எல்லாச் சொற்களும் நண்பர்களல்ல

எல்லாச் சொற்களும் நண்பர்களல்ல
Updated on
1 min read

எண்களைப் பொறுத்தவரை எந்த எண்ணை வேண்டுமானாலும் எந்த எண் ணுக்குப் பக்கத்திலும் வைக்கலாம். மொழியைப் பொறுத்தவரை இது செல்லுபடியாகாது. எந்தச் சொல்லை வேண்டுமானாலும் எந்தச் சொல்லுக்கும் அருகில் வைத்து வாக்கியத்தை உருவாக்கிவிட முடியாது. மனிதர்களைப் போலவே சொற்களுக்கும் ஓர் உறவு இருக்கிறது. நமக்கு எதிரிகள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள், முகம்தெரிந்தவர் இருப்பார்கள். அதேபோலத்தான் சொற்களுக்கிடையிலான உறவும். சொற்களில் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் உண்டு: (எ.டு.) ‘சலசல’, ‘கலகல’ போன்ற இரட்டைக் கிளவிகள். நெருங்கிய நண்பர்கள் உண்டு: (எ.டு.) வேகமாக ஓடு, மெதுவாக நட, மெதுவாகப் பேசு. இப்படி, சொற்கள் தங்களுக்குப் பொருத்தமான, இயல்பான சொற்களுடன் ஒரு சொற்றொடரில் வருவதற்கு ‘சொற்சேர்க்கை’ என்று பெயர்.

சொற்கள் குறிப்பிட்ட சில சொற்களுடன் சேர்ந்து வந்தால் மட்டுமே இயல்பாகத் தோன்றும். அதில் ஏதாவது முறை தவறினால் பொருள்நயம், ஓசைநயம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு மொழி கரடுமுரடாகத் தோன்றும். இரண்டு சொற்கள் ஒரே பொருளைத் தரக்கூடியவையாகவோ குறிப்பிட்ட ஒரே நிலையைக் கொண்டிருப்பவையாகவோ இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காகவே அந்த இரண்டு சொற்களுடனும் வேறொரு சொல்லை இணைத்துவிட முடியாது. எடுத்துக்காட்டாக, ‘மணம்’, ‘கல்யாணம்’ என்ற ஒரு பொருள் கொண்ட இரண்டு சொற்களை எடுத்துக்கொள்வோம். ‘மணம்புரி’ என்று நாம் சொல்வோம்; ஆனால், ‘கல்யாணம்புரி’ என்று நாம் சொல்ல மாட்டோம். ‘கல்யாணம்புரி’ என்று சொல்வது இலக்கணத்தின் அடிப்படையில் தவறில்லை என்றாலும் இயல்பின் அடிப்படையில் தவறுதான்.

ஒரே பொருள் கொண்ட சொற்களுக்கு மட்டுமல்ல, எதிரெதிர் பொருளைக் கொண்டிருந்தாலும் ஒரே விதமான நிலையைக் கொண்டிருக்கும் சொற்களுக்கும் இது பொருந்தும். தோல்வியும் வெற்றியும் எதிரெதிர் பொருள் கொண்ட சொற்கள்; ஆனால் ஒரே நிலை, அதாவது ‘ஒன்றின் விளைவாக, குறிப்பிட்ட ஒன்றை அடையும் நிலை’. வெற்றி, தோல்வி ஆகிய சொற்களுக்குப் பொதுவான சொற்சேர்க்கைகள் உண்டு. எடுத்துக்காட்டாக, ‘கிடை’ என்ற வினைச்சொல். ‘இந்த முயற்சியில் அவருக்கு வெற்றியே/தோல்வியே கிடைத்தது’ என்று சொல்ல முடியும். ஆனால், ‘அவர் வெற்றி பெற்றார்’ என்பதைப் போல ‘அவர் தோல்வி பெற்றார்’ என்று சொல்ல முடியாது.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

தவறு: தேர்தல் முடிவுகள் குறித்துச் சில கேள்விகள் கிளப்பட்டன.

சரி: தேர்தல் முடிவுகள் குறித்துச் சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

தவறு: இறப்பு வீட்டில் ஒரே கூட்டம்.

சரி: சாவு வீட்டில் ஒரே கூட்டம்.

தவறு: உதவி செய்வேன் என்று அவர் வாக்குறுதி செலுத்தினார்.

சரி: உதவி செய்வேன் என்று அவர் வாக்குறுதி தந்தார்.

தவறு: அவன் தற்கொலை புரிந்துகொண்டான்.

சரி: அவன் தற்கொலை செய்துகொண்டான்.

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in