

காவல்துறையில் நிலவும் ஆர்டர்லி முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பணித்திருக்கிறது. ஆர்டர்லிகள் காவல்துறைப் பயிற்சி பெற்றவர்கள். ஆனால், துப்பாக்கியையோ லத்தியையோ தூக்க மாட்டார்கள். மாறாகக் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் குற்றேவல் புரிவார்கள்.
ஆர்டர்லி வரலாறு
காவல்துறை உருவாக்கப்பட்ட காலந்தொட்டே வீட்டு வேலைகளைச் செய்ய ஆர்டர்லிகளை வைத்துக்கொண்டார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். ஆங்கிலேயர்கள் கப்பல் ஏறிப் போய் 75 ஆண்டுகள் ஆயிற்று. 1979இல் ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்குத் தமிழக அரசு ஒரு சட்டம் இயற்றியது. எனினும் சட்டம் காகிதத்திலிருந்து இறங்கிக் களத்திற்கு வந்துசேரவில்லை. இப்போது உயர் நீதிமன்ற ஆணை வந்திருக்கிறது.
ஆர்டர்லிகளை அதிகாரிகளின் வீடுகளிலிருந்து விடுவித்து, காவல் பணியில் அமர்த்துவோம் என்று காவல் துறை கூறியிருக்கிறது. அது விரைவில் நடக்கும் என்று நம்பலாம். எனில், பிரச்சினை அத்துடன் முடிந்ததாகக் கருதலாமா? இதன் வேர் நமது மத்திய, மாநில அரசுகளின் எல்லாத் துறைகளிலும் ஆழப் படர்ந்திருக்கிறது. மேலதிகாரிகள் மேலானவர்கள், உதவியாளர்கள் அவருக்குக் கீழ்ப்படிய விதிக்கப்பட்டவர்கள் என்கிற காலனிய, பிரபுத்துவ மனோபாவம் நமது அரசுத் துறைகளில் நிலவுகிறது. என் சொந்த அனுபவத்திலிருந்தே தொடங்கலாம்.
அரசுத் துறைத் தீண்டாமை
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஓர் அரசுத் துறையில் எனக்கு வேலை கிடைத்தது. இடம்: பெரியாறு அணைக்கட்டு. அப்போது அணையில் தேங்கிய நீரில் இவ்வளவு அரசியல் கலந்திருக்கவில்லை. அணையை அடையத் தேக்கடியிலிருந்து 14 கி.மீ. நீர்வழியாகப் பயணிக்க வேண்டும்.
ஒரு பொங்கல் விடுமுறைக் காலம். சில பொறியாளர்கள் விடுப்பிலும், சிலர் அடிவாரத்தில் இருந்த வண்டிப் பெரியார் ஊருக்கும் போயிருந்தார்கள். அந்த வேளை தேக்கடியைச் சுற்றிப் பார்க்க சென்னையிலிருந்து ஒரு மூத்த அதிகாரி குடும்பத்துடன் வந்திருந்தார். ஓர் ஊழியர் அவரையும் குடும்பத்தையும் தேக்கடியிலிருந்து அணைக்கட்டிற்கு அரசுப் படகில் அழைத்துவந்தார்; அவர்களை ஆய்வு மாளிகையில் சிரமப் பரிகாரம் செய்யச் சொல்லிவிட்டு, என்னிடத்தில் வந்தார்; அணையைச் சுற்றிக் காட்டச் சொன்னார்.
நானும் ஊழியரும் மாளிகைக்குப் போனோம். எங்களைப் பார்த்ததும் சோபாவில் அமர்ந்திருந்த அதிகாரி கைகளை நீட்டியபடி எழுந்திருக்க ஆயத்தமானார். ஊழியர் என் பெயரையும் என் பதவியையும் சொல்லி அறிமுகப்படுத்தினார். எழுந்த அதிகாரி மீண்டும் அமர்ந்துகொண்டார். முன் நீட்டிய கையையும் பின்னிழுத்துக்கொண்டார். ஏன்? அப்போது நான் ஓர் இளம் பொறியாளன். அந்தப் பெரிய அதிகாரி கைகுலுக்குகிற அளவுக்கு அது உயர்வான பதவியில்லை.
மூன்று பேருக்கு நன்றி
இது பழைய கதை. இப்போது நிலைமை மாறியிருக்க வேண்டுமே? இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஒரு திட்டப் பணிக்குச் சில தகவல்களைப் பெற மத்திய அரசுத் துறை ஒன்றின் மூத்த அதிகாரியைச் சந்தித்தேன். நான் கேட்டவற்றை அடுத்த நாளே தந்துவிடுவதாகச் சொன்னார் அவர்.
நான் வியந்து பாராட்டினேன். தன்னுடைய மேசையில் எந்தக் கோப்பும் தங்காது என்றார். தொடர்ந்து அதற்கான வெற்றிச் சூத்திரம் மூன்று பேரின் கையில் இருக்கிறது என்றார். முதலாமவர் அந்த அதிகாரிக்கு மட்டும் நேர்ந்துவிடப்பட்டிருக்கும் பியூன். இவர் மட்டுமே அதிகாரியின் அறைக்குள் பிரவேசிக்கவும் கோப்புகளைக் கையாளவும் உரிமையானவர். அதிகாரிக்கும் அவர்தம் விருந்தினருக்கும் நொறுவையும் தேநீரும் தருபவர்.
