

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால், காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆண்டின் பெரும்பகுதி வற்றிய நிலையில் கிடக்கும் கொள்ளிடம், கடந்த சில மாதங்களாகக் கரைபுரண்டோடிக் கொண்டிருக்கிறது. ஜூலை 17, ஆகஸ்ட் 2, 28 ஆகிய தேதிகளில் வெள்ளப்பெருக்கைச் சமாளிக்கும் வகையில் கொள்ளிடத்தின் மதகுக் கதவுகள் திறக்கப்பட்டன.
கொள்ளிடம் தவிர்த்து, மற்ற ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீர் நேரடிப் பாசனத்துக்கு உதவுகிறது. கொள்ளிடம் பெருவெள்ளத்தைத் தாங்குவதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் பாசனப் பரப்பு குறைவானதுதான். அதில் விடப்படும் நீர், பெருமளவு கடலுக்கே போய்ச் சேர்கிறது.
நதிகள் கடலில் கலப்பதெல்லாம் வீண் என்று எப்போதும் சொல்ல முடியாது. கடலுக்கும் நன்னீர் தேவை. அது கடலின் உப்புத்தன்மையை மட்டுப்படுத்தும். கடலின்தன்மை கெட்டால் உருவாகும் விளைவுகளை நாடு தாங்காது. அதே நேரம், கழனிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ள தண்ணீரும் கடலில் அதிகளவில் கலக்கிறது.
பாசனப் பாரம்பரியம்: தமிழ்நாட்டில் 33 ஆற்றுப்படுகைகளும், 55 நீர்த்தேக்கங்களும், 39,000 ஏரிகளும், 17 லட்சம் கிணறுகளும், 3,633 குளங்களும் அமைந்துள்ளன. காவிரிப் படுகையில் மட்டும் 36 ஆறுகளும், 29,881 வாய்க்கால்களும் உள்ளன. இவை தவிர, வானம் பார்த்த ஏரிகளும் குளங்களும் ஊருணிகளும் நிரம்ப உள்ளன.
மழைக் காலத்தில் மட்டுமல்ல, பெருக்கெடுத்தோடும் வெள்ளங்களின்போதுகூட இவை நிரம்புவதில்லை. மன்னர் கால ஆட்சியின் பாசனப் பாரம்பரியத்தைப் பின்னர் வந்த அரசுகள் ஏன் பின்பற்றுவதில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
பாசனத்துக்குக் குளம், குடிநீருக்கு ஊருணி, ஆலயத்துக்குக் கோயில்குளம் என்ற முறை முன்பு இருந்துள்ளது. மழைநீரை ஏரி, குளம், குட்டை, கயம், மடு, வாவி, கிடங்கு, தடாகம், பொய்கை, ஊருணி என்ற பெயரிலான பல்வேறு நீர்நிலைகளில் சேமித்துள்ளனர். துணிகளை வெளுக்கவும் கால்நடைகளின் குடிநீருக்கும் ஆண்டு முழுவதும் நீர்நிலைகளில் தண்ணீர் மின்னியது.
பாசன மதகுகளின் எண்ணிக்கை, குளங்களின் கொள்ளளவு, மதகில் வெளியேறும் தண்ணீரின் அளவு, பாசன வயலின் பரப்பு, மண் வகை என இவை அனைத்தைப் பற்றியும் துல்லியமாகக் கணக்கிட்டு, மன்னராட்சிக் காலத்தில் நீர்ப் பாசனத்தைத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து மடைகளையும் திறந்தால் குளத்திலிருந்து எவ்வளவு நீர் வெளியேறும், ஆயக்கட்டு முழுமைக்கும் எத்தனை நாழிகைக்குள் நீர் பாயும் என்ற கணிதம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கணக்கதிகாரம் என்ற நீர்வழிச் சூத்திரத்தை அவர்கள் பின்பற்றி உள்ளனர்.
கடைமடைக்கே முன்னுரிமை: 2,100 ஆண்டுகளுக்கு முன்பே ஏரிகளுக்கு மதகு அமைக்கும் தொழில்நுட்பம் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் மதகு மூலமான பாசன முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பழந்தமிழகத்தில் சங்கிலித் தொடர் ஏரிகள் என்ற பாசன முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதில் குளங்கள் சங்கிலித் தொடர்களாக அமைந்திருக்கும். கடைசிக் குளம் கோயில் குளமாக இருக்கும். முதலில் அது நிரப்பப்பட்டு, அந்தத் தண்ணீரில் கோயிலின் தெய்வத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு கடைசிக் குளத்தில் தண்ணீர் நிரப்பிய பிறகு அங்கிருந்து தலைமடை நோக்கி ஒவ்வொரு குளமாக அனைத்திலும் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாயம் நடைபெற்றுள்ளது.
குழித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு (பொ.ஆ. (கி.பி.) 1117) கீழமைப் பாசனதாரர்களுக்கே முதலில் முன்னுரிமை தர வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. இதனைக் ‘காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ எனக் கூறுகின்றனர்.
