

வேளாண்மை, கிராமப் பொருளாதாரம், வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என இந்தியாவை நீண்ட காலம் பாதித்துவரும் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்தத் துறைகள் சார்ந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளையும் பங்களிப்பையும் தந்த வேளாண் பொருளாதார நிபுணர் அபிஜித் சென் (72), சமீபத்தில் காலமானார். அபிஜித்தின் மறைவு பொருளியல் துறைக்கும் குறிப்பாக வேளாண்மை, கிராமப்பொருளாதாரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொருளியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்குப் பேரிழிப்பு.
பொருளியல் ஆர்வம்: சிறு வயதில் அபிஜித்துக்குப் பொருளியலில் ஏற்பட்ட ஆர்வம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அவரை உந்தித்தள்ளியது. ‘பொருளாதார வளர்ச்சிக்குத் தடையான வேளாண் நெருக்கடிகள்’ என்கிற தலைப்பில் அவர் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்விலிருந்து, முதன்மையாக ஒரு விவசாயப் பொருளாதார நிபுணராக அபிஜித் பரிணமித்தார்.
சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் மூன்று பத்தாண்டுகளைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில், விவசாயப் பிரச்சினைகள் வளர்ச்சிக்கான முதன்மைத் தடையாக இருக்கின்றன என்ற அவரது முன்மொழிவு இன்றும் பொருத்தமானதாக உள்ளது. விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானது மட்டுமல்ல, வறுமையைக் கையாள்வதற்கும் அவசியமானது; விவசாயப் பிரச்சினையின் வேர் இந்திய விவசாயத்தின் கட்டமைப்பில் உள்ளது என்பதால், தற்போதுள்ள விவசாயக் கட்டமைப்பில் அரசின் தலையீடு இல்லாமல் விவசாயப் பிரச்சினையின் தன்மைகள் மாற வாய்ப்பில்லை என்றார் அபிஜித்.
கற்பித்தலும் கொள்கை வகுப்பும்: டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ‘பொருளாதார ஆய்வு, திட்டமிடலுக்கான மைய’த்தில் 1985இல் சேர்ந்த அபிஜித், 2015இல் ஓய்வுபெறும் வரை அங்கு பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு அவருடைய மனைவி ஜயதி கோஷ், கிருஷ்ண பரத்வாஜ், பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், அமித் பாதூரி ஆகிய பொருளியலாளர்களுடன் இணைந்து வளர்ச்சிப் பொருளாதாரம், இந்தியப் பொருளாதார ஆய்வுகளுக்கான முன்னணி மையமாக அதை வளர்த்தெடுத்தார்.
வேளாண்மை, கிராமப்புறப் பொருளாதாரம், பிற பொருளாதாரப் பிரிவுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களால் அவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் மேற்கோள் காட்டப்பட்டுவந்துள்ளன. அபிஜித்தின் நாற்பதாண்டுகளுக்கு மேலான கற்பித்தல் பணியில் சஸெக்ஸ், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எஸெக்ஸ் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் கற்பித்ததும் அடங்கும். ஆராய்ச்சி, கல்விப் புலம் தாண்டி கொள்கை வகுப்பிலும் அபிஜித்தின் பங்கு அளப்பரியது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் அங்கமான, வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைப் பரிந்துரைக்கும் ‘விவசாயச் செலவுகள்-விலைகள் குழு’வின் (CACP) தலைவராக 1997இல் ஐக்கிய முன்னணி அரசு அபிஜித்தை நியமித்தது. அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நீண்ட கால தானியக் கொள்கைக்கான உயர் மட்ட நிபுணர் குழுவுக்குத் தலைவர் ஆக்கியது. விவசாயிகளை எப்போதும் மனதில் கொண்டிருந்த அபிஜித், வேளாண் துறை சார்ந்த குறிப்பிடத்தக்க ஆய்வறிக்கைகளை எழுதினார்.
பொதுவிநியோகத் திட்டத்தின் தீவிர ஆதரவாளரான அபிஜித், அத்திட்டத்தில் நாடு முழுவதும் அரிசி, கோதுமையைக் கொண்டுசெல்லத் தீவிரமாகப் பரிந்துரைத்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் அபிஜித் சென் சமர்ப்பித்த நீண்ட கால தானியக் கொள்கை அவருடைய பங்களிப்புகளில் முதன்மையானது. 2004, 2009 என இரண்டு முறை தேசிய திட்டக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அபிஜித்தின் பங்களிப்புகள் மேலும் விரிவடைந்தன. வேளாண்மை, கிராமப்புறக் கொள்கைகள் தவிர்த்து, பேரியல்பொருளாதாரக் கொள்கைகள், மத்திய - மாநில உறவு சார்ந்த இவருடைய திட்டக் குழுப் பரிந்துரைகள் பரவலான பாராட்டைப் பெற்றன. 14ஆவது நிதிக் குழுவிலும் அபிஜித் இடம்பெற்றிருந்தார்.
வறுமை, சமத்துவமின்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய அறிவும் வழிகாட்டலும் அதிகம் தேவைப்படும் இந்தக் காலகட்டத்தில், இவை சார்ந்த புதிய வெளிச்சத்தை அவர் தொடர்ந்து தந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
- சு.அருண் பிரசாத்
தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in