இரண்டாமவர் கார் ஓட்டுநர். அதிகாரியின் அலுவலகப் பையையும் சாப்பாட்டுக் கூடையையும் சுமந்து வருபவர். அதிகாரி களப்பணிக்குப் போனால் தண்ணீர்ப் போத்தல் கொண்டு தருபவரும் இவரே. அதிகாரி பணியில் மூழ்கிவிட்டால், ஓட்டுநர் அதிகாரியின் வீட்டுக்குப் போய்விடுவார். வீட்டிலுள்ளவர்களும் கடை கண்ணிக்குப் போக வேண்டும்தானே? மூன்றாமவர் சுருக்கெழுத்தாளர். இவரும் அதிகாரிக்கு மட்டுமே உரிமையானவர்.
அதிகாரி ‘டிக்டேட்’ செய்வதைத் தட்டச்சு செய்துகொடுப்பார். அதிகாரிக்கு வரும் கோப்புகளும் இவரைத் தாண்டித்தான் போகும். இந்த மூன்று பேரும் சிறப்பாக (விசுவாசமாக என்று படிக்கவும்) செயல்பட்டால், அதிகாரியால் சிறப்பாக இயங்க முடியும் என்று முடித்தார்.
வளர்ந்த நாடுகள் எதிலும் ஓர் அதிகாரியைச் சுற்றி இத்தனை பேர் இருப்பதில்லை. ஹாங்காங்கில் பணி நிமித்தம் பல அரசு அலுவலகங்களுக்குப் போயிருக்கிறேன். எந்த அதிகாரிக்கும் சுருக்கெழுத்தாளர் கிடையாது. அதிகாரியே கணினியில் தட்டச்சு செய்துகொள்வார்.
பியூன் என்கிற வார்த்தையே இல்லை. அதிகாரியே தனது தேநீரைத் தயாரித்துக்கொள்வார். ஒளிநகல்களை அவரே எடுப்பார். தனது பையைத் தானே சுமப்பார். அவருக்கு ஓட்டநரும் இரார். அலுவலகக் காரும் இராது. அலுவல்ரீதியான பயணங்களுக்கு வாடகைக் காரை அமர்த்திக்கொள்வார். ஹாங்காங்கும் பிரிட்டிஷ் காலனியாக இருந்த நாடுதான். ஆனால், காலனியத்தின் எந்த ஆர்டர்லி எச்சமும் அங்கு தங்கவில்லை.
அலுவல் மொழியில் ஆர்டர்லி மனம்
நமது அரசுத் துறைகளில் ஆழமாகப் படிந்திருக்கும் அதிகாரப் படிநிலையை அங்கு புழங்கும் உடல்மொழி மட்டுமல்ல, அலுவல் மொழியும் காட்டும். ஓர் இளம் பொறியாளர் அவரது மேலதிகாரியான செயல் பொறியாளருக்கு எழுதுகிற கடிதம் இப்படி இருக்கும்: ‘மதிப்புக்குரிய ஐயா, இத்துடன் ஜூலை மாதத்திற்கான நீர்நிலை அறிக்கை செயற்பொறியாளர் அவர்களுக்குப் பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.’
செயற்பொறியாளர்கள் ஆங்கிலேயர்களாக இருந்த காலத்தில் கறுப்பு நிற இளம் பொறியாளர்கள் இப்படித்தான் எழுதினார்கள். ‘நான் சமர்ப்பிக்கிறேன்’ என்று இருக்கக் கூடாதா? வெள்ளை அதிகாரியிடம் ‘நான்’ என்று சொல்வது, மாட்சிமை தாங்கிய மேலதிகாரியின் சமூகத்திற்கு முகம் காட்டுவதைப் போன்றது. ஆகவே, அன்று உதவியாளர்கள் தங்கள் அடையாளத்தை அழித்துக்கொண்டு எழுதினார்கள். இந்தத் துருப்பிடித்த வடிவம் இன்றும் தொடர்கிறது.
இந்தக் கடிதத்தில் வேறு சில பிரச்சினைகளும் இருக்கின்றன. ‘ஐயா’ என்கிற விளியிலேயே மரியாதை வந்துவிடுகிறதே, பிறகு ஏன் மதிப்பிற்குரிய என்கிற முன்னொட்டு? ‘சமர்ப்பிக்கிறேன்’ என்பதிலேயே அதிகாரப் படிநிலை நிறுவப்படுகிறதே, பிறகு ஏன் மேலதிகமாகப் பணிய வேண்டும்? கடிதத்தின் உள்ளடக்கம் தொடங்குவதற்கு முன்னாலேயே ‘பெறுநர்: செயற்பொறியாளர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்குமே, பிறகு ஏன் மீண்டும் ‘செயற்பொறியாளர் அவர்களுக்கு’ என்று எழுத வேண்டும்? இதே கடிதத்தைச் சிகாகோவில் பணியாற்றும் இளம் பொறியாளர் எப்படி எழுதியிருப்பார்? ‘ஐயா, இத்துடன் ஜூலை மாதத்திற்கான நீர்நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கிறேன்.’
தமிழக அரசு காவல்துறையில் ஆர்டர்லி முறையைக் களைந்துவிடும். கூடவே, நமது அரசுத் துறைகளில் நிலவும் காலனிய நடைமுறைகளையும் படிப்படியாகக் களையவேண்டும். அலுவல் மொழியை மாற்றுவதிலிருந்து தொடங்கலாம். அதிகாரிகளைப் பேணுவதற்குச் செலவிடப்படும் மனித வளத்தைப் பயனுள்ள பணிகளுக்கு மடைமாற்றலாம். மேலதிகாரிகளும் தங்களின் மேட்டிமைக் குணத்தைக்கைவிட வேண்டும். உதவியாளர்கள் சுயமரியாதையை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். மாற்றம் வெளியிலிருந்தும் மேலிருந்தும் கீழிருந்தும் வர வேண்டும்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com