

புகழ்மிக்க டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் (டிஐஎஸ்எஸ்) முன்னாள் இயக்குநரும், சமூக அறிவியல் ஆராய்ச்சியாளருமான பேராசிரியர் பரசுராமன் (72) செப்டம்பர் 2 அன்று காலமானார். அவரது அரிய பணிகள் குறித்துத் தமிழ்நாட்டில் அறிந்தவர்கள் மிகச் சிலரே.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவஞானபுரம் என்னும் குக்கிராமத்தில், எளிய வேளாண் குடும்பத்தில் ஐந்து சகோதரர்களில் ஒருவராக எஸ்.பரசுராமன் பிறந்தார். மக்கள்தொகையியலில் பட்ட மேற்படிப்பை முடித்த பின், மும்பை ஐஐடியில் முனைவர் பட்டம்பெற்றார். பின்னர், டிஐஎஸ்எஸில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.
அங்கு பதின்வயது, இளைஞர்கள் சிறப்பாய்வு மையத்தின் தலைவராக இருந்த பரசுராமன், உலக அணைகள் குழுவின் மூத்த ஆலோசகர் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். இயற்கையை, பழங்குடியினரைப் பேரணைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்துப் பரசுராமன் நடத்திய ஆய்வு, பெரும் அணைகள் குறித்த புதிய அணுகுமுறையை உருவாக்கியது. நர்மதை அணைக்கு எதிரான மேதா பட்கரின் போராட்டத்தில் பரசுராமனின் ஆய்வுகள் துணைநின்றன.
ஆய்வுகளின் வளர்ச்சி: டாடா நிறுவனத்தின் தலைவர் டோராப்ஜி டாடா, 1920-களில் பம்பாய் குடிசைப் பகுதிகளில் சமூகப் பணிகளில் ஈடுபட்டிருந்த டாக்டர் கிளிபோர்ட் மான்சார்ட் உதவியுடன் ஆசியாவின் முதல் சமூகப் பணிக் கல்லூரியான டிஐஎஸ்எஸ்-ஐ 1936இல் தொடங்கினார். 1946இல் நிறைவேற்றப்பட்ட இந்தியாவின் முதல் தொழிலாளர் சட்டத்தின் உருவாக்கத்துக்கு, டிஐஎஸ்எஸ்ஸின் ஆய்வுகள் மிக உதவியாக இருந்தன.
பேராசிரியர் எஸ்.பரசுராமன் இயக்குநராகப் பணியாற்றிய (2004 முதல் 2018 வரை) காலகட்டத்தில் டிஐஎஸ்எஸ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டது. முதுகலைப் படிப்புகள் இரண்டிலிருந்து ஐம்பதாக உயர்ந்தன; சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை, நீடித்த வளர்ச்சி, வாழ்வாதாரப் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளில் பட்ட மேற்படிப்புகளையும், ஆய்வுகளையும் பெருமளவு விரிவுபடுத்த பரசுராமன் முயற்சிகள் மேற்கொண்டார்.
எளியோருக்கும் வாய்ப்பு: ஒரு காலத்தில், கடினமான நுழைவுத் தேர்வுக்குப் பின் சில நூறு மாணவர்கள் மட்டுமே அங்கு பயிலும் நிலை இருந்தது. இந்நிலையைப் பரசுராமன் தலைகீழாக மாற்றியதன் விளைவால், இன்று ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் அங்கு பயில முடிகிறது. தற்போதும் நுழைவுத் தேர்வு இருக்கும்போதும், பல்வேறு புதுமையான விதிகளின் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் அவர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார்.
தொழில் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் துணையுடன் ஹைதராபாத், குவஹாத்தி, துல்ஜாப்பூர் ஆகிய நகரங்களில் புதிய வளாகங்களைத் தொடங்கினார். மாநில அரசின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டின் கிராமப் பகுதியில் டிஐஎஸ்எஸ் வளாகம் அமைய வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது.
ஆய்வுகளும், தரவுகளும் நூல்களிலோ ஆய்வுக் கட்டுரைகளிலோ புதைந்திருக்காமல் அடித்தள மக்களின் விடுதலைக்கும் மேம்
பாட்டிற்கும் உதவிடும் ஆயுதங்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலுப்பெறச் செய்தது, பரசுராமனின் சாதனை
களுள் முதன்மையானது.
- வ.ரகுபதி, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: ragugri@rediffmail.com