சுதந்திரச் சுடர்கள் | பெயர்பெற்றது தமிழ்நாடு

சுதந்திரச் சுடர்கள் | பெயர்பெற்றது தமிழ்நாடு
Updated on
1 min read

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து மதராஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்த மாநிலம் தமிழ்நாடு என்று மாறியது, வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணம், மதராஸ் மாநிலம் என்று மாறியது. இன்றைய ஆந்திரம், கேரளம், கர்நாடகப் பகுதிகள் மதராஸ் மாநிலத்தில் இருந்தன. ஆனால், மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளுக்குப் பிறகு தெலுங்கு மொழி பேசும் பகுதிகள், ஆந்திர மாநிலமாக 1953இல் பிரிக்கப்பட்டன.

பிறகு மலையாளம் பேசும் பகுதிகள் கேரள மாநிலமாகவும், கன்னடம் பேசும் பகுதிகள் மைசூர் மாநிலமாகவும் 1956இல் பிரிக்கப்பட்டன. எஞ்சிய தமிழகப் பகுதி, மெட்ராஸ் மாநிலம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

மெட்ராஸ் மாநிலம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 1956இல் விருதுநகரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார். அவருடைய மறைவுக்குப் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை தீவிரமாக எழுந்தது.

திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை, ம.பொ.சிவஞானம் போன்ற தலைவர்கள் இதற்காகக் குரல் கொடுத்துவந்தனர். இதேபோல 1957இல் இக்கோரிக்கையை வலியுறுத்தி திமுக, 1961 இல் சோஷலிஸ்ட் கட்சி ஆகியவை மாநில சட்டப்பேரவையில் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது காங்கிரஸ் அரசு அவற்றைத் தோற்கடித்தது. 1961இல் நாடாளுமன்றத்தில் திமுக தனி மசோதா கொண்டு வந்தபோதும், அது நிராகரிக்கப்பட்டது.

1967இல் அண்ணாதுரை தலைமையில் திமுக முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகுதான், அதற்கான காலம் கனிந்தது. அதே ஆண்டு ஜூலை 18 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அத்தீர்மானம் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்திலும் இதற்கான சட்ட முன்முடிவு 1968 நவம்பர் 1இல் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக 1969 முதல் மதராஸ் மாநிலம் என்கிற பெயர் தமிழ்நாடு என்று முறைப்படி மாறியது.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in