நாயகன் 35: காட்சிக்கு உயிரூட்டிய கட்டிடக் கலை

நாயகன் 35: காட்சிக்கு உயிரூட்டிய கட்டிடக் கலை
Updated on
4 min read

முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வீனஸ் ஸ்டுடியோவில் மணி ரத்னத்தின் ‘நாயகன்’ படத்துக்காக, தோட்டா தரணி அமைத்திருந்த தாராவி குடிசைப் பகுதியைச் சென்று பார்த்ததை ஒரு ‘தொல்லியல்சார்’ அனுபவம் என்பேன். ஆழ்வார்பேட்டையில் இருந்துகொண்டு கற்பனையான பம்பாய் நகரத்தைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்திய விதம் மணி ரத்னத்தின் திறமைக்குச் சான்று.

தாராவியின் மூர்க்கமான நிதர்சனம், பம்பாயின் ஆங்கிலேயக் கட்டிடக் கலை, நாயக்கர் வீட்டு உள் வடிவமைப்பு ஆகிய மூன்று வகைக் கட்டிடக் கலைப் பரிமாணங்களால் இப்படம் ஒளிர்கிறது. சென்னையில் உருவெடுத்த கற்பனை பம்பாய்: அழகான தமிழகக் கடற்கரையில் கதை தொடங்குகிறது. சிறுவனான வேலு, தொழிற்சங்கத் தலைவரான தன் தந்தையைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச்சூட்டில் சிலர் கொன்றதற்காகப் பழிவாங்கிவிட்டுத் தப்பி ஓடுகிறான்.

தாராவி குடிசைப் பகுதியில் தஞ்சம் அடைகிறான். அங்கே இருண்ட சிறு அறையில் குடியிருக்கும் ஒருவர் அவனுக்கு வளர்ப்புத் தந்தை ஆகிறார். அப்படித்தான் விநோதமான ‘தனி மனிதனுக்கான நியாயத்தோடு’ வேலுவின் வாழ்க்கை தொடங்குகிறது. 1920-களின் வெட்டி-ஒட்டும் (மான்டேஜ்) படங்களைப் போல், துண்டு துண்டான காட்சிகள் அற்புதமான கதை சொல்லும் உத்தியால் பிணைக்கப்பட்ட விதத்தை வீனஸ் ஸ்டுடியோவின் செட், படிப்படியாகக் கண்முன் கொண்டுவந்தது.

தாராவியில் நாயகனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதுதான் படம். நகர வளர்ச்சித் திட்டங்களால் கண்டுகொள்ளப்படாத, சட்டத்திற்கு உட்படாத கிராமம்போல் கருதப்படும் தன்னிச்சையான நகரக் குடிசைப் பகுதிகளின் சூழலை வீனஸ் ஸ்டுடியோ செட்டுகள் தத்துவபூர்வமாக உருவகப்படுத்துகின்றன. சட்டங்களுக்கு அப்பாற்பட்டு இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவை, சவாலான சமூகச் சூழ்நிலைகளால் பரிதாப நிலையிலேயே எப்போதும் இருக்கின்றன.

மணி ரத்னத்தின் திரை தாராவியை, ஓர் உலகத்துக்குள் உள்ளுறைந்திருக்கும் மற்றொரு உலகத்தை, பின்னிப் பிணைந்த குறுகலான சந்துகள், கொண்டாட்டங்கள், பண்டிகைகள் களைகட்டும் பெரும் திடல், தகரத்தாலும் ஒட்டுப்பலகைகளாலும் ஆன சந்தைக் கடைகள் ஆகியவற்றை அழுத்தமாக நம் பார்வைக்குக் கொண்டுவருகிறது. பி.சி.ராமின் விறுவிறுப்பும் நளினமும் மிகுந்த ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை இயக்கத்துடன் சுருதி சேர்ந்து திரைக்குள் ஒரு திரையை உருவாக்கி, வலுவான நிழலும் ஒளியும் நிறைந்த கலவையைத் தருகிறது.

35 ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், தோட்டா தரணியுடன் மற்றவர்களும் இணைந்து மதராஸில் தாராவியை மறுஉருவாக்கம் செய்தது என்பது மலைப்பான ஒரு சாதனைதான். ஒவ்வொரு பொருளும் கலையின் வெளிப்பாடாக வடிவமைக்கப்பட்டன. அது சின்ன கோயிலாகட்டும், மரத்தடி மேடை, இசைக் குழுவுக்கான பந்தல், கடப்பா கல் தரை, அறையில் இருக்கும் கண்ணாடி, மரப்பாலம், பெட்டிக்கடை, வண்டிகள், சிதறிக் கிடந்த கார் சக்கரங்கள், துணிப் பந்தல்கள், விளக்குகள், மேசை நாற்காலிகள், குளம், தெருக்கள் என எதுவாயினும்.

நாயக்கர் வீட்டு உள் வடிவமைப்பு: கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த ‘செட்’ பங்களாவைச் சுற்றிப் பார்த்தபோது அந்தப் பெரிய கூடங்களில் நாயக்கரின் ‘தாதா நீதி’ பற்றிய வியப்புதான் எங்கும் எதிரொலித்தது. திரையில் இந்தப் பங்களாதான் நாயக்கரின் சொந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் சித்தரிக்கிறது. இசைஞானி இளையராஜா அதற்கு அமைத்த இசை உருவகம் நிகழ்வுகளின் கால ஓட்டத்தோடு, மாற்றத்தோடு இணைந்து பயணிக்கிறது. சிறுவனாக வேலு, தாராவியில் வளர்ப்புத் தந்தையின் ஒரு அறை வீட்டில் தஞ்சம் அடைகிறான். திருமணம் ஆனதும் அவன் குடியேறும் வீடு ஒழுகும் கூரையோடு, மாடப்புறாக்களின் கமறல் போன்ற ஒலிகளோடு, மறைப்பில்லாத ஜன்னலோடு, சிறிது சிறிதாக விரிவடைகிறது. நாயகன் பெரிய ஆளாகி பயமும் மரியாதையும் அவருக்கு வளரவளர அந்த வீடும் மேலும் விரிவடைந்து உயரமான தளத்தோடு இரட்டை நுழைவாயில்களோடு வெள்ளைக்காரப் பங்களாவாக உருவெடுக்கிறது. கூடம் இப்போது அரண்மனை ஆசனங்கள், அறைகலன்களோடு, அகலமான துரைமார்கள் பாணி வராந்தாவோடு நாகரிகமாகிவிட்டது.

ஒளிப்பதிவு என்னவோ அதன் உள் வடிவமைப்பைக் சிறிது சிறிதாகத்தான் வெளிக்காட்டுகிறது. வீட்டின் முழுத் தோற்றம் நமக்குக் காட்டப்படாமல், நம் கற்பனைக்கு விடப்பட்டுவிடுகிறது. விருதுகள் பல வாங்கிய அமெரிக்க இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்சஸி சொல்வதுபோல் ‘‘கடைசியில் பார்த்தால் சினிமா என்பதே ஃபிரேமில் என்ன தெரிகிறது, அதற்கு வெளியில் என்ன இருக்கிறது என்பதுதான்’’. வேலு நாயக்கரின் ஏற்றஇறக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு நடுவில் அவர் மீது ஒரு மரியாதை கலந்த வியப்பை ஏற்படுத்துவதற்கு அந்த வீட்டின் ஆச்சரியமான தோற்றங்களை மணி ரத்னம் காட்சிப்படுத்தியிருந்தார்.

