

“நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையில் மிகவும் முக்கியமான அங்கம் மக்களவைத்தலைவர் பதவி. அவர் உருவாக்கும் நியதிகளும் ஏற்படுத்தும் மரபுகளும்தான் அந்த நாடாளுமன்றத்தின் குரலாகவும் உணர்வாகவும் தரமாகவும் எதிரொலிக்கும்.
இந்திய அரசமைப்பு உருவாக்கப் படுவதற்கான அரசமைப்பு நிர்ணய அவைக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத்திய சட்டமன்றத்தின் அவைத் தலைவராகப் பதவிவகித்த வித்தல்பாய் படேல் போற்றத்தக்க அப்படியொரு பங்கை ஆற்றினார்.
அவர் செய்த மிகப் பெரிய சேவை, அரசின் நிர்வாக அமைப்பு வேறு - சட்டமியற்றும் ஜனநாயக அமைப்பு வேறு என்பதைத் தனது ஆணை மூலம் பகுத்தது.
பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியில்தான் நாடு அப்போதும் இருந்தது என்றாலும், தனது பதவிக்குரிய செல்வாக்குடன் அவர் ஏற்படுத்திய கம்பீரமான முன்னுதாரணங்கள் பிற்காலத்தில் பதவி வகிப்பவர்களுக்கு மிகச் சிறந்த பாடங்களாகத் திகழ்கின்றன” என்று நினைவுகூர்கிறார் சோஷலிஸ்ட் தலைவரான மது தண்டவதே.
வழிகாட்டிய முன்னுதாரணம்
மது தண்டவதே நினைவுகூர்ந்த ஓர் நிகழ்வு: பகத் சிங்கும் அவருடைய தோழர்களும் தேசிய சட்டப்பேரவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தனர். தேசிய சட்டப்பேரவை (நாடாளுமன்றம்) உறுப்பினர் எவரையும் தாக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.
நாடாளுமன்ற அமைப்பையே சீர்குலைக்கும் வகையில் இயற்றப்பட்ட கொடூரமான ‘பொது பாதுகாப்பு மசோதா’ மீது விவாதம் தொடங்கவிருந்த சமயம், மக்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கும் விதமாக அவையின் மையப் பகுதி நோக்கி வெடிகுண்டை வீசிவிட்டு அகன்றனர். உடனே அவை ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த நாள் அவை கூடியது. பார்வையாளர் மாடத்தை, அவைத் தலைவர் வித்தல்பாய் படேல் பார்த்தார். சீருடை அணிந்த ஆங்கிலேயே காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கே அமர்ந்திருந்தார். “அரசு நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த இந்த மனிதர் எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் அவையில் வந்து உட்கார்ந்திருக்கிறார்?” என்று வித்தல்பாய் கர்ஜித்தார்.
அப்போது உள்துறைக்குப் பொறுப்பாக இருந்த உறுப்பினர், “ஐயா அவர் என்னுடைய அனுமதியின்பேரில்தான் அங்கிருக்கிறார்” என்றார். “நாவை அடக்கிப் பேசுங்கள், இல்லாவிட்டால் உங்களை இந்த அவையை விட்டே வெளியேற்ற வேண்டியிருக்கும்” என்று சற்றும் சூடு குறையாமல் சாடினார் படேல். உள்துறை அமைச்சர் உடனே அமர்ந்துவிட்டார். அந்த அதிகாரி அவசரஅவசரமாகப் பேரவையிலிருந்து வெளியேறியவர், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் வரவேயில்லை!
பொறுப்பை உணர்த்தியவர்
பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்த பி.ஜி. மவ்லாங்கர் குறித்து நினைவுகூர்ந்தார் தண்டவதே. ஆளுங்கட்சிக்காரர்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரள்பவரும் அல்ல, எதிர்க்கட்சிகளின் கூச்சல் – அமளிகளுக்கு அரண்டு போகிறவரும் அல்ல அவர்.
