

இந்தியாவில் புதிய தத்துவம் முளைவிட்ட காலகட்டத்தில் உருவான முக்கியமான தத்துவவியலாளர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய. இந்தியத் தத்துவவியலை, பகுத்தறிவுரீதியில் அவர் அணுகினார். பிரபஞ்சம், பொருள்களால் ஆனது என்கிற ஆதாரபூர்வமான கருத்தை அவர் வலியுறுத்தினர். அதுவரை இந்தியாவில் நிலைகொண்டிருந்த கருத்துமுதல்வாதத்தை அவர் கேள்விக்கு உட்படுத்தினார். இந்தியத் தத்துவவியலில் பொருள்முதல்வாதத்தை முன்வைத்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் தேவி பிரசாத். இவரது தந்தை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இதனால் தேவி பிரசாத்துக்கும், அதில் ஆர்வம் உண்டானது. அந்தக் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்திய ஒருமைப்பாட்டைத் தொடர்ந்து தேவி பிரசாத்துக்கு இந்தியத் தத்துவவியலின் மீது ஆர்வம் வந்தது. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்தார். இந்தியத் தத்துவவியலாளர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனும் எஸ்.என்.தாஸ்குப்தாவும் தேவி பிரசாத்தின் பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் தேசபக்தியுடன் பகுத்தறிவற்ற நம்பிக்கைகளும் நிலவிவந்ததைப் பற்றி பின்னால் அவர் எழுதினார். அவரது ‘லோகாயதா’ என்கிற நூல் இந்த வகையில் முக்கியமானது.
பொருள்முதல்வாதம், மார்க்சியம் எல்லாம் அந்நியக் கருத்தாக்கங்கள் என்று முன்வைக்கப்படுவதற்கு எதிராகவும் அவர் எழுதியுள்ளார். இந்திய அறிவியல் வளர்ச்சி, தொடக்க நிலையைத் தாண்டி வளராமல் போனதற்கான காரண காரியங்களை அவர் ஆராய்ந்துள்ளார். தேவி பிரசாத் சட்டோபாத்யாயவின் துணிபுகள், முழுமையான ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. அவர் மறைந்துவிட்ட நிலையில் அவர் கருத்துகள் இன்றைய காலகட்டத்தில் முன்மொழியப்பட வேண்டியது அவசியமானது.
- விபின்