நாயகன் வீட்டின் முற்றம்: நாயகனின் வீட்டினுடைய திறந்தவெளி முற்றத்தின் அமைதி, நல்லதும் கெட்டதுமாக மாறிமாறி வரும் அனுபவங்களைத் தாங்கிக்கொள்கிறது. ஒளிப்பதிவும், உள்ளேயும் வெளியேயும் வெட்டிவெட்டிச் சுழல்கிறது. வாயடைத்துப்போகும் ரசிகனுக்கு அப்படியே மேலே உயர்ந்து ட்ரோன் போன்ற கழுகுப் பார்வை காட்சியைத் தருகிறது. மனைவி, மகனின் சாவு, மகளுடனான பிணக்கு, அவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை எல்லாம் இந்த முற்றம்தான் இதமாக்குகிறது. குற்ற வாழ்க்கையை விட்டுவிடும்படி மகள் கெஞ்சும்போதெல்லாம், ‘‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’’ என்ற விடையில்லாக் கேள்வியை இந்த வெற்றுவெளிதான் எதிரொலிக்கிறது.

இந்த முற்றம்தான் ஒரு பெண்ணின் எதிர்ப்புக் குரலுக்கும் திருத்த முடியாத தந்தையை எதிர்கொள்ளும் மகளின் மனஉறுதிக்கும் துணையாக இருக்கிறது. இந்த முற்றத்தில்தான் அவள் குழந்தையாக, தன் தந்தையைப் பின்பற்ற நினைக்கும் சிறுவனான அண்ணனுடன் ஆடிப்பாடி வளர்ந்தாள். சில இலைகளோடு சற்று ஓரமாக நட்ட செடிதான் இந்த வெட்டவெளி முற்றத்திற்கே உயிரூட்டுகிறது. சீயோன் மருத்துவமனையில் தன் குழந்தை காப்பாற்றப்படுவதற்கு முன் கலவரமடைந்த தாயை இதே முற்றம்தான் அணைத்துக்கொள்கிறது.

கவித்துவ நியாயம்: சிவப்புச் செங்கல் வெளித்தோற்றம், பிரம்மாண்ட நுழைவு வாயில், நீளமான தாழ்வாரங்கள் ஆகியவற்றோடு காவல் நிலையம், சிறைச்சாலை, நீதிமன்றம் போன்ற அரசுக் கட்டிடங்கள், வழக்கமாகக் கற்பனையில் வருவதுபோல் வெள்ளையர் ஆட்சிக் காலக் கட்டிடங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாயகனின் வார்த்தைகள் அசைக்க முடியாத ஆளுமையைக் காட்டுகிறது என்றால், மணி ரத்னத்தின் கட்டிடக் கலை அவர் எழுத்தையும் தாண்டி ஒரு திரை முத்திரையைப் பதிக்கிறது.

கமல் ஹாசன் கதாபாத்திரம் சரண் அடையும் கடைசிக் காட்சிகளில் பம்பாய் உயர் நீதிமன்றமாகக் காட்டப்படும் கட்டிடம் உண்மையில் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரிதான். வீனஸ் ஸ்டுடியோ செட்களும் அண்ணா பல்கலைக்கழகக் கட்டிடங்களும் நாயகன் படத்திற்கான கற்பனைத் தளங்கள்.

‘கவித்துவ நியாயம்’ என்று சொல்லப்படுவதை அவரவர்க்கு ஏற்ற வகையில் ரசிகர்கள் முடிவு செய்துகொள்ளலாம். வேடிக்கை என்னவென்றால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் படம் எடுக்கப்பட்ட மதராஸில் வாழ்ந்தவர்கள்கூட, ‘நாயகன்’ தூரத்து பம்பாயில் நடந்ததாகத்தான் நம்ப விரும்புகிறார்கள். உண்மையில் மணி ரத்னம் உருவாக்கிய நாயகன் படம் நிகழ்ந்த ‘இடம்’ என்பது, நம் மனங்களில்தான் உள்ளது.

தமிழில்: மனோகரன்.ஜெ, உதவி: புவனா.எம்.

- நந்தன் (துர்கானந்த்) பல்சாவர், கட்டிட வடிவமைப்பு நிபுணர், தொடர்புக்கு: rootsdialogue2022@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in