

கல்வி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்லாமல்; சுகாதாரத்திலும் தமிழ்நாடு மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இதற்கான அடிப்படை 1920களில் ஆட்சியிலிருந்த நீதிக் கட்சியின் முன்னெடுப்புகளிலிருந்து தொடங்குகிறது.
சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. 1960களில் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னரே சுகாதாரத் துறையின் மேம்பாடு வேகமும் வீரியமும் பெற்றது. கடந்த 75 ஆண்டுகளில், இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவக் கல்வி, மருத்துவ வசதி, சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி சிறப்பானது.
இன்று தமிழ்நாட்டில் 32 மாவட்ட மருத்துவ மனைகளும், 278 மாவட்டத் துணை மருத்துவ மனைகளும், 4,285 உடல்நலம் - ஆரோக்கிய மையங்களும் (HWC) உள்ளன. தமிழ்நாட்டில் 26 அரசு கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் என மொத்தமாக 50 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
கைக் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) இந்திய அளவில் 30 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 15 ஆக இருக்கிறது. மகப்பேறு மகளிர் இறப்பு விகிதம் (MMR) இந்திய அளவில் 113 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 60 ஆக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் (NMR) இந்திய அளவில் 23 என்றிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 10 ஆக இருக்கிறது. சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாட்டின் நிலை உலக அளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, கரோனா பெருந்தொற்றைத் தமிழ்நாடு அரசு பிற இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகக் கையாண்டதற்கு அதன் மேம்பட்ட சுகாதார அமைப்பே காரணம்.