

இந்திய ஹாக்கி அணியை உலக அரங்கில் தலைநிமிர வைத்தவர் மேஜர் தியான் சந்த். பிரிட்டிஷ் ராணுவத்தில் 16 வயதிலேயே இணைந்து பணியாற்றினார். சிறு வயது முதலே ஹாக்கியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த தியான் சந்த், ராணுவத்தில் சேர்ந்த பிறகும் ஹாக்கியில் ஆர்வத்துடனேயே இருந்தார்.
1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில்தான் ஹாக்கி முதன்முதலாகச் சேர்க்கப்பட்டது. அந்த அறிமுக ஒலிம்பிக்கிலேயே இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. இத்தொடரில் 5 போட்டிகளில் 14 கோல்களை அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார் தியான் சந்த். தொடர்ந்து 1932 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வெல்ல அவர் காரணமாக இருந்தார். 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகக் களமிறங்கிய தியான் சந்த், இந்தியாவுக்குத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
ஜெர்மனிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியைக் காண அந்நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர் வந்திருந்தார். இப்போட்டியில் 6 கோல்களை அடித்த தியான் சந்தின் ஆட்டத்தைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவரை ஜெர்மனி ராணுவத்தில் சேர அழைப்பு விடுத்த வரலாறும் உண்டு. ஆனால், தியான் சந்த் அதற்கு மறுப்பு தெரிவித்தார். என்றாலும் ‘ஹாக்கி மாயாவி’ (Wizard of Hockey) என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கி ஹிட்லர் கௌரவப்படுத்தினார்.
இந்த ஒலிம்பிக்கிற்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகியிருந்த தியான் சந்த், 1956இல் மேஜர் பதவியோடு இந்திய ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார். பிறகு இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராகச் சிறிது காலம் இருந்தார். தியான் சந்தின் பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய விளையாட்டுத் தினமாகக் (ஆகஸ்ட் 29) கொண்டாடப்பட்டுவருகிறது. தேசிய அளவில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘கேல் ரத்னா விருது’ம் இவருடைய பெயரிலேயே வழங்கப்படுகிறது.
- மிது