

ஐந்தாண்டுத் திட்டங்கள் என்பவை கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்படும் தேசியப் பொருளாதாரத் திட்டங்கள். 1928இல் சோவியத் ஒன்றியத்தின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை அந்நாட்டு அதிபர் ஜோசப் ஸ்டாலின் செயல்படுத்தினார். இதனால் ஈர்க்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, சுதந்திரத்திற்குப் பிறகு 1951இல் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் .
இதற்காக ‘இந்தியத் திட்டக் குழு’ உருவாக்கப்பட்டது. முதல் தலைவர் அப்போதைய பிரதமர் நேரு. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டு, குறைவாக இருக்கும் வளங்களைப் பெருக்கி, சமச்சீரான வகையில் அவற்றைப் பயன்படுத்தத் திட்டமிடுவதே திட்டக்குழுவின் தலையாய நோக்கம். 1951 முதல் 2012 வரை 12 ஐந்தாண்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் உணவு உற்பத்தியில் தன்னிறைவைப் பெறும் நோக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1956இல் நடைமுறைக்கு வந்த இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. கிராமப்புற இந்தியாவைச் சீரமைக்கவும் அது உதவியது. இந்தியா- பாகிஸ்தானின் போரினாலும், கடுமையான வறட்சியாலும் தடைப்பட்ட வேளாண் உற்பத்தி, மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தினால் பெருக்கப்பட்டது. அணைகளும் சிமெண்ட் ஆலைகளும் அந்தக் காலகட்டத்தில் அதிகம் நிறுவப்பட்டன. பஞ்சாபில் கோதுமை அதிக அளவில் உற்பத்தி செய்யும் போக்கு அப்போதே தொடங்கியது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் உயர்த்தியது. செல்வமும் பொருளாதார ஆற்றலும் நாட்டில் சில இடங்களில் மட்டும் குவிவதைத் தடுத்து, அவற்றைத் தேசமெங்கும் பரவலாக்குவதற்கு அது முயன்றது. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியது. வறுமையையும், வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் அகற்றி, சமூக ஏற்றுத்தாழ்வுகளைக் களைவதற்கு ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் பெருமளவில் உதவியது.
ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்கியது. இந்தியாவின் பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்பதற்கு எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் உதவியது. அதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கிச் சென்றது. மக்களின் வாழ்க்கைத் தரம் ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தினால் வெகுவாக மேம்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அது சமூக நீதியையும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சியையும் உறுதிப்படுத்தியது.
காடுகளின் பரப்பை அதிகரிப்பது, மாசுபட்ட ஆறுகளைத் தூய்மைப்படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் மேம்பாடு சார்ந்த அம்சங்களில் பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் கவனம் செலுத்தியது. அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதையும் இது உறுதிசெய்தது. உள்நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்தி, வேலைவாய்ப்பைப் பெருக்குவது பதினோராம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்தது. அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கும் முயற்சிகள் வேகமெடுத்தன.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை 9 சதவீத அளவுக்கு உயர்த்தும் நோக்கில் 12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2017இல் நரேந்திர மோடியின் ஆட்சியில் ‘இந்தியத் திட்டக் குழு’ கலைக்கப்பட்டு ‘நிதி ஆயோக்’ உருவாக்கப்பட்டது. திட்டக் குழுவின் கலைப்பு ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முடிவுரை எழுதியது.
- ஹுசைன்