சுதந்திரச் சுடர்கள் | திரையுலகம்: சிந்திக்கவைத்த சிரிப்பு

சுதந்திரச் சுடர்கள் | திரையுலகம்: சிந்திக்கவைத்த சிரிப்பு
Updated on
1 min read

திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான இடம், நாடக மரபிலிருந்து உருவானது. எந்த வழி யிலாவது பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பவர்கள் என்கிற மலிவான பார்வையே அவர்கள் மீது படிந்திருந்தது. அதை உடைத்து நொறுக்கிய ‘நகைச் சுவைப் போராளி’ கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

தான் நடித்த இரண்டாவது படத்திலேயே (சதி லீலாவதி-1935) நகைச்சுவைப் பகுதியை எழுதி, தனது தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கினார். கிராமிய மரபுக் கலைகளின் அசல் தன்மையைச் சிதைக்காமல், அவற்றை நகைச்சுவைப் பாடல் காட்சிகளுக்குப் பயன்படுத்தி, கிராமிய மரபுக் கலைகளுக்கு மரியாதை செய்தவர். திரையிலும் மேடையிலும் அவர் நடத்திக் காட்டிய கிந்தனார் கதா காலட்சேபம், வில்லுப்பாட்டு, லாவணிப் பாட்டு ஆகியவை பெரும் புகழ்பெற்றன.

நகைச்சுவை நடிப்பின் துணைகொண்டு மூடநம்பிக்கைகளை பார்வையாளர் மனம் புண்படாத வகையில் சாடினார். பகுத்தறிவு, அறிவியல் சிந்தனையை நகைச்சுவைப் பாடல்கள் மூலம் தூண்டினார்.

அவரது இந்தக் கலைப்பணியில் தொடக்கம் முதலே வழித் துணையாகவும் வாழ்க்கைத் துணையாகவும் பங்கு பெற்றவர் டி.ஏ. மதுரம். கலைவாணரும் மதுரமும் இணைந்து 102 படங்களில் நடித்து, 176 பாடல்களைப் பாடிச் சாதனை படைத்திருக்கிறார்கள்.

‘நல்லதம்பி’ படத்தில், தனக்குச் சொந்தமான நிலம் முழுவதையும் ஊரின் பொதுச் சொத்தாக மாற்றிவிடுவார். மக்கள் அனைவரையும் அந்த நிலத்தில் இறங்கி உழைக்க வருமாறு அழைப்பார். கூட்டுழைப்பில் விளைந்து நிற்கும் பயிரை ஒற்றுமையாக அறுவடைசெய்து பகிர்ந்துகொள்ளச் செய்தார்.

கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியே முதல் தேவை என்று வலியுறுத்தினார். தீண்டாமையை எதிர்த்த அதே வேகத்துடன் மதுவை எதிர்த்தும் குரல் கொடுத்தார். பிரச்சாரமோ அறிவுரையோ செய்யாமல் கலைவாணர் திரையில் சீர்திருத்தம் செய்துகாட்டியபோது சினிமா நகைச்சுவை சிகரம் தொட்டது.

கலைவாணரின் இந்த வழியைப் பின்பற்றத் தொடங்கியபின் திரையுலகில் விவேக் அடைந்த வெற்றி உயர்வானது. காலம்காலமாக நகைச்சுவை நடிகர்கள் பலர் வந்துபோனாலும், காந்தியின் பக்தரான கலைவாணரின் இடம் யாராலும் நிரப்ப முடியாத ஒன்று.

- ஜெயந்தன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in