

இந்தியாவில் ஆசிரியராகப் பணியாற்றுவது என்பது இன்றைக்கு மிகக் கடினமான வேலைகளில் ஒன்றாக மாறிவிட்டது. கரோனாவுக்குப் பிறகு பள்ளி இடைநின்ற மாணவர்களைத் தேடிப்போய் மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, பள்ளிக்குத் திரும்பிய தொடக்கப் பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் குறைபாடுகள், உயர்நிலை மாணவர்களிடம் புதிதாய்த் தொற்றிக்கொண்ட முரண்களான கைபேசி, அதிவேக இருசக்கர ரேஸ் வாகனம், வித்தியாசமான சிகை அலங்காரம், வயதுக்கு மீறிய நட்பு, போதைப் பாக்கு, சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகும் வகுப்பறைக் குத்துப்பாட்டு, நடனக் காணொளிகள் - இவற்றைப் பற்றிக் கேள்வி கேட்டால், தற்கொலை முயற்சி.
பள்ளி வேலைகளையும் தாண்டி விடுமுறையிலும் ஆசிரியர்கள் பணிசெய்தல், தேர்தல் பணி போன்றவற்றைக் கடந்தால் சிறப்புக் கற்றல்-கற்பித்தல் திட்டங்களுக்காகப் பணியிடைப் பயிற்சி, ‘எமிஸ்’ மாணவர் - ஆசிரியர் பெருந்தரவுப் பணி - இவற்றைக் கடந்தே ஆசிரியர்கள் பாடப்பொருளை நடத்தி முடிக்கிறார்கள்.
மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்செய்தல், தேர்வு நடத்துதல், தேர்வுத்தாள் திருத்துதல் பணிகளின் விளைவாக, மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவர்களில் சிலர் ஆசிரியரை மரத்தில் கட்டிவைத்து உதைப்பது, கேள்வித்தாள் கடினம் என கழிவறையில் வைத்துப் பூட்டுவது போன்ற அத்துமீறல்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிகழத் தொடங்கியிருக்கின்றன.
பொதுவெளியிலும் ஊடகங்களிலும் ஆசிரியர் பணி குறித்த விமர்சனங்கள் என எல்லாம் சேர்ந்து ஆசிரியர் பணியையே ஆபத்தானதாக்கிவிட்டன.
தொடக்கப் பள்ளித் துயரங்கள்: பெருந்தொற்றின் விளைவால் பள்ளி முடக்கம் முடிந்து, பள்ளி திரும்பியுள்ள குழந்தைகளிடம் கற்றல் குறைபாடு அதிகரித்துள்ளது. வீட்டில் இரண்டாண்டுகள் தொலைக்காட்சி, தொலைபேசியில் கழித்ததன் விளைவாகக் கைகள், விரல்கள், விழிப்பார்வை மன ஓட்டத்தோடு ஒத்துழைக்காத ‘டிஸ்பிராக்ஸியா’ எனும் வளர்ச்சிக் குறைபாடு பெரும்பாலான குழந்தைகளிடம் எழுந்துள்ளது.
அவதானக் குறை மிகையியக்கம் (Attention Deficiency Hyperactive Disorder), மொழிக் கற்றலில் குறைபாடு (டிஸ்லெக்ஸியா), கணக்கீட்டுக் கற்றல் குறைபாடு (டிஸ்கால்குலியா), எழுதுவதில் பின்தங்குதல் (டிஸ்கிராஃபியா) போன்ற கற்றல் குறைபாடுகளும் குழந்தைகளிடம் இன்று அதிகம் காணப்படுகின்றன.
எனவே, தொடக்கப் பள்ளி ஆசிரியை ஒருவர் தன் மாணவர்களிடம் நிலவும் கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து, தனிக்கவனம் செலுத்தி, வகை பிரித்து, அவற்றைக் களைவதற்கு ஓர் உளவியலாளராகவும் செயல்பட வேண்டியுள்ளது. ‘எண்ணும் எழுத்தும்’, ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற திட்டங்களில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்–ஆசிரியத் தன்னார்வலர்களின் நிலையும் இதுதான்.
மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள்: நோய்த்தொற்று முடக்கத்தின்போது உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவசத் தேர்ச்சி வழங்கியது ஆசிரியரின் மரியாதையையே ஆட்டம் காண வைத்துள்ளது. மேலும், தாம் ஒரு குழந்தை என்பதையே மறந்துபோகும் அளவுக்கு இந்தச் சிறார்கள் வீட்டு வேலை, பெற்றோர் தொழில், மீன்பிடிப்பு, விவசாயம் என கரோனா காலத்தில் வேலைக்கு அனுப்பப்பட்டது மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இப்போது பள்ளிக்குத் திரும்பிவிட்டாலும், பலர் இன்னமும் பகுதிநேர வேலைக்குச் செல்வது தொடர்கிறது. வகுப்பறை நலன்கள், கற்றல் நடவடிக்கைகளுக்காக வகுப்புதோறும் வாட்ஸ்-அப் குழுக்களை அமைப்பது வசதியான தகவல்தொடர்பு அம்சமாக இன்று உணரப்பட்டுள்ளது. வீட்டுப்பாடங்கள் முதல் பாடப்புத்தக பிடிஎஃப் வரை பகிர்ந்துகொள்வது இந்தக் குழுக்களின் நோக்கம்.
ஆனால், எதார்த்தம் வேறாக இருக்கிறது. விதவிதமான, அதிநவீன, விலை உயர்ந்த கைபேசிகளைக் கொண்டிருக்கும் மாணவர்களைப் பெற்றோர், ஆசிரியர் கண்டிப்போ, பள்ளியின் விதிகளோ நெறிப்படுத்த முடியவில்லை. நானோ தொழில்நுட்பம் கைபேசியைத் திறன்பேசி ஆக்கி 16 வகைச் செயல்பாடுகளை வழங்குகிறது.
குழந்தைகளைப் பொறுத்தவரை கைபேசியும் ஒருவகை விளையாட்டுப் பொம்மைதான். பள்ளி, பாடம், ஆசிரியர் ஆகியவற்றைவிட பன்மடங்குக் கவர்ச்சியைக் கைபேசி வழங்குவதால் அவர்கள் எளிதில் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். கல்விச் செயல்பாடு என்று பெற்றோரையும் நம்பவைத்து, நினைத்தாலே அலறவைக்கும் பல்வகை ஒழுங்கீனச் செயல்பாடுகளுக்குத் திறன்பேசி துணைபோகிறது.
மாணவர்களின் கைபேசி, ஆசிரியர் பணியை இன்று பன்மடங்கு சவாலானதாக மாற்றிவிட்டிருக்கிறது; ஆசிரியர்களின் தனியுரிமைக்கே ஆபத்தானதாக மாறிநிற்கிறது. கைபேசியிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற அதைவிட அதிக ஆர்வமும் கவர்ச்சியும் கொண்ட புதிய அம்சத்தைக் கல்விக்குள் புகுத்த வேண்டியிருக்கிறது; அரசாணைகள் மட்டும் உதவாது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களை நமது கல்விமுறை குழந்தையாகவே கருதுகிறது. ஆனால், அவர்கள் தங்களைப் பெரியவர்களாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள். ‘ஒரு குழந்தையைப் பள்ளி மட்டுமே வளர்ப்பதில்லை; குழந்தைகளை வளர்க்கச் சமூகமே பொறுப்பேற்க வேண்டும்’ என்பார் ரஷ்யக் கல்வியாளர் இகோர் இவானவ்.
பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குக் குழந்தைகளை வளர்ப்பதில் சமூகம் பங்கேற்கத் தவறியதே காரணம். அது இன்றைய ஆசிரியர்களின் பணியை மேலும் சவாலாக மாற்றியிருக்கிறது.
ஆசிரியர் தின வாழ்த்து: தமிழக அரசு கல்விப் புரட்சியை நோக்கி நடைபோடுவதாக அறிவித்தபடி உள்ளது. பிரம்மாண்ட நவீனப் பள்ளி வளாகங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திறந்துவைக்க உள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னதுபோலப் ‘பெரிய வானுயர்ந்த கட்டிடம், விதவிதமான ஆய்வகம், வகுப்பறை என எதுவும் ஒரு அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியருக்கு இணை ஆகாது’ என்பதை இந்த நாளில் நினைவில் கொள்ள வேண்டும்.
சமூக வலைதளங்களில் விதவிதமாக ஆசிரியர் தின வாழ்த்து, குரு வணக்கம் பதிவிடுவதைவிட, தம் பகுதியில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளிடம் மேற்கண்ட ஆபத்துகளைக் களைந்து, கற்றலை மட்டுமே கடமையாக ஏற்கச்செய்யும், ஆசிரியரை மதிக்கும் நிலையை ஊக்குவிக்க, குழந்தை வளர்ப்பில் ஒரு பொறுப்பான சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்து பங்கேற்பதே சிறந்த ஆசிரியர் தின வாழ்த்தாக அமையும்!
- ஆயிஷா இரா.நடராசன் | தொடர்புக்கு: eranatarasan@yahoo.com