

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்த சி.எல். சுல்ஸ்பர்கர் 1952இல் இந்தியா வந்திருந்தார்; அப்படி வந்திருந்தபோது பிரதமர் ஜவாஹர்லால் நேருவை அவர் சந்தித்தார்.
“வெவ்வேறு திசைகளில் இழுக்கக்கூடிய வேறுபாட்டு அம்சங்களே மிகுந்திருக்கும் இந்த நாட்டை, எந்த அம்சம் இப்படி ஒரே அமைப்பாக சேர்த்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது?” என்று இளமைத் திமிரோடு அவர் கேட்டார். ஆணவமும் வியப்பும் கலந்து அவர் கேட்ட கேள்விக்கு, நேரு மிகவும் பொறுமையாக விளக்கம் அளித்தார்:
“ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அது மக்களுடைய தேசிய உணர்வு; இந்த உணர்வு இன்று நேற்று ஏற்பட்டதல்ல, நீண்ட காலமாகவே மக்களுடைய உள்ளங்களில் ஊறியிருக்கிறது. இந்தியாவின் பழைய வரலாற்றைப் புரட்டினால், அரசியல்ரீதியாக இந்த நாட்டை வெவ்வேறு மன்னர்கள் ஆண்டதால் இது பிளவுபட்டுத்தான் இருந்தது, ஆனாலும் ஒரே அலகாகத் தொடர்ந்தது.
ஒரே விதமான பாரம்பரிய சிந்தனைகளும், அனைவருக்கும் பொதுவான கலாச்சாரப் பின்னணியும் இந்தியா முழுக்கப் பரவியிருக்கிறது. இந்திய மக்கள் அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அதில் கவனம் செலுத்தியவர்கள் மன்னர்களும் மாமன்னர்களும்தாம்.
கடந்த காலத்திலிருந்து தொடரும் இந்தப் பொதுவான பின்னணித் தொடர்பை மேலும் வலுப்படுத்தியது இரண்டு அரசியல் நிகழ்வுகள்தாம். அதில் ஒன்று, பிரிட்டிஷ்காரர்கள் இந்த நாட்டுக்கு வாணிபம் செய்ய வந்து, பிறகு இதை அடிமைப்படுத்தி ஆக்கிரமித்ததுதான்”.
சுல்ஸ்பர்கரின் கேள்வி அவருக்கு மட்டும் தோன்றியதல்ல, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலருக்கும் இன்றளவும் தொடர்வது. சிலர் அப்பாவித்தனமாகவும் சிலர் விஷமமாகவும் இதைக் கேட்கின்றனர்.
இந்தியா எப்படி ஒரே தேசிய நாடாக இன்னமும் நீடிக்கிறது என்பதுதான் அவர்கள் முன் உள்ள கேள்வி. நேருவின் பதிலும், இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களுடைய உறுதியான செயல்பாடுகள் – தன்னம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடும்தான் அப்படி நீடிப்பதற்குக் காரணம்.
இந்த நாட்டுக்குள் எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும் சோதனைகள் ஏற்பட்டாலும் மக்கள் ஒற்றுமை காப்பார்கள் - இந்தக் குடியரசு நீடிக்கும் என்பதே அது. அது அப்படித்தான் நீடித்து வருகிறது. ‘மாநிலங்களின் ஒன்றியமாக’ இந்தியா இன்னமும் தொடர்வதற்குக் காரணம், அரசியல் சமரசங்களிலும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையை வளர்க்கும் கலையிலும் நாம் கைதேர்ந்தவர்களாகிவிட்டோம் என்பதால்தான்.
ஐந்து காரணங்கள்
இந்தியாவில் 1950 ஜனவரி 26இல் அமலுக்கு வந்த அரசமைப்பு, அச்சு அசலான கூட்டாட்சிக்கானதாக வரையறுக்கப்படவில்லை. மாறாக, மாநிலங்களைவிட மத்திய அரசுக்கே அதிக அதிகாரங்களும் பொறுப்புகளும் இருக்குமாறு வகுக்கப்பட்டது. காரணம் அன்றைய சூழலில் அது வேறு மாதிரியாக இருந்திருக்க முடியாது. வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற விருப்பத்துக்குக் காரணங்களாக ஐந்து அகத் தூண்டல்களும் உத்வேகமும் வரலாற்றில் ஒன்றாக சங்கமித்துவிட்டன.
முதலாவது, மக்கள் கூட்டத்துக்கு தங்களுக்கு எது சரியானது என்பதை முடிவெடுக்கும் திறன் இருக்காது என்ற ஜனநாயகத்துக்கு முரணான உள்ளுணர்வு. நிலப்பிரபுத்துவத்தையும் மன்னராட்சியையும் ஆதரித்து பிறகு அரசியல் கட்சிகளில் இடம்பெற்ற பலருக்கு, வலுவான ஒரு சர்வாதிகார மையம் அவசியம் என்கிற எண்ணம் இருந்ததால் மத்திய அரசும் அப்படி அமைய வேண்டும் என்பது இன்றியமையாதது என்று கூறிவிட்டனர்.
இரண்டாவது, பாரத அன்னையின் இழந்த பெருமையை மீண்டும் உலகில் நிலைநாட்ட வலுவான மத்திய அரசு அமைய வேண்டும் என்பதை முன்நிபந்தனையாகவே கே.எம். முன்ஷி போன்ற இந்து மறுமலர்ச்சிக் கொள்கையாளர்கள் வலியுறுத்தினர்.
