

போரிஸ் ஜான்சனுக்கு இப்படி ஒரு முடிவு நிகழும் என மூன்று ஆண்டுகளுக்கு முன் எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 1987 பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றிபெற்றது.
அதற்கு நிகரான வெற்றியை 2019இல் ஈட்டித்தந்து பிரதமரானார் போரிஸ் ஜான்சன். ஆனால், அவரது பதவிக் காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ள நிலையில், ராஜினாமா செய்யும்படி அவரது கட்சியினரால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் போரிஸ் ஜான்ஸன் ராஜினாமாவை அறிவித்தார். உள்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற லிஸ் ட்ரஸ் பிரிட்டனின் புதிய பிரதமாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
போரிஸின் அரசியல் பயணம்: போரிஸ் ஜான்சன் இளமைக் காலத்தில் இலக்கியத்திலும் அரசியலிலும் ஆர்வம்கொண்டிருந்தார். 1980-களின் முற்பகுதியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை மாணவராக இருந்தபோது, பல்கலைக்கழக இதழ் தயாரிப்பில் முனைப்புடன் செயல்பட்டார்; பல்கலைக்கழகத் தேர்தலிலும் போட்டியிட்ட போரிஸ், மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.
படிப்பை முடித்துவிட்டுப் பத்திரிகைத் துறையில் நுழைந்த போரிஸ், 1987 முதல் 2008 வரை 21 ஆண்டுக் காலம் ‘தி டைம்ஸ்’, ‘தி டெய்லி டெலிகிராப்’ உட்பட பிரிட்டனின் முன்னணிப் பத்திரிகைகளில் பணியாற்றினார். பத்திரிகையில் அரசியல் கட்டுரைகள் எழுதியதன் தொடர்ச்சியாகக் கட்சி அரசியலை நோக்கி வந்த போரிஸ், கன்சர்வேட்டிவ் கட்சியில் சேர்ந்தார்.
2007 இல் லண்டன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அரசியல் பாதை ஏறுமுகம் கண்டது. முன்னாள் பிரதமர் தெரசா மே உடனான போரிஸின் கருத்தியல் வேறுபாடு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட்டுக்கு ஆதரவான அவரது தீவிரப் பிரச்சாரம் போன்றவை பிரிட்டிஷார் மத்தியில் அவரைப் பிரபலமாக்கின.
போரிஸ் மற்ற பிரிட்டன் பிரதமர்களிலிருந்து சற்றுத் தனித்து வெளிப்பட்டார். அவரது சுறுசுறுப்பான உடல்மொழி பிரிட்டன் மக்களுக்குப் புதிதாக இருந்தது. அவரது பிரச்சாரப் பேச்சுக்குத் தனி ரசிகர் பட்டாளமே இருந்தது; மக்கள் எளிதில் தொடர்புகொள்ளக் கூடியவராக இருந்தார்.
பிரெக்ஸிட் தந்த வெற்றி: பிரெக்ஸிட்டை நிறைவேற்ற முடியாத காரணத்தால் 2019இல் அப்போது பிரதமராக இருந்த தெரசா மே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார்.
ஆனால், அப்போது நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை இல்லை. போரிஸின் பிரெக்ஸிட் கொள்கை காரணமாக, கூட்டணிக் கட்சிகள் அவருக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்றன. இதனால், நாடாளுமன்றத்தைக் கலைத்து, மறுதேர்தலுக்கு போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். 2019 இறுதியில் நடந்த மறுதேர்தலில் அவர் மிகப்பெரும் வெற்றிபெற்றார். ‘பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவேன்’ என்பது அவரது முதன்மை வாக்குறுதியாக இருந்தது.
அதுவே அந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் அவரை வெற்றிபெற வைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் 2020இல் வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தவறிவிட்டார் என்பதே போரிஸ் மீதான பொதுவான குற்றச்சாட்டு.
பிரெக்ஸிட்டுக்குப் பிறகு, டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்துக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் வளத்தை அதிகரிப்பது, ஐரோப்பாவுடனான வர்த்தகத்தைக் குறைத்துச் சுதந்திர வர்த்தகத்தை முன்னெடுப்பது, அகதிகளின் வருகையைக் குறைத்தல், வடக்கு நகரங்களை ரயில் பாதைகளின் மூலம் லண்டனுடன் இணைப்பது போன்ற வாக்குறுதிகளைப் போரிஸ் முழுமையாக நிறைவேற்றவில்லை.
பொருளாதாரம் சார்ந்து அவரிடம் வலுவான திட்டங்கள் இல்லாத காரணத்தால், மக்களும் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி இடைத்தேர்தல்களில் தோல்வியைத் தழுவியது.
