Published : 25 Aug 2022 07:25 AM
Last Updated : 25 Aug 2022 07:25 AM
நாட்டின் வருவாய், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி-மேம்பாடு, நவீனமயம், வேளாண் வளர்ச்சிக்கான உந்து சக்தி, வேளாண் தொழில்நுட்பம், சேவைத் துறை வளர்ச்சி, உள்நாட்டு - வெளிநாட்டு வர்த்தகம் எனப் பல்வேறு அம்சங்கள் தொழில் துறையின் வளர்ச்சியைச் சார்ந்தே அமைகின்றன.
நாடு சுதந்திரம் அடைந்தபோது தனிநபர் வருமானம் 27 ரூபாய், சராசரி ஆயுட்காலம் 32 வயதுதான்; எழுத்தறிவு விகிதம் 16.1%; குழந்தை இறப்பு 1,000 பேருக்கு 146. முறையான புள்ளிவிவரக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் வரை பொருளாதார ஆய்வறிக்கையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இங்கிருந்துதான் நமது இன்றைய வளர்ச்சிப் பாதையை மதிப்பீடு செய்ய வேண்டும்.
தொழில் கொள்கைகள்: சுதந்திரத்துக்குப் பிறகு தொழில் வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கல்லாக இருந்தது முதலீட்டுப் பற்றாக்குறை. தனியார் முதலீடுகள் போதுமான அளவுக்கு இல்லை; இருந்தவை அதிக இடர்பாடுகளைக் கொண்டிருந்தன. எனவே, அரசே முதலீடுகளில் முன்கை எடுக்க வேண்டிய நிலை இருந்தது. பல தொழில்களில் அரசே முழு முதலீட்டாளர்களாகவும் முற்றுரிமையாளராகவும் இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவியது.
1951 இல், உள்ளாட்டு உற்பத்தி மதிப்பில் தொழில் துறையின் பங்கு 11.8%. சணல், பருத்தி ஆலைகள் மட்டுமே பெருந்தொழில்கள். இந்தப் பின்னணியில், ஒரு தொழில் கொள்கைக்கான தேவை உடனடியாக எழுந்த நிலையில், 1948இல் முதல் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. அரசமைப்பு நடைமுறைக்கு வந்தது, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது, சோஷலிசக் கட்டமைப்பின் அடிப்படையில் 1956ஆம் ஆண்டின் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது.
நாட்டின் வலுவான தொழில் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டது இத்தொழில் கொள்கையே. சிறு தொழில் வளர்ச்சியின் முக்கியத்துவம் கருதி 1977இல் தொழில் கொள்கை மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
1980 இல், தொழில் துறையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் பொதுத் துறை நிறுவனங்களின் திறன்களை மேம்படுத்தவும் உள்நாட்டுச் சந்தையில் போட்டியை அதிகரிக்கச் செய்யவும் திருத்தம் செய்யப்பட்டது. 1991இல் புதிய தொழில் கொள்கை, தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கலை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஐந்தாண்டுத் திட்டம்: அன்றைய திட்டமிட்ட பொருளாதாரக் கட்டமைப்பே இந்தியத் தொழில் துறை இன்றைய நிலைக்கு உயர அடிப்படையாக அமைந்தது. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் நுகர்வுப் பொருட்களின் உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. திட்ட ஒதுக்கீட்டில் 2.8% தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டது.
இரண்டாவது தொடங்கி ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக் காலம் வரை ஒவ்வொரு திட்டக் காலத்திலும் தொழில் துறை வளர்ச்சிக்கெனச் சராசரியாக 20% ஒதுக்கப்பட்டது. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 22.8% ஆக இருந்த நிதி ஒதுக்கீடு, ஆறாவது திட்டத்தில் 13.7%, ஏழாவது திட்டத்தில் 11.9%, எட்டாவது திட்டத்தில் 8.4%, ஒன்பதாவது திட்டத்தில் 7.6%, பத்தாவது திட்டத்தில் 3.9% எனப் படிப்படியாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி முறைமையே நிறுத்தப்பட்டுவிட்டது.
நான்கு வளர்ச்சி நிலைகள்: இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிலைகளை நான்காக வகைப்படுத்தலாம். 1951 முதல் 1965 வரையிலான முதல் நிலை: இக்காலகட்டத்தில் அடிப்படைத் தொழில்கள், முதலீட்டுப் பண்டங்கள், பெரும் முதலீடுகள், இரும்பு உள்ளிட்ட கனரகத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 5.7% ஆக இருந்தது.
