் யெல்த்சின் போன்றோராலேயே மிகவும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் கிழக்கு, மத்திய ஐரோப்பாவிலிருந்த சோஷலிச நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சிகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. கிழக்கு, மேற்கு ஜெர்மனியைப் பிரித்த பெர்லின் சுவர் 1989இல் தகர்க்கப்பட்டது. போலந்தில் சாலிடாரிட்டி அமைப்பின் ஆட்சி ஏற்பட்டது.
சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளில் உள்ளூர் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. சோவியத் ஒன்றியத்துக்குள் இருந்த பால்டிக் குடியரசுகள் கிட்டத்தட்ட பிரிந்துபோய்விட்டன. பல மத்திய ஆசிய, காகசஸ் குடியரசுகளும் பிரிந்துபோக விரும்பின.
சோவியத் ஒன்றியத்தைக் கொர்பசேவ் பலிகொடுத்துவிட்டார், கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை அவர் பலவீனப்படுத்திவிட்டார் என்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சிலர் 1991 ஆகஸ்டில் கொர்பசேவுக்கு எதிராக மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோற்றுப்போனது.
ஆனால், கொர்பசேவும் தோற்றுப்போனார். அந்தக் கிளர்ச்சியின் விளைவால் ஆட்சி போரீஸ் யெல்த்சினின் கைக்கு வந்தது. அவர் சோவியத் ஒன்றியத்துக்கு அதிகாரபூர்வமாக முற்றுப்புள்ளி வைத்து, செங்கொடியைக் கிரெம்ளினிலிருந்து இறக்கிவிட்டார். சோவியத் ஒன்றியம் வழக்கமான ஒரு சாம்ராஜ்யமல்ல.
தனி இறையாண்மை கொண்ட தேசங்களின் கூட்டமைப்பாக எந்தப் பேரரசும் இதைப் போல உருவாக்கப்பட்டிருக்கவுமில்லை. மேகங்கள் கலைவதைப் போல் எந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியும், இவ்வளவு அமைதியாக நடந்ததுமில்லை. ஒப்பீட்டளவில் இந்த மாற்றத்துக்கு கொர்பசேவும் ஒரு காரணம்.
அவர் செய்த தவறுகள் குறைவுதான் என்றாலும், பல ஆண்டுகாலமாகச் செய்துவந்த தவறுகளின் பலனையே அவர் அறுவடை செய்தார். அந்த நாட்களில் நாளொரு வீழ்ச்சியும் பொழுதொரு துரோகமுமாகவே வாழ்ந்துகொண்டிருந்த கொர்பசேவ், அவற்றுக்குப் பிறகு உயிர் பிழைத்திருந்ததுகூட அதிசயம்தான்.
புறக்காரணியான அமெரிக்கா: சீனாவில் டெங் ஷாவ்பிங் மேற்கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வெற்றிபெற்றதைப் போல கொர்பசேவின் பெரஸ்ட்ரொய்கா ஏன் வெற்றிபெறவில்லை? சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொண்டே, பொருளாதாரச் சீர்திருத்தத்தை மேற்கொண்டது.
கொர்பசேவ் ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்ற முயன்றார். எனவேதான் அவரால் ஒன்றியத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது. சீனாவில் டெங்கின் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால்தான் மாவோவின் மறைவுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சியே தப்பிப் பிழைக்க முடிந்தது.
டெங்குக்குக் கட்சியிலும் வெளியிலும் ஆதரவுத்தளம் இருந்தது. சீனாவில் சீர்திருத்தம் கீழ்மட்டத்திலிருந்து தொடங்கியது. சோவியத்தில் எல்லா மாற்றங்களும் வழக்கம்போல மேலிருந்து மட்டுமே வந்ததால் கொர்பசேவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும், கொர்பசேவின் தோல்விகளுக்கும் சோவியத் வீழ்ச்சிக்கும் மிக முக்கியப் புறக்காரணியாக இருந்தது அமெரிக்காதான். அந்தக் காரணியைப் பார்க்காமல் கொர்பசேவை மட்டும் குற்றம்சாட்டிக்கொண்டிருப்பதில் பலனில்லை.
சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, ஓர் தாராளவாத ஜனநாயகக் குடியரசாக ரஷ்யா திகழ வேண்டும் என கொர்பசேவ் நினைத்தது நடக்கவில்லை. யெல்த்சின் காலத்தில் நாட்டின் பொருளாதார வளங்கள் எல்லாம் சில தனிப்பட்ட முதலாளிகளின் கைகளுக்குள் சென்றன.
புடினின் காலத்தில் இப்போது பழைய ரஷ்யப் பேரரசு மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. சோவியத் வீழ்ச்சிக்காகக் கொர்பசேவை மன்னிக்கவே தயாராக இல்லாதவர் புடின். இன்று கொர்பசேவின் மறைவுக்கு அரசாங்க நல்லடக்கத்தைக்கூட புடின் மறுத்துவிட்டார்.
கொர்பசேவ் ரஷ்யாவில் ஜனநாயக அரசியலைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கிய ‘நொவாயா கெசட்டா’ பத்திரிகையைக்கூடத் தன் கால்களில்போட்டு மிதித்துவைத்திருக்கிறார் புடின். கொர்பசேவோ ரஷ்ய மக்களோ எதிர்பார்த்தது ஜனநாயகத்தை; அவர்களுக்கு இன்று கிடைத்திருப்பதோ ஒரு ‘பயங்கரவான் பீட்டரின்’ ஆட்சி. கொர்பசேவின் ஆத்மா சாந்தி அடையப்போவதில்லை.
- ஆழி செந்தில்நாதன், எழுத்தாளர்