Published : 24 Aug 2022 08:46 AM
Last Updated : 24 Aug 2022 08:46 AM
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டறிந்த செய்தி ஐந்து மாதங்கள் கழித்துத்தான் அவரை அனுப்பிவைத்த ஸ்பெயின் நாட்டு மன்னருக்குத் தெரியவந்தது. அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 நாட்களுக்குப் பிறகே அந்தச் செய்தி ஐரோப்பியர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரம் விமானத் தாக்குதலில் தகர்க்கப்பட்டதை உலகமெங்கும் மக்கள் தங்களது வீடுகளில் தொலைக்காட்சி மூலம் உடனடியாகக் காண முடிந்தது. ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள அற்புதத்தின் விளைவு இது.
மக்களிடம் கருத்துகளை உருவாக்குவதிலும் மனித மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பதிலும் பத்திரிகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதனால்தான் பத்திரிகைகளை ‘மூன்றாவது கண்’ என்கிறோம். இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், எந்தவித வியாபார நோக்கமுமின்றி சமூக அக்கறையோடு இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து மக்களுக்குச் செய்திகளைக் கொண்டுசேர்க்கப் பல பத்திரிகைகள் தொடங்கப்பட்டன.
செய்தி உற்பத்தியும் கருத்தும்: ஜனநாயகத்தின் கண்களாகவும் நேர்மறையான மாற்றங்களுக்குத் துணை நிற்பவையாகவும் இருக்க வேண்டிய ஊடகங்கள், காலப்போக்கில் செய்திகளை உற்பத்திசெய்யும் கூடங்களாக மாறிவிட்டன. வர்த்தக நோக்கமும் அரசியல் நோக்கமும் செய்திகளைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகிவிட்டன. செய்திகளில் ஜனநாயகத்தன்மை குறைந்து, நுகர்பொருள் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விளம்பரத்தன்மை பெருகிவிட்டது. விளம்பரதாரர்களே செய்தியின்-நிகழ்ச்சியின் தன்மையை முடிவுசெய்கிறார்கள். அதனால், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைச் சில நேரம் ஊடகங்கள் புறக்கணிக்க நேர்கிறது. அரசியல், திரைப்படம், குற்ற நிகழ்வுகள் போன்ற செய்திகளுக்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் பல ஊடகங்கள், மக்களின் முக்கியப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்வதில்லை. சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக வெகுமக்களுக்கான ஊடகங்கள் மாறிவிட்டதால், அதனை நடத்தும் உரிமையாளர்கள் செய்திகளைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றனர். அது ஊடகங்களின் உள்ளடக்கத்திலும் பிரதிபலிக்கிறது. முன்பு செய்திக்கும் செய்தி விமர்சனத்துக்கும் தனியே வேறுபாடு இருக்கும். இப்போது பல பத்திரிகைகளில் செய்திகளுடனேயே தங்களது கருத்துகளையும் திணித்து, அதையும் செய்திபோல வெளியிடும் போக்கும் உருவாகிவிட்டது.
அரசு நிர்வாகத்தில் நிகழக்கூடிய தவறுகளை, குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் செய்திகளை வெளியிடும் சில பத்திரிகைகள், பெரும்பாலும் அதன் அடிப்படை அம்சங்களைப் பற்றிக் கேள்வி எழுப்புவதில்லை. தற்போதுள்ள அமைப்பினுடைய கோளாறுகளின் அறிகுறிகளை மட்டுமே சுட்டிக்காட்டி, அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்கும் வகையிலேயே பெரும்பாலும் உள்ளன. விளிம்புநிலை மக்களின் முக்கியப் பிரச்சினைகள் பல செய்தி ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுவதில்லை.
ஊடகங்களின் இன்றைய நிலை: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய இதழ்கள் (நியூ மீடியா) முக்கியத்துவம் பெற்றுவருகின்றன. அதேவேளையில், கட்டற்ற சுதந்திரத்துடன் சமூக ஊடகங்கள் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்துவருகின்றன. மாறுபட்ட பல்வேறு கருத்துகளை விவாதிக்கின்றன. அச்சுவழிப் பத்திரிகைகளே இணையவழியில் இதழ்களை நடத்துவதும் வாசகர்களுடன் விவாதிக்கச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது. சில நேரம் செய்திப் பத்திரிகைகளில் சில செய்திகள் ஓரங்கட்டப்பட்டாலோ அல்லது மறைக்கப்பட்டாலோ சமூக ஊடகங்கள் அந்தச் செய்திகளை வெளியிடுவதுடன், அந்த இதழ்கள் ஏன் வெளியிடவில்லை என்ற விவாதத்திலும் இறங்குகின்றன. சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை பல நேரம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதையும் தனிநபர் காழ்ப்புணர்ச்சியுடன் செய்திகள் வெளிவருவதையும் சில நேரம் பொய்ச் செய்திகள் உண்மை போலச் சமூக ஊடகங்களில் உலா வருவதையும் பார்க்க முடிகிறது.
