

பெண்களைத் தொழிலாளர் பட்டியலில் வைக்கவும் வீட்டு வேலைகளில் செலவிடப்படும் அவர்களது உழைப்பை நாட்டின் வளர்ச்சிக் குறியீட்டில் கணக்கில்கொள்ளவும் இப்போதும் விவாதங்கள் தொடர்ந்துகொண்டுள்ளன.
ஆனால், உழைக்கும் பெண்களின் உரிமைக்காக 1960களில் களமிறங்கியவர் இலா பட். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் வழக்கறிஞர், சமூக சேவகர்.
காந்தியின் அகிம்சை, தற்சார்பு உள்ளிட்ட கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பழமையான தொழிற்சங்கமான ஜவுளித் தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவில் 1955இல் இவர் இணைந்தார்.
பிறகு அதன் பெண்கள் பிரிவுக்குத் தலைமை வகித்தார். பீடி சுற்றுவது, நெசவு, தையல், சுள்ளி பொறுக்குதல் - குப்பை சேகரிப்பது போன்ற முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவர்கள் பணம் படைத்தவர்களாலும் முதலாளிகளாலும் உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்படுவதை அறிந்தார்.
அதிகக் கடன் சுமையால் குடும்பத்தில் அனைவருமே காலம் முழுக்க உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் உணர்ந்தார். இதுபோன்ற பெண் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான தொழிற்சங்கத்தை (Self Employed Women’s Association – SEWA) 1972இல் அமைத்தார். இது 1990களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவில் பெண்களுக்கான மிகப் பெரிய தொழிற்சங்கமாக வலுப்பெற்றது.
அதிகாரம் இல்லாததுதான் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கான காரணம் என்று சொன்ன இலா பட், பெண்களை அதிகாரப்படுத்துவது அவசியம் என்றார். சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கான முதல் கூட்டுறவு வங்கி 1974இல் அமைய காரணமாக இருந்தார். இந்தியத் திட்டக் குழுவின் உறுப்பினராக (1989 – 1991) இருந்தார். பெண்களுக்கான உலக வங்கியை (Women’s World Bank) 1980இல் உருவாக்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார்.
- ப்ரதிமா