ஹைட்ரோ கார்பன் ஓஎன்ஜிசி என்ன சம்பந்தம்?

ஹைட்ரோ கார்பன் ஓஎன்ஜிசி என்ன சம்பந்தம்?
Updated on
3 min read

‘ஹைட்ரோகார்பன் திட்டம்’ என்கிற வார்த்தை, நேரடி அறிவியல் அகராதிப் பொருளைத் தாண்டி நிலக்கரிப் படுகை, மீத்தேன், ஷேல் பாறையில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

இந்த இரண்டு வகையான கச்சா எண்ணெய், எரிவாயு உற்பத்திசெய்யப்பட்டால், அந்தப் பகுதி பாலைவனமாகிவிடும் என்று பீதி கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. ஓஎன்ஜிசி இந்த வகை ஆய்வு, உற்பத்தியில் இறங்க இருக்கிறது அல்லது ஏற்கெனவே இந்த வகை உற்பத்தியைத் தொடங்கிவிட்டது என்பதை மையப்படுத்தியே சர்ச்சை தொடர்கிறது.

காவிரிப் படுகையில் 1985-லிருந்து ஓஎன்ஜிசி செயல்பட்டுவருகிறது. 1500-2800 மீட்டர் வரையிலான ஆழத்துக்குச் சுமார் 750 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட உற்பத்திக் கிணறுகளில் கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுத்துவருகிறது. அவற்றில் ஒரு கிணறுகூட மீத்தேன் கிணறோ ஷேல் கிணறோ இல்லை.

எல்லாமே சாதாரண முறையில் தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளே. தோண்டியதும் முதற்கட்டச் சோதனைகளின்போதே உற்பத்தி வாய்ப்பு இல்லை என்று தெரியவரும் கிணறுகள் மூடப்பட்டு, நிலம் மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு, நில உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்படும் நிலையே இன்றும் தொடர்கிறது. உலக சராசரியில் மூன்று கிணறு தோண்டினால் ஒன்றுதான் உற்பத்திக் கிணறாக அமையும்; ஓஎன்ஜிசி-யின் சராசரி 2.5.

மீத்தேன்: மீத்தேன் திட்டம் என்பது COAL BED METHANE (CBM) எனப்படும் நிலக்கரிப் படுகையிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் எரிவாயு சம்பந்தப்பட்டது. இதற்கும் ஓஎன்ஜிசி எடுக்கின்ற எரிவாயுவுக்கும் சம்பந்தம் இல்லை. பல்லாயிரக்கணக்கான இயற்கைப் பேரழிவுகளால் பூமிக்குள் புதையுண்ட தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள்தாம் பூமியின் அழுத்தம் காரணமாக நிலக்கரியாகவோ பெட்ரோலியப் பொருட்களாகவோ மாறுகின்றன.

நிலக்கரி என்பது தாவர அடிப்படை; கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் கடல்வாழ் உயிரினங்களின் அடிப்படை. மீத்தேன் திட்ட எரிவாயு, நிலக்கரிப் படுகைகளில் இருந்து எடுக்கப்படுவதால் அதுவும் தாவர அடிப்படையிலானதே.

நிலக்கரி மடிப்புகளிலிருந்து உறிஞ்சப்படுவது மீத்தேன் திட்ட எரிவாயு. பொதுவாக, நிலக்கரிப் படுகை என்பது மூலப் படுகையாகவும், நீர்த்தேக்கப் பாறையாகவும் செயல்படும் தனித்துவமான பெட்ரோலிய அமைப்பு. நிலக்கரிப் படுகைக்குள் தக்கவைக்கப்பட்டுள்ள எரிவாயுவை உறிஞ்சி எடுத்து உற்பத்தி செய்யப்படுவது நிலக்கரிப் படுகை மீத்தேன் எனப்படும்.

நிலக்கரிப் படுகையில் உறிஞ்சப்பட்ட எரிவாயு முக்கியமாகத் தாவர அடிப்படை கொண்டது, இது கடல் உயிரின அடிப்படை கொண்ட பெட்ரோலிய அமைப்பிலிருந்து வரும் இயற்கை எரிவாயுவுக்கு மாறானது.

இவ்வகை எரிவாயு, செயல்பாட்டில் உள்ள அல்லது கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. பல சமயங்களில், நிலக்கரிக்குள் இருக்கும் மீத்தேன் வெளிப்படுவதற்கு, நிலத்தடி நீரை வெளியேற்றி வெளிப்புற அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

இதனைச் சுட்டிக்காட்டித்தான், காவிரி மண்டலத்தின் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்து வீணாக்கி, ஓஎன்ஜிசி இந்தப் பகுதியையே பாலைவனம் ஆக்கப்போகிறது என்கிற அச்சம் பரப்பப்பட்டது. இந்த மீத்தேன் நிலக்கரியின் மேற்பரப்பில் உறிஞ்சப்படுகிறது, வணிகரீதியான உற்பத்திக்கு முன் அதிக அளவு நீர் நீக்கம் தேவைப்படுகிறது.