பொருளாதாரத் தடுமாற்றம்: போரிஸ் ஜான்சனின் ஆட்சிக் காலத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் பெரும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. 40 ஆண்டுகளில் இல்லாத விலையேற்றம், 300 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை பிரிட்டிஷாரைக் கதிகலங்க வைத்துள்ளது. அவரது மூன்றாண்டு ஆட்சிக் காலத்தில் பிரிட்டனில் மின்சாரக் கட்டணம், எரிவாயு சிலிண்டர் விலை 80% உயர்ந்தது. கரோனாவுக்குப் பிறகு பிரிட்டனின் ஏற்றுமதியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து தேக்க நிலையிலேயே இருந்துவருகிறது.
கரோனா, ரஷ்யா-உக்ரைன் போர் என சாதகமற்ற புறக்காரணிகள் பொருளாதாரச் சரிவுக்குக் காரணமாக இருந்தாலும், நாட்டின் பிரதமராக அவற்றைத் தீர்ப்பதற்கான திட்டமோ, தொலைநோக்குப் பார்வையோ போரிஸிடம் இல்லை. மேலும், அவர் எடுத்த நடவடிக்கைகள் மோசமான பின்விளைவுகளையும் தந்தன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எரிபொருள் மீதான வரியை 5 பவுண்டாக போரிஸ் குறைத்தார். இதனால் அரசுக்கு ஏற்படும் வரியிழப்பை ஈடுகட்ட மக்களின் வருமானவரியை அதிகரித்தார். இந்த நடவடிக்கையால், மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவு குறைந்தது.
ரஷ்யா-உக்ரைன் போர்: பிரிட்டனைக் கரோனா தாக்கியபோது போரிஸ் பதவியேற்று ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தன. கரோனாவை பிரிட்டன் எப்படிக் கையாளப்போகிறது என்று உலக நாடுகள் உற்றுநோக்கிக்கொண்டிருந்த நேரத்தில், ஆரம்பம் முதலே போரிஸின் அறிவிப்புகளில் பல குழப்பங்கள் நீடித்தன.
1.87 லட்சம் பேர் கரோனாவால் பிரிட்டனில் பலியாகினர். போரிஸ் ஜான்சன் கரோனாவைக் கையாண்ட விதம், பிரிட்டனின் வரலாற்றில் மிக மோசமான பொது சுகாதாரத் தோல்விகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. கரோனா கட்டுப்பாடுகளை மீறி, போரிஸ் தனது பிறந்தநாள் விருந்தில் கலந்துகொண்ட நிகழ்வு அவருக்கு அவப்பெயரைப் பெற்றுத்தந்தது.
அரசு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரிட்டன் பிரதமர் போரிஸ்தான். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைப் போரிஸ் கடுமையாக எதிர்த்தார். ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய நாடுகள் மெத்தனம் காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார். தனது ஆதரவு நிலைப்பாட்டால் உக்ரைனுக்கு ஆயுதங்களையும் மனிதாபிமான உதவிகளையும் அவர் வழங்கினார்.
போரிஸின் தீவிர உக்ரைன் ஆதரவுப் போக்கு, அவர் மீது ரஷ்யா பொருளாதாரத் தடைவிதிக்கக் காரணமானது. உக்ரைனுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ‘பிரிட்டனை வழிநடத்தாமல் உக்ரைன் விவகாரத்தில் போரிஸ் அதிகம் மூக்கை நுழைக்கிறார்’ என்று விமர்சனங்கள் எழுந்தபோதும், இறுதிவரை உக்ரைனுக்கு நட்புக்கரம் நீட்டித் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
போரிஸுக்கு விடைகொடுப்போம்: தனது ஆட்சிக் காலத்தில் போரிஸ் இந்தியாவுக்கு ஒருமுறை வந்தார். இந்தியப் பிரதமர் மோடியுடன் தொடர்ந்து நட்பு பாராட்டிவந்த போரிஸ், இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தீவிர ஆர்வம் செலுத்தினார். அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா-பிரிட்டன் இடையே பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு சார்ந்த பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரிட்டனுக்குப் புத்துணர்வூட்டுவதற்கான முயற்சிகளைப் போரிஸ் மேற்கொண்டார்; ஆனால், அவை குறிப்பிடும்படியான பலன்களை அளிக்கவில்லை என்பதே உண்மை. எனினும், பிரிட்டனின் முந்தையை பிரதமர்கள் போல் இயந்திரதொனியில் அதிகாரமாக வட்டத்துக்குள் அடங்கிவிடாமல், வரம்பைச் சற்றே உடைத்து நட்புறவான சூழலை உருவாக்கிய பிரதமர் என்று அவர் நினைவுகூரப்பட வாய்ப்பு உண்டு.
- மதி தனுஷ்கோடிதொடர்புக்கு: mathidhanushkodi@gmail.com