பலமுறை திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்பட்ட பிறகே வெள்ளக் காலங்களில் தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேர்ந்தது. மதராஸ் முறை சாகுபடி என்ற பெயரில் இந்தக் காவிரிப் பாசன முறையானது ஐ.நா. சபை உள்பட பல அமைப்புகளால் புகழப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நீர்நிர்வாகமோ கவலையைத் தருகிறது.
காவிரிப் படுகை காலந்தோறும் வெள்ளத்தைச் சந்தித்துவருகிறது. 1681இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 10,000 பேர் மாண்டுபோயினர். 3,000 முதல் 4,000 பேர் வரை ஆற்றங்கரைகளில் இறந்துகிடந்ததாக ஜெரே, லசுயெனான் சுவாமி ஆகிய பாதிரியார்கள் பதிவுசெய்துள்ளனர். குழிமாத்தூர், கடம்பங்குடி, பூண்டி, மைக்கேல்பட்டி, விஷ்ணம்பேட்டை, பவனமங்களம், அன்பில், கொன்னைக்குடி, விரகாலூர், கூத்தூர், புதகிரி, மகாராஜபுரம் போன்ற கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் வெள்ளத்தில் மூழ்கின.
பொ.ஆ. 10ஆம் நூற்றாண்டில் காவிரி வெள்ளத்தால் உறையூரின் ஒரு பகுதி சுவடே தெரியாமல் மூழ்கியது. அல்லூர் கிராமத்தில் உள்ள கல்வெட்டின்படி வெள்ளத்தினால் நஞ்சை நிலங்கள் யாவும் புஞ்சை நிலங்களாக மாறி 7 ஆண்டுகள் வாய்க்காலின்றிச் சாகுபடி நடக்காமல் பாழ்பட்டுள்ளன.
முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்திலும், விக்ரம சோழனின் ஆட்சியிலும் (பொ.ஆ. 1118-1135) பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உறையூரின் அழிவு பற்றி வடஆர்க்காடு மாவட்டம், திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருச்சிராப்பள்ளி, திருவரங்கம், திருவானைக்காவல் ஆகிய ஊர்களின் வெள்ளப் பாதிப்பு பற்றி விஜயநகர மன்னர் சதாசிவ ராயரின் (பொ.ஆ 1545) கல்வெட்டு மொழிகிறது.
பொ.ஆ. 1677, 1681 ஆகிய காலங்களில் வெள்ளம் மக்கள் வாழ்வை விழுங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
1924இல் வினாடிக்கு 4½ லட்சம் கனஅடியும், 1977இல் 3½ லட்சம் கனஅடியும் தண்ணீர் சென்றபோதுகூட பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.
ஆனால், அண்மையில் ஒரு மழை வெள்ளத்தில் முக்கொம்புப் பாலம் உடைந்தது. காரணம், மணல்-கனிம வளங்கள் கொள்ளை போனதால் ஏற்பட்ட மண்ணரிப்பும், கரைகள் வலுவின்றிப் போனதுமே. ‘கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாறு’ என்று சிலப்பதிகாரம் காவிரி கழிமுகத்தில் பாய்ந்த வெள்ளம் கடற்கரையை அரிக்கும் அளவுக்கு அதிவேகத்துடன் பாய்ந்ததாகக் கூறும். அத்தகைய இயற்கைப் பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்த தமிழகம் இப்போது சிறுவெள்ளங்களுக்கே தடுமாறுகிறது.
நிரம்பாத நீர்நிலைகள்: கர்நாடகம் எழுப்பிய பெருஞ்சுவர்களைக் கடந்து தாவிவரும் உபரி நீரைப் பயன்படுத்தத் தமிழக அரசு மதிநுட்பமான பழமையும் புதுமையும் கலந்த தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்க வேண்டும். காவிரிப் படுகையில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது, இப்போது வெள்ள அபாயமும் சேர்ந்துகொண்டுள்ளது.
என்றாலும், கல்லணையிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிற்குள் உள்ள புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், அக்னி ஆற்று ஏரிகள், செங்கிப்பட்டி பகுதியில் குளங்கள், ஏரிகள், ஊருணிகள் இப்போது வரை வானம் பார்த்துதான் கிடக்கின்றன.
கடலுக்குப் போகும் தண்ணீரைக் கல்லணைக்குத் தெற்கிலும், அருகிலுள்ள மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கும் பாய்ச்சுவதற்கு அந்தந்தப் பகுதி விவசாயிகளை உள்ளடக்கிய ஊழலற்ற பாசனத் திட்டங்களை உருவாக்க வேண்டும். பாசனச் சீர்திருத்தம், ஆறுகளுக்குப் புத்துயிரூட்டல், நிலத்தடி நீர் மேலாண்மை, நகர்ப்புறங்களுக்கு ஆரோக்கியமான குடிநீர், பருவ மாறுதல்களை எதிர்கொள்ள அறிவியல்பூர்வமான திட்டங்கள் ஆகியவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர்,
விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: vjeeva63@gmail.com