Published : 31 Aug 2022 06:10 AM
Last Updated : 31 Aug 2022 06:10 AM
பெண்கள் கல்வி கற்பது பெரும்பாதகச் செயலாக கருதப்பட்ட காலகட்டத்தில் சாவித்திரிபாய் புலே, தான் தொடங்கிய பள்ளியில் பல்வேறு எதிர்ப்புகளை மீறிப் பெண்களுக்குக் கல்வி புகட்டினார். இப்படியான சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் சுதந்திரத்துக்கு முன்பே பெண்கள் சிறிதளவு கல்விபெறத் தொடங்கியிருந்தனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கப்படும் கல்வி சமமானதாக இருக்க வேண்டியதன் அவசி யத்தை நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பெண் கல்விக்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் வலியுறுத்தின.
கோத்தாரி கல்விக் குழு (1964), தேசிய கல்விக் கொள்கைகள் (1968, 1986) ஆகியவை பெண்கல்வியை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தன. கல்வியின் மூலமாகவே பெண்களை பாலின ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்ற புரிதலை இந்தக் கல்விக் கொள்கைகள் வெளிப்படுத்தின.
‘பாலிகா சம்ருத்தி யோஜனா’ (1997) என்னும் திட்டம் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
2001இல் 6 முதல் 14 வயதிலான அனைவருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் வகையில் அரச மைப்பில் மேற்கொள்ளப்பட்ட 86ஆம் திருத்தம் இந்தியக் கல்வியில் ஒரு மைல்கல் தருணம். இந்த அரசமைப்பு திருத்தத்துக்கு பிறகான நடவடிக்கைகள் மூலம் பெண்கள் கல்வி பெறுவது மென்மேலும் அதிகரித்தது.
அனைவருக்கும் கல்வி அளிக்கும் இலக்கை அடைவதற்காக தொடங்கப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (சர்வ சிக்ஷா அபியான்) கீழ் பெண் கல்விக்கென்றே பிரத்யேகமான பல திட்டங்கள் தொடங்கப்பட்டன. பெண்களின் தொடக்கக் கல்விக்கான தேசிய திட்டம் (2003) சமூக, பொருளாதாரரீதியாக பிற்பட்ட பெண் குழந்தைகளுக்கு 1-8ஆம் வகுப்புவரை கல்வி அளிப்பதற்கானது.
‘கஸ்தூர்பா காந்தி பால விகாஸ் வித்யாலயா’ திட்டத்தின்கீழ் (2004) பெண் குழந்தைகளுக்கான உண்டு உறைவிடத் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் பட்டியலின பழங்குடிப் பெண் குழந்தைகளுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
1951இல் இந்தியப் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 8.9% ஆக இருந்தது. இது 2011இல் 65 சதவீதமாக உயர்ந்து, இப்போது 70%ஐக் கடந்துள்ளது. ஆனால் ஆண்களின் எழுத்தறிவு விகிதத்துக்கும் பெண்களுக்கான எழுத்தறிவு விகிதத்துக்கும் இடையே 10 சதவீதத்துக்கு மேல் இடைவெளி உள்ளது. பெண் கல்விக்கான திட்டங்களும் அரசு நடவடிக்கைகளும் மென்மேலும் தேவைப்படுவதை இது உணர்த்துகிறது.
- நந்தன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT