

மனிதன் தங்கி வாழ வழிசெய்யும் நிரந்தரத் தங்குமிட உருவாக்கத்தின் தொடக்கம், செவ்வாய்க் கோளுக்கு மனிதப் பயணம் மேற்கொள்வதற்கான முதல் அடி, நிலவின் கனிமங்களை வெட்டியெடுத்துப் பயன்படுத்தும் விண்வெளி வணிகத்தின் ஆரம்ப முயற்சியென வர்ணிக்கப்படும் நாசாவின் ஆர்டிமிஸ் - 1, நிலவுப் பயணத் திட்டம் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது.
ப்ளோரிடா மாகாணத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆர்டிமிஸ்-1 திட்டத்துக்கான ஓரையன் விண்கலம் ஏவப்பட உள்ளது.
ஆகஸ்ட் 29 அன்று ஏவப்பட இருந்த இந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. நிலவு போன்ற வான் பொருட்களுக்கான பயணம் ஒரு ஊரிலிருந்து வேறொரு ஊருக்கு நேரடியாகப் பயணம் செல்வது போன்றதல்ல. எல்லா வான் பொருட்களும் நகர்ந்துகொண்டே இருக்கும்.
எனவே, நிலவும் விண்கலமும் ஒரே நேரத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும் வகையில் செலுத்தப்பட வேண்டும். பூமியிலிருந்து ஏவப்படும் இடமும் நிலவின் நிலையும் குறிப்பிட்ட கோணத்தில் இருக்கும்போது ஏவூர்தியைச் செலுத்தினால் மட்டுமே நிலவில் சரியான இடத்தை அடைய முடியும். இந்தப் பயணம் 39 நாட்கள் நீடிக்கும்.
வாழ்வா? சாவா?: விண்கலம் ஏவப்பட்டு 33 நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 5இல் மறுபடி பூமிக்குத் திரும்புவதற்கான இயக்கத்தைத் தொடங்கும். அக்டோபர் 11இல் சான் டியேகோ நகருக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் வந்துவிழும். இரண்டு கைகளை வேகமாக உரசினால் உராய்வின் காரணமாக வெப்பம் உருவாகும்.
அதேபோல மணிக்கு 40,000 கி.மீ. வேகத்தில் திரும்பும் விண்கலம் பூமியைச் சுற்றியுள்ள காற்றில் உராய்ந்து தீப்பந்தாக மாறிவிடும். ஓரையன் விண்கலத்தைச் சுற்றி தீயைத் தாங்கும் பொருள் கொண்டு காப்பு செய்யப்பட்டுள்ளது. விண்கலத்தில் உள்ள பாராசூட்டுகள் அடுத்தடுத்து இயங்கி வேகத்தை மணிக்கு 32 கி.மீ. என்ற அளவுக்குக் குறைக்கிறதா எனவும் சோதனை செய்யப்படவுள்ளது.
சோதனையோட்டம்: மனிதர்கள் நிலவுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டிமிஸ் திட்டத்தின்
சோதனையோட்டம்தான் ஆர்டிமிஸ்-1. இதன்பிறகு வரும் 2024இல் மனிதர்களை ஏந்திய ஆர்டிமிஸ்-2 நிலவைச் சுற்றிவரும். பின்னர் விண்வெளி வீரர், கறுப்பின விண்வெளி வீரர் உள்ளிட்ட மூன்று பேரை ஆர்டிமிஸ்-3 ஏந்திச்சென்று நிலவில் தரையிறங்கும். 1972இல்தான் கடைசியாக மனிதர்கள் நிலவில் கால்பதித்தனர்.
ஆர்டிமிஸ் 1இல் மனிதர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்றாலும், மனித உருக்கொண்ட மூன்று பொம்மைகள் ஏந்திச் செல்லப்பட உள்ளன. இவை மனிதத் திசுவுடன் ஒப்பிடும்படியான ஒருவகை ஞெகிழிப் பொருட்களால் செய்யப்பட்டவை. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விண்வெளி வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடையை இவற்றில் ஒரு பொம்மை அணிந்திருக்கும். விண்வெளிக்குச் செல்லும்போது கூடுதல் விசை ஏற்படும், அதிர்வுகள் ஏற்படும்.
மனிதர்கள் செல்லும்போது இவற்றைத் தாங்குவது எப்படியென இந்தப் பொம்மையைக் கொண்டு ஆய்வு நடத்தி அறியப்படும். மற்ற இரண்டு பொம்மைகளில் ஒன்று கதிர்வீச்சுக் கவசத்துடனும் மற்றொரு பொம்மை கதிர்வீச்சுக் கவசம் இன்றியும் இருக்கும். இரண்டு பொம்மைகளிலும் ஏற்படும் கதிர்வீச்சுப் பாதிப்பை அளவீடு செய்து, விண்வெளி வீரர்கள் விண்வெளிப் பயணத்தில் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில்தான் அடுத்தடுத்த விண்வெளிப் பயணங்கள் அமையும்.
பெருங்கனவின் தொடக்கம்: நிலவின் தென்துருவத்தில் பனியாக உள்ள நீரைப் பயன்படுத்தி மனிதர்கள் தங்கி வேலைசெய்யும்படியான நிரந்தர நிலவுக் குடியிருப்பை ஏற்படுத்துவது, நிலவில் பயணம் செய்ய நிலவு வாகனம் தயாரித்துப் பரிசோதனைசெய்வது, நிலவை வட்டமடிக்கும்படி செயற்கைக்கோள்களைச் செலுத்தி, அங்கே இணைய வசதியை ஏற்படுத்துவது, நிலவில் விரவியுள்ள அருங்கனிமங்களை வெட்டியெடுத்துப் பூமிக்குக் கொண்டுவருவது; அதன் மூலம் விண்வெளி வணிகத்தை ஏற்படுத்துவது, நிலவில் ஏவுதளம் அமைத்துச் செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைக் கொண்ட விண்கலத்தை அனுப்புவது எனப் பல கனவுகள் கொண்ட திட்டம்தான் ஆர்டிமிஸ். எல்லா நீண்ட பயணங்களும் ஓரடியில்தான் தொடங்குகின்றன. அப்படிப்பட்ட பெரும் கனவின் முதல் அடிதான் ஆர்டிமிஸ்-1.
- த.வி.வெங்கடேஸ்வரன், விக்யான் பிரச்சார் முதுநிலை விஞ்ஞானி, தொடர்புக்கு: tvv123@gmail.com