தற்போது ஊடகத்துடன் சம்பந்தப்படாதவர்கள் ஊடகத் துறைக்கு அதிகம் வரத் தொடங்கிவிட்டார்கள். பெரிய தொழில் நிறுவனங்களின், பெரிய பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் பெரிய ஊடக நிறுவனங்கள் உள்ளன. தற்போது விளம்பரதாரர்கள் அல்லது தொழில் நிறுவனங்கள் ஊடகங்களின் உள்ளடக்கத்தை நிர்ணயிப்பதில் மறைமுகமாகத் தலையிடுகின்றன. இந்தச் செய்தியைப் போடலாம், இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தக் கூடாது, இந்தச் செய்தியைப் போடவே கூடாது என்றெல்லாம் அழுத்தங்கள் வருகின்றன. பத்திரிகையாளர்கள் முழுச் சுதந்திரத்துடன் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவருகின்றன. எனினும், ஒரு சில பத்திரிகைகளும், சில சுயாதீனப் பத்திரிகை ஊடகங்களும் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிடுவதில் தயக்கம் காட்டுவதில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது.
பத்திரிகைச் சுதந்திரம்: நெருக்கடி நிலைக் காலத்தில் பத்திரிகைகள் அரசின் தணிக்கைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகின. அதைத் தைரியமாக எதிர்கொண்ட பத்திரிகைகளும் உண்டு. ஆனால், தற்போது மக்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த சில மக்கள் பிரச்சினைகள் தொலைக்காட்சி ஊடகங்களின் விவாதப் பொருளாக இருப்பதில்லை. மக்களைப் பாதிக்கும் பல விஷயங்களில் பல ஊடகங்கள் மௌனம் சாதிப்பதையும் அல்லது கண்டுகொள்ளாமல் கடந்துசெல்வதையும் பார்க்க முடிகிறது. கடந்த காலத்தில் கௌரி லங்கேஷ், நரேந்திர தபோல்கர், எம்.எம்.கல்புர்கி போன்றவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் காப்பன் பிணை கிடைக்காமல் தவித்துவருகிறார். பல பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்யும் குரல்களை ஒடுக்கும் வகையில் சட்டவிரோதச் செயல்பாட்டுத் தடுப்புச் சட்டம் (உபா) போன்ற சட்டங்களை அரசு கையில் எடுக்கிறது.
ஜனநாயகத்தின் குறியீடாகப் பத்திரிகைச் சுதந்திரம் கருதப்படுகிறது. ஆனால், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவருகிறது என்பதை எல்லைகளைக் கடந்த செய்தியாளர்கள் (Reporters Without Borders) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு அறிக்கைப்படி, பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டு எண்ணில் 180 நாடுகளில் இந்தியா 150-வது இடத்தில் உள்ளது. கருத்துச் சுதந்திரமும், பேச்சுச் சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகியுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
‘நமது நாட்டில் அநேகப் பத்திரிகைகள் இருந்தாலும் தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதைத் தெரிவிக்க அஞ்சுகின்றன’ என்று ‘குடியரசு’ இதழில் பெரியார் (19.05.1925) எழுதினார். இந்தியச் சுதந்திரத்துக்கு முன் பெரியார் எழுதியது, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைக்கும் பொருந்துவதாக உள்ளது. பத்திரிகைகளுக்கு என்று தற்போது தணிக்கை முறை இல்லை. அதே சமயம் தணிக்கை முறை கொண்டுவரப்பட்டால், அது கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் விதமாகத்தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை. மரபாக இருந்துவரும் வழக்கப்படி, பத்திரிகைகள் தங்களைச் சுயதணிக்கை செய்துகொள்ளும் முறையே தொடர வேண்டும். அதே நேரம், தொடக்க காலம் தொட்டுப் பத்திரிகைகள் கடைப்பிடித்துவரும் அறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் இன்றைய தேவையாக இருக்கிறது.
விளம்பரங்களை நம்பித்தான் ஒரு ஊடகத்தின் வருவாயும் ஆயுளும் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை மாறினால்தான், அறம் சார்ந்து செயல்படும் ஊடகங்கள் தொடர்ந்து இயங்க முடியும். அந்த வகையில் சரியான ஊடகங்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
- பொன்.தனசேகரன், மூத்த இதழாளர்
தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT