தரச் சரிவிற்குத் தள்ளப்படும் பல்கலைக்கழகங்கள்?

தரச் சரிவிற்குத் தள்ளப்படும் பல்கலைக்கழகங்கள்?
Updated on
3 min read

மத்தியக் கல்வி அமைச்சகம் ஜூலை 15 அன்று வெளியிட்ட தேசியத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் 32 கல்லூரிகள், 21 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவற்றால் ‘நாக்’, என்.ஐ.ஆர்.எஃப்., என்.பி.ஏ. ஆகிய தரமதிப்பீட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

அவை இந்தியாவிலுள்ள கல்லூரிகள் ஆகியவற்றுக்கான தரமதிப்பீடு, தரவரிசை ஆகியவற்றை வழங்குகின்றன. ஏஐசிடிஇ-இல் என்.பி.ஏ. தரமதிப்பீட்டின்படி, குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கும் அதிகபட்சமாக ஆறு ஆண்டுகளுக்கும் தரமதிப்பீட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது வரை 84% உயர்கல்வி நிறுவனங்கள் தரமதிப்பீடு பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள 1,043 பல்கலைக்கழகங்களில் 446 பல்கலைக்கழகங்கள் தனியார் நடத்துபவை. ‘நாக்’ தரச்சான்று, என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசை, துறைகளுக்கான என்.பி.ஏ. தரமதிப்பீட்டில் 69% தனியார் பல்கலைக்கழகங்கள் ‘நாக்’, என்.ஐ.ஆர்.எஃப்., என்.பி.ஏ. ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தரவரிசை நிலைகளைப் பெற்றிருக்கின்றன.

மத்தியக் கல்வி அமைச்சகம், 2017 மார்ச் 20 அன்று வெளியிட்ட நெறிமுறையின்படி, உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏ , ஏ , பி , பி , பி, சி ஆகிய தர மதிப்பீடுகளில் ‘நாக்’ தரச்சான்று வழங்கப்பட்டுவருகிறது.

சுய ஆய்வு அறிக்கை: கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தரச்சான்று பெறுவதற்குச் சுய ஆய்வு அறிக்கை ஒன்றினை நாக் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏழு அளவுருக்களின் அடிப்படையில் அமைந்த கேள்விகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் பதிலளிக்க வேண்டும்.

அவற்றுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஏ முதல் சி வரை தரச்சான்று வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்திலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தகுதி அடிப்படையில் இந்தத் தரவரிசைகளில் இந்திய அளவில் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கின்றன.

தற்போது தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்பது பல்கலைக்கழகங்களுக்கு ஏ , ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு ஏ , 16 பல்கலைக்கழகங்களுக்கு ஏ தரவரிசை நிலை ‘நாக்’-ஆல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ எதிர்த்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் அரசு உயர்கல்வி நிறுவனங்கள் இனிவரும் காலத்தில் உயர்ந்த தரவரிசையைப் பெறுவது மிகப்பெரிய கேள்விக்குறியாகியிருக்கிறது.

கல்விக் கொள்கை அடிப்படையில் தர ஆய்வு

ஜூலை 13 அன்று நாக் வெளியிட்ட அறிவிப்பில் உள்ள ‘White Paper – An initiative for improving quality in Higher Education – Roadmap for implementation’ஐக் கண்டு, பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் கல்லூரி முதல்வர்களும் விழிபிதுங்கி நிற்கின்றனர். அதில் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ மேற்குறிப்பிட்ட ஏழு அளவுருக்களிலும் எந்த அளவிற்கு உயர்கல்வி நிறுவனங்கள் அமல்படுத்த வழிமுறைகளைச் செய்துள்ளன எனப் பல்வேறு கேள்விகள் உள்ளன.

தேசியக் கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி கற்பித்தல், ஆராய்ச்சி - மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம் - பிறவற்றைச் செயல்படுத்தாமல் இருந்தால், அந்தக் கேள்விகளுக்குச் சுய ஆய்வு அறிக்கையில் ‘இல்லை’ என்றே குறிப்பிட வேண்டியிருக்கும்.

அதனால் பெறப்படுகின்ற மதிப்பெண்கள் பூஜ்யமாக இருக்கும். மொத்தம் 1,000 மதிப்பெண்களுக்கு, தேசியக் கல்விக் கொள்கை 2020இன் வழிமுறைகளைச் செயல்படுத்தாமலிருக்கும்போது ஏ , ஏ , ஏ பெறும் வாய்ப்புகள் அரிதாகிவிடும். தற்போது உள்ள ஏ , ஏ , ஏ பெற்று இந்தியாவிலேயே உயர்ந்த தரவரிசையில் இருக்கும் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களின் நிலை தலைகீழாக மாறிவிடும். மார்ச் 23 அன்று ‘நாக்’ வெளியிட்ட அறிக்கை, தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை அமல்படுத்த கல்வி நிறுவனங்கள் எடுத்த நடவடிக்கைகளைக் கோரியுள்ளது.

இதனால் எந்த விதத்திலும் கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கையின் வரைமுறைகளைப் பின்பற்றாமல் இருக்க முடியாது என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், ஆகஸ்ட் 11 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ்குமார், அனைத்துப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு (CUET) நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அபாயத்தில் அரசுப் பல்கலைக்கழகங்கள் : பல்கலைக்கழகங்களின் வேந்தர், துணைவேந்தர்கள் மாநாடுகளைத் தமிழக ஆளுநர் நடத்தியுள்ளார். பட்டமளிப்பு விழாக்களிலும், மாநாடுகளிலும் தேசியக் கல்விக் கொள்கையினை அமல்படுத்துவது கட்டாயம் என்பதோடு, செயல்படுத்தியதற்கான அறிக்கையினைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்க அவர் வலியுறுத்தியுள்ளார். மறுபக்கம், மாநிலக் கல்வி அமைச்சகமும், கல்வித் துறையும், தேசியக் கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர்.

இதனால் மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ்குமார், தேசியக் கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தியதற்கான அறிக்கையினைச் சமர்ப்பிக்க நாள் குறிப்பிட்டு, துணைவேந்தர்களுக்கு நாளும் ஒரு சுற்றறிக்கை அனுப்பிவருகிறார். என்ன செய்வது என்று அறியாமல் துணைவேந்தர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

ஏனென்றால், பல்கலைக்கழக மானியக் குழுவின் மேற்கண்ட திட்டங்களை, துணைவேந்தர்கள் தாங்களாக முடிவெடுத்து, பல்கலைக்கழகத்திலும், அதன் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளிலும் அமலுக்குக் கொண்டுவர முடியாது. தேசியக் கல்விக் கொள்கை 2020 வரைவுகளைப் பாடத்திட்டக் குழு, கல்விக் குழு, ஆட்சிமன்றக் குழு, ஆட்சிக் குழுவில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்படுத்த முடியும்.

இக்குழுக்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநில அரசால் நியமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர். இரு வேறு கருத்துகள் கொண்டவர்களை உள்ளடக்கிய அவையில் தேசியக் கல்விக் கொள்கை செயலாக்கத்திற்கு, அதன் தலைவரான துணைவேந்தர் எப்படி முடிவெடுப்பார்? என்ன முடிவெடுப்பார்?

மற்றுமொரு இக்கட்டு: தமிழகம் ‘நீட்’ தேர்விற்கு முடிவுகட்டப் போராடினாலும், தேர்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அடுத்த ஆண்டு நீட் இருக்காது என ஒவ்வோர் ஆண்டும் பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்த்து ஏமாறுவதும், இழப்புகளை எதிர்கொள்வதுமான நிலைதான் உள்ளது. நீட்-ஐத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த முடியாமல் ஆண்டுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

சில மாநிலங்களின் எதிர்ப்புகளைத் தாண்டி நீட் தேர்வை மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல் தேசியக் கல்விக் கொள்கை 2020ஐயும் மத்திய அரசு அமல்படுத்தும். அதற்கான உதாரணம்தான் ‘நாக்’, என்.ஐ.ஆர்.எஃப்., என்.பி.ஏ.யின் தரமதிப்பீடு. தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு மதிப்பெண்களும், தரவரிசையும் வழங்குவதற்கு ஏதுவாக தரமதிப்பீடு வரைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. அதனால், உயர்ந்த தரவரிசையான ஏ , ஏ , ஏ பெற வேண்டுமென்றால், தேசியக் கல்விக் கொள்கையைக் கட்டாயம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலைக்குப் பல்கலைக்கழகங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உயர் கல்வியில் உயர்வு தடைபடாமல் இருக்க ஏதுவான முடிவுகளை மாநிலக் கல்வித் துறை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், ஆண்டுகள் கடக்கும்போது, உயர் கல்வியும் அதன் அங்கங்களான பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், பொதுமக்கள், மாநில அரசின் மீது குறை சொல்வதையும், ஏமாற்றமடைவதையும் தடுக்க இயலாது.

- க.திருவாசகம் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

தொடர்புக்கு: vc@ametuniv.ac.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in