Last Updated : 27 Aug, 2022 07:45 AM

 

Published : 27 Aug 2022 07:45 AM
Last Updated : 27 Aug 2022 07:45 AM

சுதந்திரச் சுடர்கள் | நவீன இந்தியாவின் கவின்மிகு கட்டிடங்கள்

கட்டிட வடிவமைப்பில் தனித்துவத்தை யும், வளம் மிகுந்த பாரம்பரியத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. இவற்றுடன் நவீனத்தையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டிடங்கள் சுவீகரித்துக்கொண்டுள்ளன. அத்தகைய கட்டிடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சில:

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை

சென்னை அண்ணா சாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்து்ள இந்தக் கட்டிடத்தை பெர்லினைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் ஹுயுபெர்ட் நீன்ஹாஃப் வடிவமைத்துள்ளார். தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், 2011இல் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், தமிழ் நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

சைபர்டெக்சர் முட்டை, மும்பை

13 மாடிகள் கொண்ட வணிக அடுக்குமாடிக் கட்டிடம் இது. நம்பமுடியாத தோற்றமுடைய இதன் கட்டமைப்பை ஜேம்ஸ் லா எனும் கட்டிடக் கலைஞர் வடிவமைத்தார். முட்டை வடிவத்தைப் போலிருக்கும் இந்தக் கட்டிடத்தின் புதுமையான வடிவமைப்பு பார்த்தவுடன் பிரமிப்பில் ஆழ்த்தும்.

விதான சௌதா, பெங்களூரு

பெங்களூருவிலிருக்கும் இந்தக் கட்டிடம் நவீன திராவிட கட்டிடக் கலையின் நிகழ்கால அதிசயம். இடைக்கால சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றின் முதன்மைக் கூறுகளை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கிறது. 1956இல் கட்டப்பட்ட இதுவே கர்நாடக மாநில சட்டமன்றம்.

லோட்டஸ் டெம்பிள், டெல்லி

சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் லோட்டஸ் டெம்பிள் அமைதியும் அழகும் நிரம்பியது. பஹாய் மதத்தினரின் வழிப்பாட்டு தலமான இந்தக் கோயில் வெள்ளை நிறத்தில், தாமரை மலரின் வடிவத்தில் அமைந்துள்ளது. 1986இல் இதை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் ஃபரிபோர்ஸ் சாஹ்பா.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், டெல்லி

கட்டிடக் கலைஞர் குல்தீப் சிங் 1980இல் வடிவமைத்த இந்தக் கட்டிடம், புதுமையான ஸிக்ஸாக் வடிவத்துடன் கண்ணைக் கவர்ந்து புத்துணர்வூட்டக்கூடியது. இடைப்பட்ட பகுதிகளில் காற்றோட்டம் மிகுந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் இயற்கையாகவே குளுமை நிலவும்.

வள்ளுவர் கோட்டம், சென்னை

திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னமே வள்ளுவர் கோட்டம். 1975இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டிப்பட்டது. திருவாரூர் தேரைப் போன்று செதுக்கப்பட்டிருக்கும் கல் தேர், வள்ளுவர் கோட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக நிறுவப்பட்டுள்ளது.

ஆரோவில் டோம்

உலகப் பிரசித்திபெற்ற இந்தக் குவிமாடம் 1971இல் கட்டப்படத் தொடங்கி, 2008இல்தான் முடிந்தது. மாத்ரி மந்திர் என அழைக்கப்படும் இந்தக் குவிமாடம் அன்னையின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. ரோஜர் ஆங்கர் எனும் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் இதனை வடிவமைத்தார்.

வளர்ச்சி ஆராய்ச்சி மையம், திருவனந்தபுரம்

இந்தியாவின் மரபார்ந்த கட்டிடக் கலைக்குப் புத்துயிர் அளித்தவர் லாரி பேக்கர், குறைந்த செலவில் வலுவான கட்டிடங்களை வடிவமைத்ததற்காகப் போற்றப்படுகிறார். 1971இல் பேக்கர் வடிவமைப்பில் திருவனந்தபுரத்தில் வளர்ச்சி ஆராய்ச்சி மையம் கட்டப் பட்டது. உள்ளூர் மூலப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மங்களூர் ஓடுகளைக் அவர் பயன்படுத்தி யுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அகமதாபாத் குகைக் கூடம்

இந்தியக் கட்டிடக் கலையின் முன்னோடி பி.வி.தோஷி. இவர், சண்டிகரை வடிவமைத்த பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர் லே கார்பூசியேவின் மாணவர். அகமதாபாத் குகை என அழைக்கப்படும் அவர் வடிவமைத்த இந்தக் கட்டிடம் இந்திய நவீன கட்டிடக் கலைக்கான சான்று.
காந்தி பவன், சண்டிகர்

பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள காந்தி பவன் 1962இல் திறக்கப்பட்டது. நீரில் மிதக்கும் மலரைப் போன்றிருக்கும் இதை சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பியர் ஜீன்னெரட் வடிவமைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x