உயர் அதிகாரத்தில் இருப்பவர்களிட மிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். ஒரு முறை பிரதமர் நேரு, மவ்லாங்கருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார். “உங்களுடன் பேசி முடிவுசெய்ய வேண்டிய அவசர வேலை இருக்கிறது, உங்களால் என்னுடைய அறைக்கு வர முடியுமா?” என்று மிகவும் வினயமாகக் கேட்டிருந்தார். அதே சீட்டில் மவ்லாங்கர் தன்னுடைய கையெழுத்தில் இப்படி பதில் எழுதி அனுப்பினார்: “நாடாளுமன்ற நியதிகள், நடைமுறைகளின்படி அவைத் தலைவர் பதவி வகிப்பவர் யாருடைய அறைக்கும் அலுவலகத்துக்கும் ஆலோசனைக்காகச் செல்வதில்லை.
நீங்கள் குறிப்பிடும் வேலை மிகவும் அவசரமானது என்றால், நீங்கள் என் அறைக்கு வரலாம்” என்று அதில் குறிப்பிட்டார். அதே சீட்டில் நேரு மீண்டும் பதில் குறிப்பு எழுதினார். “கவனப்பிசகாக மிகப்பெரிய அபத்தமான காரியத்தைச் செய்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இதோ நானே உங்களுடைய அறைக்கு வருகிறேன்” என்று அதில் எழுதினார் நேரு.
மவ்லாங்கரின் பதவிக் காலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்து மகாசபை உறுப்பினர் என்.சி. சட்டர்ஜி தொடர்பாக ஒரு சம்பவம் நடந்தது. (பின்னாளில் மக்களவைத் தலைவராகப் பதவி வகித்த மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜியின் தந்தைதான் என்.சி. சட்டர்ஜி). சிறப்பு பதிவுத் திருமணங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பாக அன்றைய மதராஸ் மாநகரத்தில் சட்டர்ஜி ஒரு கண்டனக் கூட்டத்தில் பேசினார்.
“நாலைந்து விடலைப் பிள்ளைகள் சேர்ந்து அந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டார்கள்” என்று சட்டர்ஜி குறிப்பிட்டார். உடனே மாநிலங்களவையில் சட்டர்ஜிக்கு எதிராக உரிமைப் பிரச்சினைக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு சட்டர்ஜிக்கு, மாநிலங்களவை செயலர் நோட்டீஸ் அனுப்பினார்.
சட்டர்ஜிக்கு நாடாளுமன்ற விதிகள் அனைத்தும் அத்துப்படி. மக்களவை உறுப்பினரான தனக்கு அப்படியொரு நோட்டீஸை அளித்ததற்காக மாநிலங்களவை செயலர் மீதே உரிமைமீறல் பிரச்சினை எழுப்பி, பதில் நோட்டீஸ் அனுப்பிவிட்டார் சட்டர்ஜி. சட்டர்ஜியின் இந்த நோட்டீஸ் குறித்து மக்களவையில் அறிவித்தார் மவ்லாங்கர். அப்போது பிரதமர் நேரு கோபத்தில் கொந்தளித்தார்.
“மாநிலங்களவைக்கு எதிராகவே உரிமைப் பிரச்சினை கொண்டுவரும் அளவுக்கு அவருக்கு (சட்டர்ஜி) நெஞ்சுத்துணிவும் அகந்தையும் இருக்கிறது, அவருடைய உரிமைப் பிரச்சினைத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் அனுமதிக்கக் கூடாது” என்று எதிர்த்தார் நேரு. மவ்லாங்கர் உடனே எழுந்தார், “மாண்புமிகு பிரதமர் அவர்களே, இருக்கையில் அமருங்கள். மக்களவைக்கு நான் தலைவராக இருக்கும்வரை, இன்னொரு அவையின் விசாரணை வரம்புக்கு என்னுடைய அவை உறுப்பினர்களை நான் ஒப்புக்கொடுக்க மாட்டேன்” என்று உறுதிபட அறிவித்தார்.
