

இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, ப.காளிமுத்து எழுதியுள்ள ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளில் யுவபுரஸ்கார் விருதுக்கு மட்டுமே அறிவிப்பின் மூலம் படைப்பாளர்களிடமிருந்து நூல்களைப் பெற்று விருதுக்குப் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனைக்கு எத்தனை நூல்கள் வந்தன, அந்த நூல்களில் இருந்து குறும்பட்டியலை யார் தயார் செய்தார்கள் என்பது போன்ற தகவல்கள் இல்லை.
ஆனால், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மூன்று நடுவர்களை நியமிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறும்பட்டியலில் இருந்து மூன்று நடுவர்கள் பரிந்துரைக்கும் தலா இரண்டு நூல்களில் இருந்தே ஒரு நூல் விருதுக்குரிய தகுதியைப் பெறுகிறது. சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விருது அறிவிப்பு குறித்தும் தீவிரமாகவே சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. தாய்மொழிக்கும் இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பிற்கே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று சாகித்ய அகாடமியின் விதியை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பரிந்துரைப் பட்டியலிலுள்ள படைப்பாளிகள் பலரது நூல்களை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். அதில் பலர் நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளர்கள்; தொடர்ச்சியாக இயங்கிவருபவர்கள்.
அ.மோகனாவின் ‘யாகத்தின் பெரு நெருப்பு’ என்ற நாவல், மகாபாரதத்தின் ஓர் இழையைத் தற்காலத்துடன் பொருத்தி மீள் வாசிப்புக்கு உட்படுத்திய படைப்பு. அரிசங்கரின் ‘உண்மைகள் பொய்கள் கற்பனைகள்,’ மனிதர்களுக்கு நிறங்களைப் பொருத்திச் சமகால அரசியலையும் தன்னனுபவங்களையும் இணைத்து, நேர் கோடற்ற உத்தியில் எழுதப்பட்ட நாவல். கார்த்திக் புகழேந்தியின் ‘வற்றா நதி’ சிறுகதைத் தொகுப்பை நெல்லை வட்டார மொழிக்காகவே வாசிக்கலாம். தாமிரபரணிக் கரை மனிதர்களின் கதைகளை நினைவுகளினூடாகப் பேசிப்பார்த்த தொகுப்பு. சுரேஷ் பிரதீப் எழுதியுள்ள ‘ஒளிர் நிழல்,’ நிகழ்காலத்தின் உதிரிகளாக இருக்கும் இளைஞர்களின் மனவெறுமையையும் இருத்தலியல் சார்ந்த சிக்கல்களையும் புனைவுக்குரிய வடிவத்தைக் கலைத்துப்போட்டு எழுதப்பட்ட நாவல். அதேபோல், வேல்முருகன் இளங்கோவின் ‘மன்னார் பொழுதுகள்’ நீண்டகாலப் புனைவுப் பரப்பையும் வரலாற்றையும் பின்னணியாகக் கொண்ட நெய்தல் நிலம் சார்ந்த நாவல். இந்நாவலின் வட்டார மொழியும் படைப்பூக்கமும் குறிப்பிடத்தக்கவை. றாம் சந்தோஷின் ‘இரண்டாம் பருவம்’ தொகுப்பின் கவிதைகளில் வெளிப்படும் வெகுளித்தனம் வாசிப்பவர்களுக்கு முக்கியமெனக் கருதுகிறேன். விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இருந்த நூல்களையும் சாகித்ய அகாடமி நேர்மையுடன் பகிர்ந்துகொள்வது பாராட்டத்தக்கது. ஆனால், இது இன்னொரு சிக்கலையும் ஏற்படுத்திவிடுகிறது. பட்டியலிலுள்ள நூல்களின் இலக்கிய மதிப்பை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிறது. அதனால் விருதுக் குழு மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டியிருக்கிறது.
இந்தப் பின்னணியில் ப.காளிமுத்துவின் ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ கவிதைத் தொகுப்பையும் அணுக வேண்டும். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. யுவபுரஸ்கார் இக்கவிதைத் தொகுப்பின் மீது ஒரு தற்காலிகக் கவனத்தைக் குவித்திருக்கிறது. பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சக படைப்புகளைவிட எந்த வகையில் இந்தத் தொகுப்பு தனித்துவமானது என்கிற கேள்வி பலருக்கும் எழுவது இயல்பானது; தொகுப்பு அதற்கு நியாயம் செய்திருக்க வேண்டும்.
ப.காளிமுத்துவின் கவிதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது இருண்மையே வாசிப்பவரைச் சூழ்ந்துகொள்கிறது. தன்னெழுச்சியுடன் திரளாத மொழியைக் கட்டி இழுத்திருக்கிறார். ‘கவிதை என்பது பல கூறுகளினால் ஆகிய கூட்டுப்பொருள்’ என்பார் க.கைலாசபதி. சொல்லுக்கு வெளியேயும் கவிதைக்குரிய பொருள் தொக்கி நிற்க வேண்டும். அது இத்தொகுப்பில் நிகழவில்லை. தொகுப்பின் பல கவிதைகள் தனக்குத்தானே விளையாடிக்கொள்ளும் ரகசிய விளையாட்டாகவும் தன்னிலை விளக்கங்களாகவும் உருக்கொண்டுள்ளன. சொற்களைக் கலைத்துப்போட்டு கவிஞரே அர்த்தமிழப்பை ஏற்படுத்திவிட்டார் என்றே தோன்றுகிறது. கவிதைக்குரிய மொழிப் பிரக்ஞை குறித்து காளிமுத்து தவறாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறார். கவிதை புரிகிறது; புரியவில்லை என்பது பிரச்சினையில்லை. ஆனால், குறைந்தபட்சம் வாசிப்பவர்களை உள்ளே அனுமதிக்கும் ஒரு சொல்லாவது கவிதைக்குள் இருக்க வேண்டும் என்ற வாசகரின் எதிர்பார்ப்பைக் கவிஞர்கள் புறந்தள்ள முடியாது.
இவ்வருட பால சாகித்ய புரஸ்கார் பரிந்துரைப் பட்டியலிலுள்ள உமையவனின் சிறார் கதைத் தொகுப்பான ‘மந்திரமலை’ யுவபுரஸ்கார் பரிந்துரைப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. ப.காளிமுத்துவின் இந்தத் தொகுப்பில் சில குறுங்கவிதைகள், நீள்கவிதைகளைவிட நம்பிக்கை அளிக்கின்றன. ஆனால், இதைவிடச் சிறந்த தொகுப்புகள் நடுவர்களின் பார்வைக்கு வரவில்லை என்று மட்டும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.
- சுப்பிரமணி இரமேஷ், இலக்கிய விமர்சகர்
தொடர்புக்கு: ramesh5480@gmail.com