

கிரிக்கெட் உலகையே திகைக்க வைத்த நிகழ்வு 1983 ஆம் ஆண்டு நடந்தேறியது. ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 1971 இல் தொடங்கிய காலகட்டத்திலிருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகள்தாம் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தன.
டெஸ்ட் போட்டியில் நீண்ட பாரம்பரியம் கொண்ட அணியாக இந்தியா இருந்த போதிலும், தொடக்கக் கால ஒரு நாள் போட்டிகளில் இந்தியா கத்துக்குட்டி அணியாகவே கருதப்பட்டது.
முதல் இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் (1975, 1979) மிக மோசமாகத் தோல்வியடைந்து இந்திய அணி வெளியேறியது. இந்த இரண்டு முறையும் மே.இ. தீவுகள் அணியே கோப்பையை வென்று ஆதிக்கத்தை நிலை நாட்டியிருந்தது.
1983 இல் நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் தலைமையில் இளைஞர்களும் அனுபவஸ்தர்களும் கலந்த இந்திய அணி களமிறங்கியது.
அந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு மே.இ. தீவுகள் தகுதிபெற்று மூன்றாவது முறையும் உலகக் கோப்பையை வெல்லக் காத்திருந்தது. அந்தத் தொடரில் யாருமே எதிர்பார்த்திராத வகையில் இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறி மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியளித்தது.
இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அணியே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. அதற்கேற்ப இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், குறைந்த ரன்களாக இருந்தாலும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்கிற திட்டமிடலோடு பந்துவீசக் களமிறங்கியது இந்திய அணி.
இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் மே.இ.தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நாட்டின் மூவண்ணக் கோடி உயரப் பறக்க, முதன்முறையாக இந்திய அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியது.
கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மகத்தான தடமாக இந்த நிகழ்வு பதிந்தது. உலகக் கோப்பையை வென்ற பிறகுதான் இந்தியாவில் கிரிக்கெட் அதிவேகமாக வளரத் தொடங்கியது என்பது வரலாறு.
- மிது