

திருச்சிராப்பள்ளி லால்குடிச் சாலையில், லால்குடிக்கு நெருக்கத்தில் பங்குனியாற்றின் வளப்பத்தில் செழித்திருக்கும் சிற்றூரே திருமங்கலம். 63 திருத்தொண்டர்களுள் ஒருவராக சுந்தரர் திருத்தொண்டத்தொகையில் குறிப்பிடும் ஆனாயரின் ஊரான இத்திருமங்கலத்தில், முதலாம் ராஜராஜர் காலக் கட்டுமானத்துடன், கல்வெட்டுகளையும் சிற்பங்களையும் கொண்டு விளங்குகிறது சாமவேதீசுவரர் கோயில்.
தொடக்கத்தில் பரசுராமீசுவரமாகவும் பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை திருமழுவுடைய நாயனார் கோயிலாகவும் இது அறியப்பட்டிருந்தது. இக்கோயிலின் புகழ் வளர்க்கும் பெருமைகளுள் தலையாயது இங்கிருக்கும் ராமாயணத் தொடர் சிற்பங்கள்தான்.
படக்கதை சிற்பங்கள்: தமிழ்நாட்டில் ராமாயணத்தின் சில பகுதிகளைத் தொடர் சிற்பங்களாகப் படக்கதை போலப் பதிவுசெய்யும் முயற்சி முற்சோழ வேந்தரான முதலாம் பராந்தகர் காலத்தே மேற்கொள்ளப்பட்டது. அவர் காலக் கோயில்களான புள்ளமங்கை ஆலந்துறையார், குடந்தை நாகேசுவரர், திருச்சென்னம்பூண்டிச் சடைமுடிநாதர் ஆகிய மூன்றுமே இறையகத்திலும் அதன் முன்னிருக்கும் மண்டபத்திலுமாய், ராமாயணக் கதையின் சில காண்டங்களிலிருந்து சிறப்பான காட்சிகளைத் தொகுத்துக் கோயிலுக்கு வருவோருக்குக் கதை சொல்வதுபோலச் செதுக்கப்பட்ட சிற்றுருவச் சிற்பங்களைத் தொடராகக் கொண்டுள்ளன. இம்மூன்று கோயில்களுள், புள்ளமங்கை ஆலந்துறையார் ராமாயணத் தொடரை விரிவாக ஆராய்ந்துள்ள டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் பால, அயோத்தியா, ஆரண்ய காண்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளே இங்கு சிற்பக் காட்சிகளாகச் செதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். கிஷ்கிந்தைக் காண்டத்தில் நிகழும் வாலியின் முடிவு மட்டும் தனியொரு காட்சியாகப் புள்ளமங்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது.
20 சிற்பங்கள்: புள்ளமங்கை ஆலந்துறையார், குடந்தை நாகேசுவரர், திருச்சென்னம்பூண்டிச் சடைமுடிநாதர் கோயில்களில் கட்டுமானத்தின் தாங்குதளக் கண்டபாதங்களில் இடம்பெற்றிருக்கும் ராமாயணத் தொடர், திருமங்கலம் கோயிலில் இறையகம், அதன் முன்னுள்ள மண்டபம் ஆகியவற்றின் துணைத்தளக் கண்டபாதங்களில் காட்டப்பட்டுள்ளன. இத்துணைத்தளம் தாங்குதளத்திற்கும் கீழுள்ள பகுதியாகும். 20 செ.மீ. உயரம், 18 செ.மீ. அகலம் கொண்ட இதன் பாதங்கள் கட்டுமானச் சுவரைத் தழுவியுள்ள அரைத் தூண்களின் அடிப்பகுதிகளாகும். இவற்றில்தான், திருமங்கல ராமாயணம் படக்கதை போலச் சொல்லப்பட்டுள்ளது. காலப்போக்கில் நேர்ந்த சுற்றுத்தரையின் உயர்வு, பின்னாளில் நிகழ்ந்த புதிய கட்டுமானங்களின் இணைப்பு ஆகியவற்றால் மறைக்கப்பட்டவை போக, இன்றைக்குப் பார்வைக்குக் கிடைப்பன 20 சிற்பத் தொகுதிகளாகும்.
இந்த 20 சிற்பங்களில் சோழச் சிற்பிகள் அவர்தம் காலத்தே வழக்கிலிருந்த ராமாயணத்தின் சுந்தர, ஆரண்ய, கிஷ்கிந்தைக் காண்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் கண்களுக்கு விருந்தாகப் படைக்கப்பட்டுள்ளன. இறையகத்தின் முன்னுள்ள மண்டபத்தின் வடபுறம் தொடங்கும் சுந்தர காண்ட நிகழ்வுகள், இறையக வடபகுதியில் இரண்டு பாதங்களில் தொடர்கின்றன. கங்கையில் நேர்ந்த படகுப் பயணத்தை முதற்காட்சியாகக் கொண்டு தொடங்கும் ஆரண்ய காண்டம், இறையகத்தின் மேற்குப்புறம் ராமர், லட்சுமணரை அனுமன் சந்திக்கும் நிகழ்வுடன் முடிகிறது. அடுத்துள்ள சிற்பத்தொடர் கிஷ்கிந்தைக் காண்டத்தின் முதன்மை நிகழ்வுகளைப் படம்பிடிக்கிறது.