நிலக்கரி மடிப்புகளின் ஊடுருவலை மேம்படுத்த சில நேரம் நீர் விரிசல் எனச் சொல்லப்படும் ஹைடிராலிக் ஃப்ராக்சரிங் தேவைப்படலாம். இவை எல்லாம்தான் இந்தத் திட்டத்திற்கான எதிர்ப்புக் காரணிகளாகச் சொல்லப்பட்டு, வழக்கமான ஓஎன்ஜிசி பணிகளின் மீதும் சந்தேகம் கொள்ள வைத்துவிட்டது.

ஷேல்: பூமியின் மேற்பரப்பு முதல் மையப் பகுதி வரை வண்டல் பாறை, சுக்கான் பாறை, கால்சியம் பாறை, களிமண் பாறை, கருங்கல் பாறை, கிரானைட் பாறை, ஷேல் பாறை என்று பல்வேறு பாறை அடுக்குகளால் ஆனது. பூமியின் பல்வேறு வகைப் பாறை அடுக்குகளில் ஷேல் மிகமிகக் குறைந்த ஊடுருவல் திறன் கொண்ட பாறையாகும். இது அதிக கரிம உள்ளடக்கத்துடன் ஒருங்கிணைந்த களிமண் அளவிலான துகள்களைக் கொண்டுள்ளது.

இதன் அதிகப்படி அடர்த்தி காரணமாக, இதற்கு மேலும் கீழும் உள்ள அடுக்குகளுக்கு ஒரு தடுப்புச் சுவர்போல் செயல்படுகிறது. இது மட்டும் ஆங்காங்கே இல்லாவிட்டால் நிலத்தடி நீர் தானாகவே கீழே போய்விடும். ஆயிரக்கணக்கான அடிகளுக்குக் கீழ் அழுத்தத்துடன் இருக்கும் எண்ணெயும் எரிவாயுவும் சுய அழுத்தம் காரணமாகத் தாமாகவே பூமிப்பரப்புக்கு வந்துவிடும். ஓஎன்ஜிசி, துரப்பணப் பணி தேவைப்பட்டிருக்காது.

ஆனால், சில ஷேல் பாறை அடுக்குகள் மிக அதிக அளவில் எண்ணெய் எரிவாயு வளத்தைத் தன்னகத்தே கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்ய கிடைமட்டக் கிணறுகள் தோண்ட வேண்டும்; குறைந்தபட்சம் நீர்விரிசல் முறை தேவை. பல வேளைகளில் பல அடுக்கு நீர்விரிசல் முறைகள் பெரிய அளவில் செய்துதான் ஷேல் பாறைகளிலிருந்து எண்ணெய் எரிவாயு உற்பத்தியை மேற்கொள்ள இயலும்.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் பீப்பாய் கச்சா எண்ணெய் 130 டாலர் அளவிலிருந்து திடீரென்று 40 டாலர் அளவுக்குக் குறைந்ததற்குக் காரணம், ரஷ்யப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க அமெரிக்கா தன்னகத்தே மூடி வைத்திருந்த ஷேல் பாறை எண்ணெய் உற்பத்தியை முழு அளவில் திறந்ததுதான். நான்கைந்து மாதங்களுக்கு முன் ஷேல் உற்பத்தியை ஓரளவுக்கு மட்டுப்படுத்தியிருப்பதுதான் பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 65-70 டாலர் அளவுக்கு வந்ததற்குக் காரணம்.

ஓஎன்ஜிசி: இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐந்து ஆண்டுகளையும் நூற்றுக்கணக்கான கோடிகளையும் செலவழித்து சோதனைகள் மேற்கொண்டு, இந்தியாவில் எங்குமே ஷேல் உற்பத்தி பொருளாதாரரீதியாகச் சாத்தியம் இல்லை என்று கண்டறிந்து, இந்திய அரசுக்கு நவம்பர் 2019இல் ஓஎன்ஜிசி நிறுவனம் அறிவித்துவிட்டது.

இந்தியாவில் மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் மட்டுமே நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்குச் சோதனைக்குத் தரப்பட்டிருந்த நிலக்கரிப் படுகை மீத்தேன் பிளாக் பகுதி 2015 ஜூலை 27 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

காவிரிப் படுகையில் மீத்தேன் திட்டங்களோ ஷேல் திட்டங்களோ நடைமுறையில் இல்லை; எதிர்காலத்திலும் காவிரிப்படுகையில் ஷேல் வாயுவோ, ஷேல் எண்ணெயோ, நிலக்கரிப் படுகை மீத்தேனோ எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று 2017 ஜனவரி 19 அன்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடமிருந்து பசுமைத் தீர்ப்பாயத்திற்குக் கடிதம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- பி.என்.மாறன், காவேரி அஸட் ஓஎன்ஜிசி-யில் குழுமப் பொது மேலாளர்.

தொடர்புக்கு: pnmaran23@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in