Published : 29 Aug 2022 06:30 AM
Last Updated : 29 Aug 2022 06:30 AM

சுதந்திரச் சுடர்கள் | நாடாளுமன்றம்: இந்திய ஜனநாயகத்தின் கண்ணாடி

கே.கே.கத்யால்

வடிவம் இன்னமும் மாறவில்லை. கம்பீரமான குவிமாடம், அரை வட்ட வடிவத்திலான அறைகள், மரத்தால் செய்யப்பட்ட அழகிய மேஜைகள். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே கட்டிடத்தில்தான் அமைந்துள்ளன. காலையில் கூட்டங்கள் தொடங்கிவிடும்.

கடந்த 47 ஆண்டுகளாக இப்படித்தான் நாடாளுமன்றம் செயல்படுகிறது. அவைக்குத் தலைமை வகிக்க அவைத் தலைவர் வருகிறார் என்பதை, அவைக் காவலர்களின் தலைவர் உரத்த குரலில் கட்டியமாகக் கூவி அறிவிப்பார். அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து தலை தாழ்த்தி அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். இவை தவிர ஏனைய அம்சங்கள் நாளாகநாளாக மாறிக்கொண்டே வருகின்றன.

மக்களவையின் 545 இருக்கை களிலும் மாநிலங்களவையின் 244 இருக்கைகளிலும் புதிய முகங்கள் அலங்கரிக்கின்றன. உறுப்பினர்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதும் பிறகு பதவியிழப்பதும் தொடர்கிறது. மிகச் சிலர்தான் அபூர்வமாகத் தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றனர்.

இந்தக் காலகட்டத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையும் எதிர்க் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையும் உயர்வதும் தாழ்வதுமாக மாறிமாறி நிகழ்கின்றன. இந்தியா முழுவதும் வாழும் கோடிக்கணக்கான வாக்காளர்களின் கூட்டு முடிவுக்கேற்ப ஆளும் – எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறிக் கொண்டேயிருக்கிறது. நாடாளுமன்ற அவைக் கூட்டங்கள் உண்மையிலேயே உற்சாகம் அளிப்பவை – நாட்டின் வரலாறை அசலாகக் காட்டுகிற இடம் நாடாளுமன்றம்.

மாறிவரும் தோற்ற வடிவம்

நாடாளுமன்றத்தின் தோற்ற வடிவமானது கடந்த பல ஆண்டுகளாக மாறிக்கொண்டே வந்திருக்கிறது. அது அப்படித்தான் மாறியாக வேண்டும். உயிர்ப்புள்ள நிறுவனம் என்கிற வகையில், அரசியலின் இயக்கவியலுக்கு ஏற்ப அதுவும் மாற வேண்டும். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டுத் தரத்திலும் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் தொடக்கக் காலத்தில் முக்கிய முடிவுகள் அனைத்துமே நன்கு விவாதிக்கப்பட்டு, பிறகு கருத்தொற்றுமை அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன. அந்த நடைமுறை இப்போது நொறுங்கிவிட்டது. புதிதுபுதிதாகப் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

ஆமாம், நாடாளுமன்றத்தின் பெரும் பாலான அம்சங்கள் மாறிவிட்டன, அதன் செயல்பாட்டின் தரமும்கூட. ஆம், எல்லாரும் பொதுவாக நம்புவதைப் போல அதன் தரத்திலும் சரிவு ஏற்பட்டுவருகிறது. ஆனால் இப்படிச் சொல்லும்போது அவரவர் கண்ணோட்டத்தில், அளவுக் கதிகமாக இதைப் பொதுமைப்படுத்தி ‘இப்படித்தான்…’ என்று அறுதி யிட்டுக் கூறிவிடுகிறார்கள். இது நாடாளுமன்றத்தைப் பற்றிய கண்ணோட்டத்தைச் சற்றே திசைதிருப்புகிறது.

நாடாளுமன்ற விவாதங்களில் கண்ணியமான பேச்சு குறைந்து வருகிறது, நாடாளுமன்ற மரபுகளை எல்லா தருணங்களிலும் கடைப்பிடிப்பதில்லை என்பதெல்லாம் உண்மைதான். அவையை ஒழுங்காக நடத்தவிடாமல் கூச்சலும் இடையூறுகளும் அதிகரிப்பதால் அவையை ஒத்திவைப்பது அதிகரித்துவருகிறது.

அவையின் நடவடிக்கைகளைப் பாதிக்காமல், அவரவர்களுக்கான வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்ற வரையறை அடிக்கடி மீறப்படுகிறது. தங்களுடைய கருத்துகளை அவைத் தலைவரின் அனுமதியோடு பேசாமல், அவையின் மையப் பகுதிக்கு ஓடிவந்து கூச்சலிடுவதும் எதிர்க் கூச்சலிடுவதும் அடிக்கடி நடக்கிறது. மாநில சட்டப்பேரவைகளில் நடைபெறும், அவைக்குள்ளேயே அமர்ந்து அவையை நடத்தவிடாமல் தடுக்கும் ‘தர்ணா’ என்கிற போராட்ட முறை, நல்ல வேளையாக இதுவரை நாடாளுமன்றத்தில் அரங்கேறவில்லை.

அதேபோல, ஒலி வாங்கிகளைத் திருகி எடுத்து எதிர் வரிசை மீது வீசுவது, காகிதக் கட்டுகளிலும் புத்தகங்களிலும் காகிதம் பறக்காமலிருக்க வைக்கப்படும் கனமான கட்டைகளையும் யாரும் தூக்கி வீசாமல் இருக்கின்றனர். அவ்வளவு ஏன் கைகலப்புகள்கூட நடைபெறாமல் கண்ணியம் காக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் அவை நடத்தை விதிமுறைகளைக் கரைத்துக் குடித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் – ராம் மனோகர் லோகியா, மது லிமாயே போன்றவர்கள், ஒரு பிரச்சினையைப் பேச அவைத்தலைவரிடம் விதிகளைச் சுட்டிக்காட்டி அனுமதி பெற்றுப் பேசிவிடுவார்கள். இப்போது அப்படிப் பேச முற்படாமல் எவ்வளவு உரக்கக் கத்த முடியுமோ, அந்த அளவுக்குக் கத்தி அவையில் எந்த அலுவலும் நடக்க முடியாமல் தடுத்துவிடுகின்றனர்.

கடந்த மக்களவையில் நாடாளுமன்றம் கூடிய நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரம் - உறுப்பினர்களின் குறுக்கீடுகளாலும் ஒத்திவைப்புகளாலுமே வீணானது. இதனால் மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மசோதாக்களைக் கொண்டுவரவும் அவற்றின் மீது விவாதம் நடத்தவும் நேரம் இல்லாமல் போனது. மக்களவை சட்டமியற்ற தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 22.16% நேரத்தை மட்டுமே 1991-96 காலத்தில் பயன்படுத்தியது. முதலாவது மக்களவையில் (1952-57) 49% நேரத்தை சட்டமியற்றுவதற்கு அவை பயன்படுத்தியுள்ளது.

யாருக்கான நாடாளுமன்றம்?

அரசு நிர்வாகத்தின் அனைத்து விதமான விவகாரங்கள் தொடர்பாகவும் தகவல்களை முழுதாகக் கறந்துவிடக்கூடிய அரிய வாய்ப்புள்ள ‘கேள்வி நேரம்’ என்பது நாளுக்கு நாள் முக்கியத்துவம் இழந்துவருகிறது. கடந்த மக்களவையில் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் 11.8% மட்டுமே உறுப்பினர்களால் பயன்படுத்திக் கொள்ளப் பட்டது.

1970 - களில் அந்தப் பயன்பாடு 14% ஆக இருந்தது. நாடாளுமன்ற நடவடிக்கை களைத் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கிய பிறகு நிலைமை மோசமாகிவிட்டது; மக்களால் பார்க்கப்படவும் அவர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் - ஒருவர் மற்றவரைவிட அதிகமாகச் செயல்படுவதைப் போல காட்டிக் கொள்ள வேண்டும் என்று அமளி, கூச்சல்களில் ஈடுபடுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்களும் கூச்சல்களும் தங்களுக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளிப்பதாக பள்ளிக்கூடக் குழந்தைகளே அவைத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ‘நாடு முழுவதும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, இருக்கைக்குச் செல்லுங்கள் – அவை நடவடிக்கைகளை நடத்த அனுமதியுங்கள்’ என்று அவைக்குத் தலைமை வகிப்பவர் பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொள்வது வழக்கமாகிவிட்டது.

‘நாடாளுமன்றம் முறையாகச் செயல்படுவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்தவில்லை என்றால், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பே நாளடைவில் தன்னுடைய முக்கியத்துவத்தையும் பயன்பாட்டையும் இழந்துவிடும்’ என்று சமீபத்திய ஆய்வறிக்கை எச்சரித்திருப்பதில் வியப்பேதும் இல்லை.

அரசு நிர்வாக இயந்திரம் மக்களுக்குப் பதில் அளிக்கும் விதமாக, நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் – கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து நடைமுறைகளையும் சீர்திருத்தி வலுப்படுத்த வேண்டும் என்ற புரிதல், இப்போது அனைத்துத் தரப்பினராலும் உணரப்படுகிறது.

ஊழலும் எதிர்வினையும்

நாள் செல்லச்செல்ல, நாடாளுமன்றம் தங்களுக்காகச் செயல்படாமல், தங்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படுகிறது என்று நாடு முழுவதும் உள்ள மக்கள் தெரிந்துகொண்டு வருகின்றனர். நாடாளு மன்றம் என்பது தனக்குரிய கடமைகளை நிறைவேற்றாமல் விதிவிலக்கான அமைப்பாக இருந்துவிட முடியாது.

கடந்த காலத்தைவிட உயர் இடங்களில் ஊழல் அதிகரித்து வருகிறது. ஆனால் அப்படி வெளிப் படும் ஊழல்கள் உடனடியாக, முழுமையாக தண்டிக்கப்படுவதில்லை. நேருவுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தபோதிலும் நிதியமைச்சர் டி.டி.கே. கிருஷ்மாச்சாரி முந்த்ரா ஊழலில் பதவி விலக நேர்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களே ஊழலில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள் நாட்டையே உலுக்கின.

1951இல் எச்.ஜி. முட்கல் என்ற உறுப்பினர் நாடாளுமன்றத்துக்கு முன்னோடியாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு அவையின் உறுப்பினர், 1974இல் துல்மோகன் ராம் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுடைய கவனத்தை ஈர்த்தன. மும்பை தங்கம்-வெள்ளி வியாபாரிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் பேசுவதற்காகவும் அவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும் முட்கல் திட்டமிட்டுச் செயல்பட்டது தெரியவந்ததால், முழுமையான விசாரணைக்குப் பிறகு நாடாளுமன்றத்திலிருந்தே விலக்கப்பட்டார்.

வர்த்தக அமைச்சகத்திடமிருந்து சாதகமான முடிவைப் பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல போலிக் கையெழுத்திட்டு, போலியாக ஆவணம் தயாரித்து அளித்ததாக துல்மோகன் ராம் என்ற உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. நாடாளுமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், நீதித்துறை அவருடைய வழக்கை விசாரித்து சிறையில் அடைத்தது. இவ்விருவரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்பதால் காங்கிரஸ் கட்சிக்குத் தார்மிகரீதியாக மிகப் பெரிய பின்னடைவும் களங்கமும் ஏற்பட்டன.

அதற்குப் பிறகு மிகப் பெரிய ஊழல்கள் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் போஃபர்ஸ் பீரங்கி பேரம், எச்டிடபிள்யூ ரக நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் தொடர்பான பேரம், சர்க்கரை ஊழல், பங்குச் சந்தையில் செயற்கையாக விலையேற்றம் செய்ய வைத்து அப்பாவி முதலீட்டாளர்களின் பணத்தைக் கோடிக்கணக்கில் சூறையாடிய பங்குத் தரகர் ஹர்ஷத் மேத்தா, போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளிடம் பெருந்தொகையை ஊக வியாபாரத்துக்காகக் கடனாகப் பெற்ற ஊழல், தொலைத்தொடர்புத் துறை ஊழல், யூரியா உர முறைகேடு என்று அடுத்தடுத்து ஊழல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.

இவற்றில் பெரும்பாலானவற்றை நீதித்துறை விசாரணைக்கு உள்படுத்தி தண்டனை வழங்கும் வேலையை நாடாளுமன்றம் மேற்கொள்ளவில்லை. ஆனால், சில ஊழல்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் கவனத்துக்குக் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இப்படி ஊழல்களை அம்பலப்படுத்தியதாலும் தவறு செய்தவர்களைத் தண்டனைபெற வைத்த தாலும் ஆளும் கட்சிக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பு ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல.

(தொடரும்)

1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து‘ சுதந்திரப் பொன்விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை

கே.கே. கத்யால், ‘தி இந்து‘ டெல்லி செய்திப் பிரிவு முன்னாள் தலைவர்

நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம், கே.ஆர். நரேஷ் குமார், விபா சுதர்சன்

தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x