

‘உடனுக்குடன் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் அமைதியாக இருந்த சென்னை மாநகரம், போக்குவரத்து நெருக்கடிமிகுந்த அலங்கோல நரகமாக மாறிவிட்டது.
இதை மாற்றியமைப்பதற்கு ஒரு வல்லுநர் குழு அமைத்து, உடனடி ஏற்பாடுகளை மேற்கொள்வோம்’ என்று 1989 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்தது (மிகக் குறுகிய காலமே அந்த ஆட்சி நீடித்தது); 1996 தேர்தல் அறிக்கையில் இதே வாக்குறுதி ஒரு சொல்கூட மாறாமல் இடம்பெறும் அளவுக்குச் சென்னையில் போக்குவரத்து நெருக்கடி முற்றிப்போயிருந்தது. அப்போது ஆட்சிக்குவந்த திமுக, போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக நகரமெங்கும் 9 மேம்பாலங்களைக் கட்டி, ‘மேம்பாலங்களின் நகர’மாகச் சென்னையை மாற்றியது.
அது தற்காலிகத் தீர்வாக அமையவே, ‘சென்னை மாநகரிலே போக்குவரத்து நெருக்கடிக்குப் பெரிதும் உள்ளாகியுள்ள பகுதிகளில் ‘பறக்கும் சாலை’ திட்டத்தைச் செயல்படுத்துவோம்’ என்று 2006 தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்தது. இருந்தும், 1989ஐப் போலவே சென்னை ‘அலங்கோல நரக’மாகவே தொடரும் நிலையில், 2021 தேர்தல் அறிக்கையிலும், ‘சென்னைப் பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தேவையான இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்கள் கட்டப்படும்’ என்று திமுக மீண்டும் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் அண்ணா சாலையில் அமையவுள்ள உயர்மட்ட மேம்பாலத்தோடு, மேலும் சில மேம்பாலங்களை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆனால், 383ஆவது சென்னை தினம் கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், சென்னை போக்குவரத்து எப்படி இருக்கிறது?
சென்னைப் பெருநகரத்தின் உத்தேச மக்கள்தொகை ஒரு கோடியைத் தொடும். அதற்கு இணையாக பொதுப் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. மாறாக, கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி உயர்ந்திருக்கிறது. சென்னையின் அசுர வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையிலான கட்டமைப்பை மேம்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை அம்சங்களில் எதிரொலிப்பதால், அவை மக்களின் அன்றாட வாழ்வில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது சென்னை நகரமெங்கும் ‘போர்க்கால அடிப்படையில்’ நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் கட்டுமானமும், மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளும் அத்தியாவசியப் பணிகளுக்குக்கூட சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சென்னைவாசிகளை அச்சத்தில் தள்ளி உள்ளன; பாதசாரிகள் என்ற பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றி பேச்சுக்குக்கூட யாரும் கவலைப்படுவதில்லை. காலை, மாலை ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் சாலையில் காலை வைக்கவோ, வாகனத்தை எடுக்கவோ அஞ்சும் நிலைதான் பெரும்பாலோரிடம் இருக்கிறது.
மழைநீர் வடிகால் பணிகள்
2015இல் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளம், நகர உள்கட்டமைப்பின் பரிதாப நிலையைப் பட்டவர்த்தனமாகக் காட்டியது. கடந்த ஆண்டு பெய்த கனமழையும்கூட முந்தைய வெள்ளத்தின் தடத்தைக் காண்பித்துச் சென்றது. இந்நிலையில், சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அமைக்கப்பட்ட ‘திருப்புகழ் குழு’ அறிக்கையின் அடிப்படையில், 2021இல் மழைநீர் தேங்கிய இடங்களில் ரூ.186 கோடி மதிப்பீட்டில் 45.23 கி.மீ. நீளத்திற்குச் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறைந்தது 12 மாதங்கள் தேவைப்படும் இப்பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக அரசு கூறுகிறது.
