Published : 02 Sep 2022 06:40 AM
Last Updated : 02 Sep 2022 06:40 AM
புதிய தேசிய கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கி.கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 2019இல் 484 பக்கங்கள்கொண்ட தேசிய கல்விக் கொள்கை வரைவைச் சமர்பித்தது. 2020 ஜூலை 29 அன்று மத்திய கேபினெட் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
தேசிய கல்விக் கொள்கை 2020, அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியக் கல்வி அமைப்பை முற்றிலும் மாற்றி அமைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. அதற்கேற்ப தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்கல்வி, தொழிற்பயிற்சிக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்களுக்கு இந்தக் கல்விக் கொள்கை வித்திடுகிறது.
பள்ளிக் கல்வி அமைப்பு 10 2 ஆண்டுகள் என்பதற்குப் பதிலாக, 5 3 3 4 ஆண்டுகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும்; சம்ஸ்கிருதம், அயல்நாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று இந்தக் கல்விக் கொள்கை கூறுகிறது.
பள்ளிக் கல்வி முடித்தவர்களில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வோரின் விகிதத்தை 2035க்குள் 50 % ஆக அதிகரிப்பது இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்று. பட்டப் படிப்புக் காலம் நான்கு ஆண்டுகளாக மாற்றப்படும். இடையில் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் உரிய சான்றிதழுடன் வெளியேறலாம்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்க்கின்றன. பள்ளிகளில் மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்பது இந்தியைத் திணிப்பதற்கான முயற்சி என்றும், பட்டப்படிப்புகளில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் இடைநிற்றலை ஊக்குவிக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும் சர்ச்சை ஆகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தக் கல்விக் கொள்கை மாநிலங்களின் உரிமையைப் பறிப்பதாகச் சில மாநில அரசுகளும் கல்வியாளர்களும் விமர்சிக்கின்றனர்.
- நந்தன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT