

இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பொதுவுடைமை அரசின் முதல்வர் இ.எம்.எஸ். என்றழைக்கப்படும் இளங்குளம் மணக்கல் சங்கரன் நம்பூதிரிபாட். அரசியல் வாதி, சமூக சீர்த்திருத்தவாதி, எழுத்தாளர் எனப் பன்முகப் பங்களிப்பைத் தந்தவராக இவர் அறியப்படுகிறார்.
கேரளத்தின் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த இ.எம்.எஸ்., சமூகத்தில் நிலவிய சாதிப் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்த்து வலுவாகக் குரல் கொடுத்தார். சாதி ஒழிப்புக்காகப் போராடிய இயக்கங்களில் தம்மை இணைத்துக்கொண்டார்.
பின்னர் காங்கிரஸில் இணைந்து, உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1934இல் ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி'யின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். 1934 முதல் 1940 வரை அதன் அகில இந்திய இணைச் செயலாளராகப் பணியாற்றினார். 1939இல் சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்.
ஏழைத் தொழிலாளர்களின் நலன் நோக்கி அவரது கவனம் திரும்பியபோது, பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கேரளத்தில் ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி’யைக் கட்டியெழுப்பினார்.
பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக 1957 இல் அதிகப் பெரும்பான்மையுடன் தேர்தலில் வென்று, இந்தியாவில் முதல் பொதுவுடைமை மாநில அரசை அமைத்து, வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். முதல்வராகப் பொறுப்பேற்று கல்வி, நிலச்சீர்திருத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். இந்திய அரசமைப்பு கூறு 356ஐப் பயன்படுத்தி இவருடைய ஆட்சி 1959இல் கலைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை நேரு அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தியது.
அடுத்துவந்த ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவராகச் சிறப்பாகச் செயலாற்றிய இ.எம்.எஸ்., 1967இல் இரண்டாவது முறையாக கேரளத்தின் முதல்வரானார். மாநிலத்தில் அதிகாரம் - வளங்களைப் பரவலாக்குவது, 100 சதவீத எழுத்தறிவைக் கொண்டுவருவது ஆகியவை அவருடைய முக்கிய நோக்கங்களாக இருந்தன.
பொதுவுடைமைக் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் இ.எம்.எஸ். அந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே மத்தியக்குழு, அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்.எஸ்., இறுதிவரை அந்தப் பதவிகளை வகித்தார்.
அரசியல்வாதியாக மட்டுமின்றி ஓர் எழுத்தாளராகவும் ஏராளமான படைப்புகளை அளித்திருக்கிறார். மலையாளம், ஆங்கிலம் ஆகியவற்றில் அவர் எழுதிய நூல்கள் ‘இ.எம்.எஸ்., சஞ்சிகா' என்கிற பெயரில் வெளியிடப்பட்டன. ‘கேரளத்தின் வரலாறு', ‘வேதங்களின் நாடு', ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' உள்ளிட்ட நூல்கள் புகழ்பெற்றவை. 89 வயதில் இறக்கும் வரை இயக்கத்துக்காக எழுதிக்கொண்டிருந்தார். இன்றும் பொதுவுடைமைக் கட்சியினரை எழுத்துகளாலும் சிந்தனையாலும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.
- ஸ்நேகா