

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தல் 25.10.1951 முதல் 21.02.1952 வரை 68 கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தலில் எந்தப் பாகுபாடுமின்றி 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
இத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட 2,23,611 வாக்குச்சாவடிகளில் 27,527 வாக்குச்சாவடிகள் பெண்களுக்காகப் பிரத்யேகமாக அமைக்கப்பட்டன. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு 17 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ள இந்தியாவில், அரசியலில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
இந்தியாவில் பெண்களுக்கான வாக்குரிமை நூறாண்டு வரலாறு கொண்டது. 1917இல், ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கோரி ‘உமன்ஸ் இந்தியன் அசோசியேஷன்’ குரல் எழுப்பியது. 1919இல் கொண்டுவரப்பட்ட ‘மான்டேகு செம்ஸ்போர்டு’ சீர்திருத்தங்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அம்சம் இடம்பெற்றிருந்தது. 1920இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
தொடர்ந்து 1921இல் சென்னை, பம்பாய் மாகாணங்களில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். முதல் தேர்தல் தொடங்கி 2019இல் நடைபெற்ற 17ஆவது தேர்தல் வரை, அரசியல் பங்கேற்பைவிட வாக்களிக்கும் ஆர்வம் பெண்களிடம் அதிகரித்தே வந்துள்ளது. பெண்களின் அரசியல் பங்கேற்பு ஆண்களைவிடக் குறைவு என்றபோதும், ஆண்களைவிட ஆர்வத்துடனும் கடமை உணர்வுடனும் வாக்களிக்கின்றனர். இந்த ஆர்வம் அனைத்து தேர்தல்களிலும் பிரதிபலிக்கிறது. ஆனால், அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
அரசியலுக்கு ஆண்கள்; ஆரத்திக்குப் பெண்கள்!
இந்தியாவின் மக்கள்தொகையில் பெண்கள் 49% பேர். பெண்கள் பல துறைகளில் இன்று அதிகார நிலையை எட்டியிருந்தாலும், அவர்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. இதற்கு எதிர்வினையாற்றப் பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை. ஆனால், பெரிய அரசியல் சக்தியாக அவர்களால் உருவெடுக்க முடியவில்லை என்பதற்குத் தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் ‘முக்கியத்துவமே’ உதாரணமாகும்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது. 2019இல் நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இது வெறும் 11% தான். பெண்களைப் பெருமளவில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய வரலாறு தமிழகத்துக்குக் கிடையாது.
2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்ட 800-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் 65 பேர்தான் பெண்கள். ஆதில் 3 பேர்தான் நாடாளுமன்றம் சென்றிருக்கின்றனர். திமுக 3 பெண்களுக்கும், அதிமுக ஒரு பெண்ணுக்கும் வாய்ப்பளித்தது. இத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு 41% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் 17 பேருக்கு வாய்ப்பு வழங்கியது; ஒடிசாவில் 33% ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
33% இடஒதுக்கீடு: ஒவ்வொரு தேர்தலின்போதும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு என்ற பேச்சு தீவிரமாக எழுவதுண்டு. ஆணும் பெண்ணும் சமம் என்று அரசமைப்பு சொல்லும் நாட்டில் உள்ஒதுக்கீடாக நாடாளுமன்றத்தில் தொடங்கி எல்லா அமைப்புகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் எனப் பெண்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.
இக்கோரிக்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக ஆக்கப்படும் என்று தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனால், 33% என்பதைச் சட்டமாக்காமல் அதே அரசியல் கட்சிகள் தடுத்துவருகின்றன. சட்டமின்றிப் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய முடியும் என்றாலும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கவில்லை.
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 12 பெண்களுக்கும், 171 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 15 பெண்களுக்கும் வாய்ப்பளித்தன. பெண் வேட்பாளர்களுக்கு வாக்காளர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைப்பதில்லை என்றே காரணம் கூறப்படுகிறது. ஆனால், சட்டமன்றத்திற்குப் பலமுறை தேர்வாகி மக்கள் பிரச்சினைகளை உரக்கப் பேசிய பல பெண் உறுப்பினர்களும் உண்டு என்பதை மறுக்க முடியாது.
உள்ளாட்சி அமைப்புகளின் நிலை...: நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் நிலை இப்படியிருக்க, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%இல் இருந்து 50%ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.என்றபோதும், இதனால் எந்தப் பலனும் இல்லை என்பதே உண்மை. அரசியல் கட்சிகள் இல்லாத கிராமங்களே இன்று இல்லை.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது மட்டும் கிராமங்களில் கவனம் செலுத்திய அரசியல் கட்சிகள், இன்று உள்ளாட்சியிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஒன்றியம் என்ற அளவில் மொத்தமுள்ள பதவிகளில் 66,229 பதவிகள் பெண்களுக்கென உறுதிசெய்யப்பட்டுள்ளன.
முதன்முதலாக 33% இடஒதுக்கீடு பெற்று உள்ளாட்சி அமைப்புப் பணிகளில் பெண்கள் அமர்த்தப்பட்டபோது அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களின் மனைவி, உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களாகவே இருந்தனர்.
உள்ளாட்சித் தேர்தல்களில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டைக் காட்டிலும் பெண்களுக்குச் சாதகமான பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள், அவர்களில் தமக்கு அறிமுகமானவர்கள் பலர் என்ற நிலையில் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்துப் பேசி வெற்றியைப் பெண்கள் உறுதிசெய்துகொள்ள முடியும். அந்தந்தப் பகுதியில் உள்ள பட்டதாரிப் பெண்கள் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
அரசியல் சார்ந்த குடும்பங்களிலிருந்து தேர்தல் களம் காணும் பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை. கணவர், உறவினர்களின் உத்தரவுக்குக் காத்திருக்கும் பொம்மைகளாகவே செயல்பட வேண்டியுள்ளது. இந்நிலை மாற ஆண் அரசியல்வாதிகளைச் சார்ந்திருக்காத பெண்கள் தேர்தலில் களமிறங்க வேண்டும்.
- பெ.சுப்ரமணியன்
தொடர்புக்கு: psmanian71@gmail.com