வெள்ளத் தடுப்புப் பணிகள் முக்கியம்தான்; ஆனால், போக்குவரத்து வசதிகளுக்கான எந்த மாற்று முன்னேற்பாடுகளும் இன்றி, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளுக்காகப் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்கள் எனப் பல தரப்பினரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. பிற துறைகளின் ஒருங்கிணைப்பின்றி பள்ளம் தோண்டப்படுவதால், குடிநீர்-கழிவுநீர்க் குழாய்கள் உடைப்பு, மின்சாரக் கம்பிகள் அறுந்துபோதல் போன்ற இடையூறுகள் மட்டுமின்றி, முறையான தடுப்புகள் இல்லாமல் பாதுகாப்பு அச்சுறுத்தலும் நிலவுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சென்னைவாசிகளுக்குப் பள்ளங்கள் புதியவை அல்ல; அதன் வரலாறு 100 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் செல்கிறது. மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், தொலைத்தொடர்புத் துறை என ஒவ்வொரு துறையும் தங்கள் பங்குக்கு ஆண்டு முழுவதும் பள்ளங்களைத் தோண்ட, சென்னை ‘ஒரு நிரந்தர அகழாய்வுத் தள’மாகவே மாறிவிட்டிருக்கிறது.
வாகனப் பெருக்கம் போக்குவரத்தை ஏற்கெனவே சிக்கலாக்கியிருக்கும் நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் கிட்டத்தட்ட இல்லாமலாகிவிட்ட சாலைகளால், வாகன ஓட்டிகள் நாள்தோறும் ஸ்தம்பித்து நிற்பது தொடர்கிறது. மற்றொருபுறம் 2026 வரை உத்தேசிக்கப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளால் போக்குவரத்து நெருக்கடி குறித்த அச்சம் சென்னைவாசிகளிடையே தீவிரமடைந்திருக்கிறது.
அதிகரித்துவரும் வாகன நெரிசலை நெறிப்படுத்தி, போக்குவரத்தைச் சீராக்கும் பரிசோதனை முயற்சிகளை சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை அவ்வப்போது மேற்கொண்டுவருகிறது. சென்னையின் முதன்மைத் தடமான அண்ணா சாலையில் பரிசோதனை நடவடிக்கையாகச் சில மாதங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட போக்குவரத்து மாற்றங்கள், நெரிசலைக் குறைப்பதற்குப் பதில் அதிகரிக்கவே செய்திருக்கின்றன.
இந்தச் சாலைக்கான அணுகு சாலைகளில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் சந்திப்புகளைக் கடக்க, வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் எடுப்பதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல் பாதசாரிகள் எந்தவகையிலும் சந்திப்புகளைக் கடக்க முடியாத சூழலே நிலவுகிறது. பாதசாரிகள் தரப்பினரைப் பற்றி போக்குவரத்து மாற்றங்கள் பெரும்பாலான நேரம் கவலைப்படுவதில்லை. ‘அண்ணாசாலை பரிசோதனை’ மோசமான தோல்வியாகத் தொடரும் நிலையில், இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் போக்குவரத்துக் காவல் துறை எந்தப் பரிசீலனையும் செய்வதாகத் தெரியவில்லை.
சிரமங்களும் தீர்வுகளும்
சென்னைப் பெருநகரின் இன்றைய பிரச்சினைகள் அனைத்தும் திட்டமிடப்படாத, முறைப்படுத்தப்படாத வளர்ச்சியின் விளைவுகளே. ஆனால், சென்னையின் வளர்ச்சி என்பது 1976 தொடங்கி ‘மாஸ்டர் பிளான்’களின் அடிப்படையில் நடைபெற்றுவருகிறது.
இரண்டாம் மாஸ்டர் பிளானின் திட்டக் காலம் 2026இல் முடிவடையவிருக்கும் நிலையில், 2026-2046 காலகட்டத்துக்கான மூன்றாம் மாஸ்டர் பிளானுக்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி, சிங்காரச் சென்னை 2.0 ஆகிய திட்டப் பணிகளும் சென்னையை மேம்படுத்துவதற்காகத் தீட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் ஓர் அங்கமாகவே மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில் பணிகள் நகரெங்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
‘நிரந்தரத் தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்; தற்காலிகச் சிரமங்களை மக்கள் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என இடையூறுகள் குறித்து அரசு விளக்கமளிக்கிறது. நிரந்தரத் தீர்வுக்கான நீண்டகாலத் திட்டங்களை அரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அந்த நீண்டகாலப் பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் மக்கள் கொடுக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல என்பதை அரசு கவனத்தில் கொண்டாக வேண்டும். திட்டங்களின் காலத்தைப் பொறுத்து அவற்றுக்குத் தகுந்த முன்னேற்பாடுகளை வகுத்து, மேம்பாட்டுத் திட்டங்கள் சார்ந்து ஏற்படும் சிரமங்களை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!
- சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in