Last Updated : 31 Aug, 2022 06:05 AM

 

Published : 31 Aug 2022 06:05 AM
Last Updated : 31 Aug 2022 06:05 AM

சுதந்திரச் சுடர்கள் | கலை: பரதம் என்றால் பாலசரஸ்வதி

பரதநாட்டியத்தை உலக மேடைகளுக்கு கொண்டு சேர்த்த பெருமை தஞ்சாவூர் பாலசரஸ்வதிக்கு உண்டு. இசை வேளாளர் பரம்பரையில் வந்த வீணை தனம்மாளின் பேத்தி பாலசரஸ்வதி.

டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு - மேற்குக் கலைகளின் சந்திப்பு நிகழ்ச்சியில் பாலாவின் நடனம், எடின்பரோவில் நடந்த இசை நாட்டிய விழாவில் பாலசரஸ்வதியின் நடனம் போன்றவை மேற்குலக நாடுகளில் பரதக் கலைக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.

அந்த தேசத்து ரசிகர்களுக்கு பாட்டின் மொழி வெளிப்படுத்தும் அர்த்தங்கள் புரியாவிட்டாலும் பாலாவின் அபிநயங்கள், அவரின் கலையோடு உணர்வுரீதியாக ரசிகர்களை ஒன்றவைத்தது.

சின்ன மேளம் என்று ஆலயங்களில் இறைவனுக்கு முன்பாக நிகழ்த்தப்பட்ட ஆடற்கலையை, அந்த சம்பிரதாயத்தைச் சிதைக்காமலும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமலும் மேடையிலும் நிகழ்த்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் பாலா.

அந்தக் காலத்தில் பரதநாட்டியத்தில் புகழோடு விளங்கிய கௌரியம்மாள், லட்சுமி நாராயண சாஸ்திரி போன்ற நாட்டிய மேதைகள் பாலசரஸ்வதியின் நாட்டியத் திறமையை பட்டைதீட்டியவர்கள். பிரபல நட்டுவனார் கந்தப்ப பிள்ளையிடம் நேரடியாக பாலசரஸ்வதி நடனம் பயின்றார்.

தனக்குக் கற்றுக்கொடுத்த குருமார்களின் வழியை அப்படியே பிரதிபலிக்காமல், அதில் தன்னுடைய மேதாவிலாசத்தையும் வெகு சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் திறன் படைத்தவர் பாலா. அவருடைய நாட்டியத்தில் பக்தியும் இருக்கும். சிருங்கார ரசமும் இருக்கும். அதனால்தான் அவருடைய கலை இன்றைக்கும் உதாரணமாகப் பேசப்படுகிறது.

பிரபல திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய், பாலசரஸ்வதி குறித்த ஆவணப்படத்தை ‘பாலா’ என்னும் பெயரிலேயே எடுத்துள்ளார். ‘உலகின் உன்னதமான நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவர்’ என்று நியூயார்க் டைம்ஸின் கலை விமர்சகர் அன்னா கஸ்ஸல்கஃப்பால் பாராட்டப்பட்டவர் பாலசரஸ்வதி.

பாலசரஸ்வதியின் நடனப் பாணி அவருடைய மகள் லட்சுமி நைட், பேரன் அநிருத்தா வரை அவருடைய குடும்பத்தில் நீண்டிருக்கிறது. இது தவிர, அவரிடம் நேரடியாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்கள், வெளிநாடுகளிலிருந்து அவரிடம் நடனம் கற்றுக் கொண்டவர்கள் என அவருடைய நடன பாணி உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

- வா.ரவிக்குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x