செயற்கை ஓவியத்துக்கு விருது
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த ஃபேர் ஃபைன் ஓவியப் போட்டியின் முடிவுகள், சென்ற வாரத்தில் டிவிட்டரில் பெரிய அளவில் விவாதத்தை உருவாக்கின. செயற்கை நுண்ணறிவுக் கலையில் மென்பொருள் மூலம் ஓவியங்கள் வரைவது இன்றைக்கு மிக எளிது. இணையம், செயலிகள் மூலம் ஒளிப்படத்தைக்கூட வசீகரிக்கும் ஓவியமாக மாற்ற முடியும். இந்த மாற்றம், ஓவியக் கலை சவால்தான். இந்தப் போட்டியில் முழுவதும் செயற்கை நுண்ணறிவுக் கலை வழியாக வரையப்பட்ட ஓர் ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது, இந்தச் சூழலுக்கு ஓர் உதாரணமாகிவிட்டது. இது கலையின் அழிவுக்கு வழிவகுக்கும் எனத் தங்கள் கோபத்தை ஓவியக் கலைஞர்கள் பலர் டிவிட்டரில் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இந்தப் பரிசை வென்ற ஜேசன் ஆலன் பரிசுப் பதக்கத்துடன் தன் ஓவியத்தைப் பகிர்ந்த டிவீட்தான் இதற்குத் திரி கொளுத்தியது.
நடனக் கலைஞரின் வாழ்க்கைப் பதிவு
புகழ்பெற்ற நடனக் கலைஞர் மல்லிகா சாராபாயின் வாழ்க்கைப் பதிவுகளாக வெளிவந்துள்ள ‘இன் ஃப்ரீ ஃபால்: மை எக்ஸ்பிரிமென்ட்ஸ் வித் லிவிங்’ (in Free Fall: My Experiments with Living) புத்தகம், ஆங்கில வாசிப்புலகில் கவனம் பெற்றுவருகிறது. இந்நூலை ஸ்பீக்கிங் டைகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பரத நாட்டியம், குச்சுப்புடி ஆகிய பாரம்பரிய நடனக் கலைகளைக் கற்றுத் தேர்ந்த மல்லிகா, அதைச் சமூக மாற்றத்துக்கான ஊடகமாக மாற்ற முயன்றார். மரபான நடன முறையை மாற்றி அதில் புதிய பரிசோதனைகளுக்கு இடமளித்தார். இந்தத் தன் அனுபவத்துடன் வாழ்க்கை முறை, உடல்நலம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பதிவுகளாக இதில் அவர் எழுதியுள்ளார். மல்லிகா, புகழ்பெற்ற நடனக் கலைஞரான மிருணாளினி சாராபாய் - இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்ரம் சாராபாய் தம்பதியின் மகள்.
