

கரோனா கால ஊரடங்கு நெருக்கடியிலிருந்து சற்றே மீண்டுவந்த காலகட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உலகத்தை மீண்டும் நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிறது. உலக நாடுகளை மறைமுகமாகப் பாதித்திருக்கும் இந்தப் போர், உக்ரைன் மக்களை நேரடியாகப் பாதித்திருக்கிறது. வீடுகள், உடைமைகளுடன் அன்றாடத்தையும் இழந்து, சொந்த நாட்டில் அகதிகளாயினர்.
மேற்கு உக்ரைனில் இந்தாண்டு பிப்ரவரிக்கு முன்பு வரை ஓர் இயல்பு வாழ்க்கையில் இருந்த அனஸ்தசியா-அர்ட்டெம் தம்பதியரின் அன்றாடம், போரால் ஒரு தங்கும் விடுதி அறைக்குள் முடங்கியது. அவர்களின் இரு குழந்தைகளும் அந்த அறைக்குள் அடைபட்டுக் கிடந்தனர். வீட்டை விட்டுப் புறப்பட்டபோது அவர்களது மகன் ஷாஷாவுக்கு ஒன்றரை வயது, மகள் சோபியாவுக்கு ஆறரை வயது. சில அத்தியாவசியப் பொருட்களுடன் மூன்றே மூன்று பொம்மைகளுடன் இந்தக் குடும்பம் புலம்பெயர நேரிட்டது. சோபியா தன் மன நெருக்கடியை ஓவியமாக வரைந்திருக்கிறாள். காகிதம் கிடைக்காததால் அவள் டிஷ்யூ காகிதத்தைப் பயன்படுத்தியிருக்கிறாள். ரஷ்யக் கப்பல் படையெடுத்து வருவதைப் பற்றிய சித்திரம் அது.
தன் மகளின் ஓவியத்தைப் பார்த்ததும் அனஸ்தசியா-அர்ட்டெம் தம்பதி, ஓவியங்களே அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளின் மனக் காயத்துக்கு மருந்தாகும் எனக் கருதியிருக்கிறார்கள். உக்ரைன் குழந்தைகளை ஓவியம் எழுதத் தூண்டியிருக்கிறார்கள்.
அந்த ஓவியங்களை uakids today என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இவர்களின் முயற்சிக்கு நல்லாதரவு கிட்டியிருக்கிறது. குழந்தைகள் போர் குறித்த தங்கள் மன இறுக்கங்களை இந்த ஓவியங்கள் வழியாகக் களைந்துவருகிறார்கள்.