

அழ. வள்ளியப்பாவின் நூற்றாண்டு இது. சிறார் இலக்கிய வளர்ச்சி ஒன்றே தன் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருந்த அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில், சிறார் இலக்கியத் துறை இயல்பாகவே கூடுதல் கவனத்தைப் பெறும். ஆனால், கடந்த வாரம் ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்ட பால சாகித்ய விருதோ கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
பால சாகித்ய புரஸ்கார் என்கிற பெயரில் சிறார் இலக்கியத்தை அங்கீகரிக்கும் நடைமுறையைச் சாகித்ய அகாடமி 2010இல் தொடங்கியது நல்லதொரு முடிவு. இந்த விருதுத் தேர்வில் சமீப ஆண்டுகளாகப் பரிசீலனை செய்யப்பட்ட நூல்களுக்கான குறும்பட்டியல் வெளியிடப்படும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. விருதுத் தேர்வில் வெளி்ப்படைத்தன்மை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இது தருகிறது. அதே நேரம் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூல் புதுமையாக இருக்கிறதா, புதிய அணுகுமுறையைத் தொடங்கிவைத்துள்ளதா, நவீன சிறார் இலக்கியம் தொட்டுள்ள உயரத்தை முன்னகர்த்துகிறதா என்கிற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
தவறான சித்திரம்: பால சாகித்ய புரஸ்கார் கொடுக்கத் தொடங்கப்பட்ட ஆண்டுகளில், துறையிலிருந்து விலகி ஓய்வுபெற்றுவிட்டவர்களுக்கு வழங்கப்படுவது தமிழில் ஒரு வழக்கமாக இருந்துவந்தது. பிறகு தேர்வுக் குழுவினர், ஆலோசனைக் குழுவினரின் நெருங்கிய வட்டத்தினருக்குக் கொடுக்கப்பட்டுவருவதாகக் கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுவருகிறது. தனியார் விருதுகள் அந்தந்த விருதுத் தேர்வுக் குழுவினரின் விருப்பம், சாய்வுகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. சாகித்ய அகாடமி விருதோ அரசு விருது, மக்கள் வரிப்பணத்தில் தரப்படும் விருது எனும்போது, அந்த விருதுத் தேர்வு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. பால சாகித்ய விருது பெறும் புத்தகங்கள் இந்தியாவின் மற்ற மொழியினராலும் கவனிக்கப்படும். நெடும் மரபு காரணமாகத் தமிழை மதித்துவரும் மற்ற மொழியினர், நவீனச் சிறார் இலக்கியத்தில் தமிழின் சாதனைகள் யாவை எனத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள், முயல்வார்கள். பால சாகித்ய அகாடமி விருதுகள் வழியாக அவர்களுக்குக் கிடைக்கும் சித்திரம் பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும்.
சடங்குகளாகும் நடைமுறைகள்: பொருட்படுத்த முடியாத நூல்கள், எழுத்தாளர்களுக்குப் பால சாகித்ய விருது வழங்கும் நடைமுறை விட்டுவிட்டுத் தொடர்வதை, சிறார் இலக்கியம் என்பது கிள்ளுக்கீரை போலப் பார்க்கப்படுவதன் வெளிப்பாடாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. சிறார் மனங்களிலும் சிறார் இலக்கியத் துறையிலும் அழுத்தமாகத் தடம் பதிக்க முடியாதவர்கள், தங்களால் இயன்ற வழிகளில் சாகித்ய அகாடமி விருதைப் பெற்று அடையாளமும் புகழும் தேட முனைகிறார்கள்.
ஏற்கெனவே, தமிழ் நவீன இலக்கியமும் சிறார் இலக்கியமும் வெகுமக்களின் தேர்வுப் பட்டியலில் இல்லை. இந்தப் பின்னணியில் இலக்கியம் வளர்க்க உருவாக்கப்பட்ட அரசு நிறுவனம், நவீன இலக்கியத் துறைகளைப் பரவலான மக்களிடம், பள்ளி,-கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச்செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, தவறான முன்னுதாரணங்களே பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன.
பால சாகித்ய விருதுகளுக்கான நெடும் பட்டியல் பரிந்துரைக்கப்படும் நடைமுறை குறித்துத் தெரியவரும் விஷயங்கள் பெரும் வேதனையளிப்பவை. சிறார் இலக்கியத்துடன் எந்தத் தொடர்போ வாசிப்போ இல்லாத பலரும் நெடும்பட்டியலை அனுப்புகிறார்கள். அதற்கடுத்து உருவாக்கப்படும் குறும்பட்டியலோ, நெடும்பட்டியலுக்கு சம்பந்தமில்லாததாக இருக்கிறது. அதில் சமகாலத்தின் குறிப்பிடத்தக்க சில படைப்புகள் இடம்பெறுகிற போதிலும், விருது பெறும் புத்தகம் பல நேரம் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே இருக்கிறது. நடைமுறைச் சடங்குகள் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்தேறினாலும், பரிசுக்குரிய எழுத்தாளர் வேறு வகைகளில் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறார் என்ற விமர்சனம் எழாமல் இல்லை (சில ஆண்டுகள் விதிவிலக்கு).
ஒப்பிட முடியுமா?: சரி, மற்ற மொழிகளுக்கான பால சாகித்ய விருதுகள் எப்படி வழங்கப்படுகின்றன? மலையாளத்தில் பேராசிரியர் எஸ். சிவதாஸ், ‘கேரளத்தின் கதைப் பாட்டி’ சுமங்களா, கே. பாப்புட்டி போன்ற சிறார் இலக்கிய மேதைகள் முதல் சில ஆண்டுகளிலேயே கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ரஸ்கின் பாண்ட், சுபத்ரா சென் குப்தா, அனிதா நாயர் உள்ளிட்டோருக்கு பால சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. பால சாகித்ய விருதுக் குழுத் தேர்வாளர்களுக்கும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கும் இதுபோல் மற்ற மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்த பரிச்சயம் இருக்கிறதா, அந்த மொழிப் படைப்புகளுடன் ஒப்பிடும்போது, தமிழ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளின் தரம் என்ன என்று யோசித்திருக்கிறார்களா?
ஒருபுறம் பள்ளிக் குழந்தைகள் தமிழில் வாசிக்கவும், எழுதவும் சிரமப்படுகிறார்கள் என்பதை 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கேள்விப்பட்டுவருகிறோம். இது நாம் கவனம் கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை. இந்தப் பின்னணியில் பெரும் எண்ணிக்கையிலான குழந்தைகளுக்குத் தமிழ் மொழியை நெருக்கமாக எடுத்துச்செல்லவும், வாழ்க்கை சார்ந்த மதிப்பீடுகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வேண்டிய சிறார் இலக்கியம், இப்படி விருதுகளைத் துரத்திப்பிடிப்பதற்காகவே எழுதப்படுவதை நம் காலத்தின் அவலம் என்றில்லாமல் வேறு எப்படிக் கூறுவது?
- ஆதி வள்ளியப்பன், தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in