1965 முதல் 1980 வரையிலான காலத்தைத் தொழில் துறை வளர்ச்சிப் பின்னடைவுக் காலம் என வரையறுக்கலாம். இந்தக் காலத்தில், 9% ஆக இருந்த தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.1% ஆகச் சுருங்கியது. 1962 சீன யுத்தம், 1971 பாகிஸ்தான் யுத்தம், 1965 முதல் 1971 வரையிலான காலகட்ட வறட்சி, உள்கட்டமைப்பு வசதி நெருக்கடிகள், 1973இல் ஏற்பட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கான நெருக்கடி என இதற்குப் பல காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 1980 முதல் 1990 வரையுள்ள காலம் தொழில் துறை மீட்சிக் காலம்.
இக்காலகட்டத்தில் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 7.9% ஆக உயர்ந்தது. தாராளமயமாக்கலுக்கு வித்திட்ட காலம் இது. சேவைத் துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவையும் இதே காலகட்டத்தில் முடுக்கிவிடப்பட்டது. புதிய தொழில் கொள்கை, நிதித் துறை தாராளமயமாக்கல் ஆகியவற்றுக்கு இந்நிலை அடித்தளம் இட்டது. 1991 முதல் நான்காம் நிலை தொடர்கிறது. 1991இல் 2.3% இருந்த தொழில் துறை வளர்ச்சி விகிதம் தற்போது 19.6%ஐ எட்டியிருக்கிறது.
இன்றைய நிலை: மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் தொழில் துறையின் பங்கு தற்போதைய நிலையில் 17.1% என்ற அளவில் உள்ளது. 2016-17இல் 5.1 கோடியாக இருந்த இத்துறையின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை, 2020-21-இல் 2.73 கோடியாக சரிந்துவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு 21% குறைந்துள்ளது. 2025இல் 10 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கோடு அறிமுகம் செய்யப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டம் அமலில் உள்ள காலத்திலேயே இந்த வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை வேலைவாய்ப்புகளில் முறைசாராத் தொழில்கள் 70% பங்களிக்கின்றன. 1955இல் அமைக்கப்பட்ட கார்வே கமிட்டி, சிறு தொழில் வளர்ச்சிக்கான பரிந்துரைகளை அளித்தது. அதன் அடிப்படையில் 1977இல் உருவாக்கப்பட்ட கொள்கையின் காரணமாக இந்தியச் சிறுதொழில் துறை வேகமாக வளர்ந்தது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் பெரும் தாக்கம் செலுத்தினாலும் தொழில் துறை உற்பத்தியில் சிறுதொழில் துறை 40% பங்களிக்கிறது; ஏற்றுமதியில் 40%, வேலைவாய்ப்புகளில் 45% பங்களிப்பையும் சிறுதொழில் துறை வழங்கிவருகிறது.
சிக்கல்கள்: இந்தியத் தொழில் துறையில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், கொள்கைகள், திட்டமிடல்கள் எவ்வளவோ மாற்றி அமைக்கப்பட்டபோதும் தொழில் துறை வளர்ச்சி 19%ஐத் தாண்டவே இல்லை. இந்தியாவில் தொழில் துறையின் பங்கு கணிசமாக இருந்தாலும், வேலைவாய்ப்புகளிலும் இந்தியத் தொழில் துறை பின்தங்கியே உள்ளது. இந்தியாவில் கூட்டுப் பங்கு நிறுவனங்கள், பொதுப் பங்கு நிறுவனங்களின் வளர்ச்சி குறைந்துவருகிறது.
அதேசமயம், தனியார் பங்கு நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்துவருகிறது. இத்தனைக்கும், கூட்டுப் பங்கு நிறுவனங்கள், பொதுப் பங்கு நிறுவனங்களின் திறன்களும் அதன் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன்களும் அதிகரித்தே வந்துள்ளன.
பொருளியல் அறிஞர் சைமன் குஷ்நெட் குறிப்பிடுவதைப் போல், பொருளியல் வளர்ச்சி பரவலாகும்போது வேளாண்மையிலிருந்து மாறிச் செல்லும் போக்கு, மற்ற வளர்ந்துவரும் நாடுகளைப் போல இந்தியாவில் நடைபெறவில்லை.
ஒரு வரம்பிற்கு உட்பட்ட மாற்றமே நிகழ்ந்துள்ளது. தொழில் துறை முதலீடுகள், வளர்ச்சி ஆகியவை வேலைவாய்ப்புகளில் போதுமான வளர்ச்சியை உருவாக்கவில்லை. பொதுத் துறை, தனியார் துறையின் பங்களிப்புகள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.
நுகர்வுப் பண்டங்கள், முதலீட்டுப் பண்டங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு, அதனைச் செயல்படுத்தும் விதம், உள்நாட்டு-வெளிநாட்டு மூலதனத்தின் பொருத்தப்பாடு, தொழில் துறைப் பரவலாக்கம், தொழிலாளர்களின் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப கூலி விகிதம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை தொழில் துறையின் எதிர்கால வளர்ச்சியில் முக்கியப் பங்காற்ற வேண்டும். அதுவே நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெருந்துணை புரியும்.
- நா.மணி, பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
To Read this in English: Is planned industrial growth sustained?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT