

உலகின் புகழ்பெற்ற மேடைகளில் சிதார் இசையை அறிமுகப்படுத்திய பெருமைக்கு உரியவர் பண்டிட் ரவிஷங்கர். மேற்கத்திய நடன பாணியான ‘பாலே’யில் புகழ்பெற்றிருந்த உதயஷங்கர், இவருடைய அண்ணன். சிறு வயதிலேயே உதய்யுடன் மேற்கத்திய நாடுகளில் தங்கியிருந்ததில், மேற்கத்திய இசை வடிவத்தின் எல்லா அம்சங்களும் ரவிஷங்கருக்கு வசமாகியிருந்தன.
வாராணசியில் வசதியான குடும்பத்தில் பிறந்த ரவிஷங்கர், இசை மேதை உஸ்தாத் அலாவுதீன் கானிடம் இசைப் பயிற்சி பெற்றார். சரோட் வாத்தியத்தின் மீது பிரியமாக இருந்த அவரை ‘சிதார் வாத்தியத்தில் பயிற்சி எடு’ என்று மடைமாற்றியவர் அலாவுதீன். சிதார் வாத்தியத்தில் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டு, இந்துஸ்தானி இசையின் இனிமையை ரவி உலகெங்கும் பரப்பினார். முதல் நிகழ்ச்சியே குருவின் மகனும் சரோட் வாத்தியக் கலைஞருமான அலி அக்பர்கானுடன் ஜுகல் பந்தியாக அமைந்தது.
1949லிருந்து சில ஆண்டுகளுக்கு அகில இந்திய வானொலியில் ஷங்கர் பணிபுரிந்தபோது, இந்திய இசைக்கு முக்கியத்துவம் தரும் நிகழ்ச்சிகள் வானொலியில் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தார். சுதந்திர நாள், குடியரசு தின அணிவகுப்புகளின் போது ராணுவ இசைக் குழுவினர் வாசிக்கும் `ஸாரே ஜகான் ஸே அச்சா' பாடலுக்கு தற்போது புழக்கத்திலிருக்கும் துள்ளலான மெட்டை அளித்தவர் ரவிஷங்கர்தான்.
இசை எல்லைகளைக் கடந்தது என்பதைத் தம்முடைய கலைப் பயணத்தின் கொள்கையாகவே ரவிஷங்கர் வைத்திருந்தார். சாஸ்திரிய இசையில் பழக்கம் இருப்பவர்கள் மட்டுமே ரசித்துவந்த இசையை எளிமைப்படுத்தி எல்லாருக்குமான கலையாக சிதார் இசையை மாற்றியது அவரின் அளப்பரிய பணி.
அமெரிக்காவின் புகழ்பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவின் கிடாரிஸ்ட் ஜார்ஜ் ஹாரிஸன், வயலின் மேதை யெஹுதி மெனுஹின் ஆகியோரோடு இணைந்து ரவிஷங்கர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றன.
இந்த கலப்பிசை (Fusion) நிகழ்ச்சிகளில் சிதார் மூலம் ரவிஷங்கர் செலுத்திய தாக்கத்தின் பயனாக, மேற்குலகக் கலப்பிசை நிகழ்ச்சிகளுக்கு இந்திய வாத்தியங்களையும் கலைஞர்களையும் சேர்த்துக்கொள்வதற்கான புதிய வாசல் திறந்தது. யெஹுதி மெனுஹினுடன் இணைந்து இவர் நடத்திய `கிழக்கைச் சந்திக்கும் மேற்கு’ எனும் இசை நிகழ்ச்சிக்காக பெருமைமிகு கிராமி விருதையும் ரவிஷங்கர் பெற்றிருக்கிறார்.