

கனடாவில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ்நாடு திரும்பியுள்ள சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் சார்ந்து பெரும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் தோற்றுவித்துள்ளன.
அவற்றில் முக்கியமானது, தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் விரைவில் நேரலையாக ஒளிபரப்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்திருப்பது. சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது திமுகவின் நீண்ட காலக் கோரிக்கை. ஆட்சிக்கு வந்தால், நேரலையில் சட்டமன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் திமுக தெரிவித்திருந்தது.
எனவே, கோரிக்கையையும் வாக்குறுதியையும் ஒருசேர நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உண்டு. அதன் முதற்கட்டமாக, ஏற்கெனவே சட்டமன்றக் கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், அனைத்து நிகழ்ச்சிகளும் விரைவில் ஒளிபரப்பாக வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பு.
நூற்றாண்டு வரலாறு கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தின் இதுவரையிலுமான நடவடிக்கைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பணிகள் தற்போது நடைபெற்றுவருவதாகவும் பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், சட்டப்பேரவை இணையதளத்தின் மின்னணு நூலகப் பக்கம் இன்னும் வடிவமைப்பு நிலையில்தான் உள்ளது.
விரைவில், அப்பணிகள் முழுமையடைய வேண்டும். ஒப்பீட்டளவில், தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் அடைந்திருக்கும் மேம்பாட்டுக்குத் தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.
வரலாறு, பொருளாதாரம், அரசியல், சமூகவியல் என்று பல்வேறு துறைகளில் தமிழகத்தின் மேம்பாடு குறித்து ஆய்வுசெய்பவர்களுக்குத் தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள் எளிதில் கிடைக்கப்பெறுவது என்பது ஆராய்ச்சித் துறைக்குப் பெரும் ஊக்கமாக அமையும்.
சட்டமன்ற நடவடிக்கைகள் மட்டுமின்றி அரசாணைகள், துறைகள் சார்ந்த ஆய்வறிக்கைகள், சுற்றறிக்கைகள், மக்கள்தொடர்புத் துறையின் மாதாந்திர வெளியீடுகள் என அனைத்தும் இணையம்வழி கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். அருகமை மாநிலமான கேரளத்தில் செய்தி, மக்கள்தொடர்புத் துறையின் ‘கேரளா காலிங்’, ‘சமகாலிக ஜனபதம்’ உள்ளிட்ட அனைத்துப் பத்திரிகைகளும் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன.
தமிழ்நாட்டிலும் அத்தகைய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலகத்தில், ‘தமிழரசு’ இதழ்கள் வெளிவரத் தொடங்கிய 1970 முதல் 2010 வரையில் பதிவேற்றப்பட்டிருப்பது ஆய்வாளர்களுக்குப் பெரும் களஞ்சியமாக அமைந்துள்ளது. சமீபத்திய இதழ்களும் பதிவேற்றப்பட வேண்டும்.
அரசாணைகளைப் பொறுத்தவரையில், பள்ளிக் கல்வித் துறை, அறநிலையத் துறை ஆகியவற்றைப் போல மற்ற துறைகளின் அரசாணைகளும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகளைக் குறித்து குடிமக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு, மக்களாட்சியைப் பலப்படுத்தும். அரசு முன்னெடுக்கும் கருத்தியலுக்கும்கூட அது வலிமை சேர்க்கும்.