வெளிப்படும் அன்புணர்வு: பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த ராமாயணம் எதுவென உறுதியாகத் தெரியாத நிலையில், இச்சிற்பத் தொடரை மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் துணையுடன்தான் அணுக வேண்டியுள்ளது. இத்தொடரின் சில காட்சிகள் வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோலவே செதுக்கப்பட்டுள்ளமையைக் காணும்போது, வால்மீகி வழியொட்டியே ராமாயணக் கதையொன்று சோழர் காலத் தமிழ்நாட்டில் நிலவியதை அறிய முடிகிறது.
இத்தொடரின் சுந்தர காண்டக் காட்சிகளாகத் தசரதர் தம் தேவியருடன் அந்தப்புரத்தில் இருப்பது, ராமரும் சீதையும் கௌசல்யாதேவியிடம் விடைபெறுவது, ராமர்-லட்சுமணர்-சீதை உரையாடல், யானை-குதிரை வீரர்கள் என நான்கு மட்டுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. ராமர்-லட்சுமணர்-சீதை கங்கையாற்றைப் படகில் கடப்பது, தண்டகக் காட்டில் மூவரும் அரக்கன் விராதனிடம் சிக்குவது, சீதையை இழந்து சடாயு மரணமறிந்து இழப்பின் முத்தாய்ப்பில் ராமர், லட்சுமணர் காட்டில் நடப்பது, மற்றோர் அரக்கன் கபந்தனிடம் சிக்கி மீள்வது, பம்பையில் சபரியைச் சந்திப்பது, ராமர்-லட்சுமணரை அனுமன் காண்பது என ஆறு படப்பிடிப்புகள் ஆரண்ய காண்டத்தின் முக்கிய நிகழ்வுகளாகக் காட்டப்பட்டுள்ளன. இந்த ஆறுமே சோழச் சிற்பிகளின் உளி உன்னதங்களாக விளைந்திருந்தபோதும் சபரி சந்திப்பும் அனுமன் அணுகலும் இணையற்ற படைப்புகளாகக் கண்களில் நிறைகின்றன. அனுமனின் பத்திமைப் பணிவும் சபரியின் உரிமையோடமைந்த தோழமையும் இருவரிடத்தும் ராமர் காட்டும் பரிவுநிறை அன்புணர்வும் மிகுந்த கருத்துடன் சிற்பங்களில் படைக்கப்பட்டுள்ளமை பார்ப்பவருக்குப் பெருவிருந்தாகும்.
இருவரின் கவலை: திருமங்கல ராமாயணத்தில் பேரிடம் பெறுவது கிஷ்கிந்தைதான். ராமரும் லட்சுமணரும் நாயகர்களாக இருந்தபோதும் கிஷ்கிந்தைத் தொடரில் பேருருக் கொள்பவர்கள் வாலியும் சுக்ரீவனுமே. ராமரும் சுக்ரீவனும் சந்திக்கும் காட்சி, வால்மீகி ராமாயணத்தியிலிருப்பதாக ராஜாஜி சுட்டுவதுபோலவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘இதோ என் கை. வானரனான என் நட்பை விரும்புவாயானால் பற்றுக இக்கையை’ என்று சுக்ரீவன் அன்புடன் மொழிவதை இழைபிசகாமல் காட்டியுள்ளனர் மங்கலத்துச் சிற்பிகள்.
ராமர், சுக்ரீவன் இருவருமே மாற்றானிடம் மனைவியைப் பறிகொடுத்தவர்கள். மனைவியர் மீட்பில் ஒருவருக்கொருவர் துணையிருப்பதாக உறுதிபூண்டவர்கள். எனினும், அதற்கான செயற்பாடுகளின்றிக் காலம் நகர்வதை உணர்ந்தவர்களாய் இருவரும் கவலையடைவது இரண்டு காட்சிகளாக, இரண்டாம் முறையாக இரவில் வந்து சுக்ரீவன் போருக்கு அழைக்க, அவனை எதிர்கொள்ள வாலி புறப்பட, அவனுடைய தேவி தாரை வாலியைத் தடுக்கும் காட்சி இத்தொடரின் சிகரமாகப் பதிவாகியுள்ளது.
வாலியின் இறுதிநொடிகள்: தமிழ்நாட்டுச் சோழர் காலக் கோயில்கள் பலவற்றிலும் கம்போடியக் கோயில்களிலும் இடம்பெற்றுப் பொலியும் வாலியின் இறுதிநொடிகளே இங்கும் திருப்புமுனைக் காட்சியாகப் பதிவாகியுள்ளது. தாரையின் மார்பில் தலைசாய்த்துத் தம் வாழ்வின் இறுதி நொடிகளிலுள்ள வாலியின் இழப்பைத் தாங்காது, அவலத்தின் அத்தனை முகங்களையும் காட்டி நிற்கும் அவர் உறவுகளும் அரசவையினரும், பிரிவின் ஆற்றாமை எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதைக் கண்முன் நிறுத்துகின்றனர். சுக்ரீவன் அரியணை ஏறுவதுடன் மங்கலத்து ராமாயணத்தில் திரை விழுகிறது.
சோழ சமுதாயத்தில் ராமாயணம் பெற்றிருந்த சிறப்பான இடத்தையும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிகழ்வுகள்வழி, ஒரு பெருங்கதையைச் சுவை குன்றாமல் உளிக் காட்சிகளாக மக்கள் முன்வைக்கும் பேராற்றலை அக்காலச் சிற்பிகள் பெற்றிருந்த திறத்தையும் உணர விரும்புவோர் திருமங்கலம் திருக்கோயிலுக்கு ஒருமுறை சென்றுவர வேண்டும்.
-இரா.கலைக்கோவன், வரலாற்றாய்வாளர்
தொடர்புக்கு: rkalaikkovan48@gmail.com