தன்னைக் காத்துக்கொள்ளும் வலிமையற்ற, மக்களிடம் செல்வாக்கில்லாத அரசுகள் ஆட்சி செய்த போதெல்லாம் எப்படி அந்நியர்கள் இந்த நாட்டில் நுழைந்து ஆட்சியைக் கைப்பற்றி அடிமைகளாக்கினர் என்பதற்கு வரலாற்றிலிருந்தே அவர்களால் பல உதாரணங்களைக் காட்ட முடிந்தது. மீண்டும் அப்படி நேராமல் இருக்க வேண்டும் என்றால் மத்திய அரசு வலுவானதாக அமைய வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்தனர்.
மூன்றாவதாக, சுதந்திரத்துக்கு முன்னதாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நிகழ்வு அனைவருடைய மனங்களிலும் ஆறாத வடுவையும் பெரும் துயரையும் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் வலுவற்ற கூட்டாட்சி என்பது விரும்பத்தக்கதும் அல்ல, பகுத்தறிவுக்கும் ஏற்றதல்ல என்ற முடிவே அனைவரிடமும் ஏற்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட சேதங்களும் சோகங்களும் நாட்டில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும், சட்டம் – ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை அனைவரிடமும் வலுவாகப் பதியவைத்திருந்தது. அது வலுவான மத்திய அரசு இருந்தால்தான் சாத்தியம் என்கிற அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன.
நான்காவதாக, படித்த மேல்தட்டு சிந்தனையாளர்கள், புதிய இந்தியா மதச்சார்பற்றதாகவும் நவீனமானதாகவும் அறிவியலுக்கு முன்னுரிமை தருவதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். இதற்கு நாட்டின் மனித வளங்களையும் இதர சாதனங்களையும் திரட்டி, வீணடிக்காமல் பயன்படுத்த வேண்டும், அதற்குத் திறமையும் தகுதியும் உள்ளவர்களை நாடு முழுவதிலிருந்தும் தேடிக் கண்டெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதால், வலுவான மத்திய அரசு அவசியம் என்பது உணரப்பட்டது. நாடு முன்னேறவும் வளம் பெறவும் மத்திய அரசு அதிகாரங்கள் மிக்கதாக இருக்க வேண்டும் என்று நாட்டின் அதிகாரவர்க்கமும் விரும்பியது.
இறுதியாக, அன்றைய தேசியத் தலைவர்கள் அனைவருமே மாநில, மொழி, மத, இன எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டனர், மதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோருடைய கூட்டு செல்வாக்குக்கு இணையாக அந்த நாளில் எதுவுமே இல்லை.
அவர்கள் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் மரியாதையும் வெகு இயல்பானது, கேள்விக்கு அப்பாற்பட்டது. அவ்விருவருடைய ஆளுமைக்கு ஏற்ற அரசு என்றால், அது வலுவான மத்திய அரசாகத்தான் இருக்க முடியும் என்ற நிலை தோன்றிவிட்டது. அன்றைய அரசியல் களத்தில் காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும்கூட மக்களால் மதிக்கப்பட்ட தலைவர்களாக இருந்தனர். அவர்களும் நாடு தொடர்பாக அனைத்தையுமே தேசிய நோக்கில்தான் பார்த்தார்கள், மாநிலக் கண்ணோட்டம் அவர்களுக்கு இருந்ததே இல்லை.
சாதகமாக்கிக்கொண்ட உணர்வு
இந்த ஐந்து உண்மைகளும் ஒன்று கலந்ததால், வலுவான மத்திய அரசு என்கிற கொள்கைக்குச் சிறிதளவும் எதிர்ப்பே இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த உடனே தேசியத் தலைவர்களுக்குப் பாராட்டும் ஆதரவும் குவிந்தவண்ணம் இருந்தாலும், அவற்றையெல்லாம் ‘வலுவான மத்திய அரசு’ என்ற கருத்துக்கு ஆதரவை உருவாக்கவும், பிறகு அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கவும், அரசமைப்பு தொடர்பான பிறவற்றின் வலுப்படுத்தல்களுக்குமே பயன்படுத்திக்கொண்டனர். மக்களிடமிருந்த ஜனநாயக ஆதரவு உணர்வுகளை இதற்குச் சாதகமாக்கிக் கொண்டனர்.
உதாரணத்துக்கு, உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் 1947 டிசம்பர் 17இல் பேசியதைப் பார்ப்போம்: “ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரம் செய்ய வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை, மக்களுக்கு சேவை செய்யத்தான் அதிகாரத்தைக் கோரினோம்.
சீக்கிஸ்தான், ஜாட்டிஸ்தான், ராஜஸ்தான் என்ற குறுகிய பிரதேச உணர்வு உங்களுக்கு இருந்தால், உலகம் இன்றிருக்கும் நிலையில் அவையெல்லாம் உங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாது என்பதைக் கூற விரும்புகிறேன். அவ்வாறெல்லாம் குறுகிய சிந்தனையுடன் நாம் வாழ முடியாது. இந்த அரசு மக்களுக்கானது; ஏழை - பணக்காரர், இந்து – முஸ்லிம் – பார்சி – கிறிஸ்தவர்கள் என்று அனைவருக்குமானது.
அரசின் நடவடிக்கைகளை நாம் எப்படி நடத்த வேண்டும் என்றால், இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் ‘இது நம்முடைய அரசு’ என்று நினைக்க வேண்டும். காலங்கள் மாறிவிட்டன, கடுமையாக உழைக்கிறவர்களுக்கு மட்டுமே அரசு சொந்தம், சோம்பேறியாக உட்கார்ந்திருப்ப வர்களுக்கு அல்ல. எப்படி, எதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சமூகத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்” என்றார்.
(தொடரும்)
1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து’ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை
(ஹரீஷ் கரே, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர்)
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்
தமிழில்: வ. ரங்காசாரி