தண்டவதே மீது குற்றச்சாட்டு
பல்ராம் ஜாக்கர் மக்களவைத் தலைவராக இருந்தபோது இப்படியொரு சம்பவத்தில் தானே பலியாகவிருந்ததை மது தண்டவதே நினைவுகூர்ந்தார். மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த அப்துல் ரஹ்மான் அந்துலே தொடங்கிய ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு விவாதம் நடைபெற்றது.
பிறகு பேரவையின் உரிமையை மீறிவிட்டதாகக் கூறி, என் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டு மக்களவைத் தலைவர் பல்ராம் ஜாக்கருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் அந்த நோட்டீஸ் மீது அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு நாள் நானே அவையில் அதைப் பற்றிப் பேசினேன்.
மக்களவைத் தலைவர் அவர்களே, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினை ஓராண்டாக உங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. இந்த மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்னதாக - அல்லது என்னுடைய ஆயுள் முடிவதற்கு முன்னதாக, இதில் எது முதலோ அந்தக் காலத்துக்குள்ளாக இதன் மீது ஒரு முடிவெடுத்துவிடுங்கள்” என்றேன். அடுத்த நாளே அந்தத் தீர்மானத்தை ஏற்பதில்லை என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார்.
ஊழலுக்கு ஆதாரம்
நாடாளுமன்ற நெறிமுறைகளும் ஜனநாயகமும் காப்பாற்றப்பட வேண்டும் என்று துடிப்பாகச் செயல்பட்ட உறுப்பினர்கள் குறித்து ஏதேனும் கூற முடியுமா என்று கேட்டதற்கு மது தண்டவதே அளித்த பதில்: 1957இல் தொழிலதிபர் முந்த்ரா மீதான ஊழல் புகார் குறித்து மக்களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டது. பெரோஸ் காந்தி (இந்திரா காந்தியின் கணவர் – ராஜீவ் காந்தியின் தந்தை) அதை எழுப்பினார்.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு மோசடியாகச்சில பங்குகளை முந்த்ரா விற்றது தொடர்பானது அந்த ஊழல். பத்திரிகைகளில் எழுதப்படுவதையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு அவையில் பேசக் கூடாது என்று சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். அப்போது மக்களவைத் தலைவராக அனந்தசயனம் பதவிவகித்தார்.
“முதன்மை நிதிச் செயலருக்கும் நிதியமைச்சருக்கும் இடையில் நடந்த ரகசியக் கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான விவரங்கள் என் சட்டைப்பையில் இருக்கின்றன, அவற்றை அவையில் தாக்கல்செய்ய மக்களவைத் தலைவரின் அனுமதி கிடைக்குமா” என்று பெரோஸ் காந்தி கேட்டார்.
அதையும் பல உறுப்பினர்கள் ஆட்சேபித்தனர். ஆனால் அனந்தசயனம் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னுதாரணத் தீர்ப்பை அளித்தார். பிற்காலத்தில் நானும் ஜோதிர்மய பாசு (மார்க்சிஸ்ட் தலைவர்) உள்பட பலர் அதைப் பயன்படுத்திக் கொண்டோம்.
“அவையில் தான் தாக்கல் செய்யவிருக்கும் ரகசியத் தகவல் அல்லது ஆவணங்களுக்கு அவை உறுப்பினர் முழுப் பொறுப்பு எடுத்துக்கொள்ளத் தயார் என்ற நிலையில், அதை நான் அனுமதிப்பேன்” என்றார். அதன் பிறகு பெரோஸ் காந்தி அந்த விவரங்களை அவையில் தாக்கல் செய்தார்.
அதன் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் தொழிலதிபர் முந்த்ரா கைது செய்யப்பட்டார். டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியை விட்டு விலகினார். இவற்றை மது தண்டவதே நினைவுகூர்ந்தார்.
1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து’ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்
தமிழில்: வ. ரங்காசாரி