சொல்... பொருள்... தெளிவு | மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022

சொல்... பொருள்... தெளிவு | மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022
Updated on
3 min read

மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022: மத்திய அரசின் மின் துறை அமைச்சகம், மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022-ஐ ஆகஸ்ட் 8 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியது. அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் இருக்கும் நாடாளுமன்றத்தின் எரிசக்தி நிலைக்குழுவுக்கு அனுப்பி, மசோதாவின் முழு சாராம்சத்தையும் விவாதிக்கலாம் என்று மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிஸான் மோர்ச்சா’வுக்கு (எஸ்.கே.எம்) அளித்த வாக்குறுதியை மீறி, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல; அரசமைப்புக்கு எதிரானது, மாநிலங்களின் நலனுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் கூறினர்.

மின்சாரச் சட்டத் திருத்த மசோதாவின் வரலாறு: 2003இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மின்சார மசோதா முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், வர்த்தகம், பயன்பாடு தொடர்பான சட்டங்களை ஒன்றாக்குவதே அதன் நோக்கம். நுகர்வோர் நலனை மேம்படுத்துதல், அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்குதல், மின் கட்டணத்தைச் சீரமைத்தல், மானியங்கள் தொடர்பான கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை வழங்கும் விதமாக இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் மின் விநியோக நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியது.

2007இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக, ஏழைக் குடும்பங்களுக்கு மானியம் வழங்குவதை உறுதிசெய்யும் விதிகள் மின்சாரச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. 2014, 2017, 2018, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மசோதாவை மேலும் திருத்தப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 2014இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனான மசோதா எரிசக்தி நிலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும், மத்திய அரசு அதை மறுஆய்வுக்கு உட்படுத்த விரும்பியதால், நாடாளுமன்றத்தில் அது நிறைவேறவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு பெற்ற பதில்களில் மத்திய அரசு திருப்தி அடையாததால், இது சார்ந்த பிற வரைவு மசோதாக்கள் எதுவும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அவை அனைத்தும் அவற்றின் வரைவு வடிவத்திலேயே இருந்தன.

இந்த மசோதாவின் முக்கியத் திருத்தங்கள் என்ன?: மின்சாரச் சட்டத் திருத்த மசோதா 2022, பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் மிகவும் முக்கியமானது, மாநில அரசுகளின் கீழ் உள்ள மின் விநியோகத்தில் மத்திய அரசின் தலையீட்டை அனுமதிக்கும் முன்மொழிவு. இதற்கான விதிகள், மசோதாவின் 5, 11, 12, 13, 15, 23 ஆகிய பிரிவுகளில் காணப்படுகின்றன. பிரிவு 5, மின்சார விநியோகிப்பாளர்களுக்கான அளவுகோல்களைக் கையாளும் மின்சாரச் சட்டத்தின் 14ஆவது கூற்றைத் திருத்துகிறது. இந்தத் திருத்தம், மின் விநியோகிப்பாளர்களுக்கான நிபந்தனைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கிறது.

மசோதாவின் 11ஆம் பிரிவு, ஒரே பகுதியில் பல விநியோக உரிமதாரர்களின் செயல்பாட்டை எளிதாக்கும் விதமாக மின்சாரச் சட்டத்தின் 42ஆம் பிரிவைத் திருத்த முயல்கிறது. தனியார் நிறுவனங்கள் மின்விநியோகத்தில் ஈடுபட்டால், மிகப்பெரிய செலவில் மாநில அரசுகள் ஏற்கெனவே உருவாக்கிவைத்திருக்கும் மின்விநியோகக் கட்டமைப்பை அவை பயன்படுத்திக்கொள்ளலாம் என அந்தச் சட்டத் திருத்தம் சொல்கிறது. தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பைத் தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு ஏன் தர வேண்டுமென மாநில அரசுகள் கேள்வி எழுப்புகின்றன. இந்தப் பயன்பாட்டிற்கெனத் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் கட்டணம் போதுமானதாக இருக்காது என்பதே மாநில அரசுகளின் ஆட்சேபணைக்கு முக்கியக் காரணம். இதனால், தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டதுபோல், மின்விநியோகத்தில் கால்பதிக்கும் ஏகபோக நிறுவனங்களால், பொதுத் துறை நிறுவனங்களும் சிறிய கட்டமைப்புகளும் அழிந்துவிடும் நிலை உருவாகும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதேபோல், இந்த மசோதாவின் 13ஆம் பிரிவு மின்சாரச் சட்டத்தின் 60ஆம் பிரிவைத் திருத்த முயல்கிறது. ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் தரும்போது, மின்சாரத்தைக் கூடுதல் விலைக்கு வாங்குபவர்களிடமிருந்து பெறும் தொகையை வேறு பிரிவினருக்கு மானியமாகத் தருவதற்கு ஏதுவாக, ஒரு நிதியை அரசு உருவாக்க வேண்டும் என இந்தத் திருத்தம் வலியுறுத்துகிறது.

இந்த மசோதா ஏன் எதிர்க்கப்படுகிறது?: இந்த மசோதா மின்சாரப் பயன்பாட்டில் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் வழங்கப்பட்டுவரும் மானியங்களை நிறுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும், அதன் பிறகு மின்சார விநியோகம் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குச் செல்லும் என்றும் விவசாயிகள் அஞ்சுவதால், இந்த மசோதாவுக்கு முதன்மையாக எதிர்ப்பு எழுந்தது. விநியோக நிறுவனங்களையும், உற்பத்தி நிலையங்களையும் தனியார்மயமாக்கினால் வேலை இழப்பு ஏற்படும் என்று மின் துறை ஊழியர்கள் இந்த மசோதாவை எதிர்க்கின்றனர். மத்திய தொழிற்சங்கங்கள் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது, எஸ்.கே.எம். ஆதரவளிப்பதாக உறுதியளித்தது. இந்த மசோதா, கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் மின்சாரம் வருவதால், இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு முன்பு, மத்திய அரசு மாநிலங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த மசோதா, லாபத்தைத் தனியார்மயமாக்குவதற்கும், நஷ்டத்தைத் தேசியமயமாக்குவதற்கும் வழிவகுக்கிறது என காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி கூறினார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மானிய விலையில் மின்சாரம் பெறும் ஏழை விவசாயிகளின் கதி என்னவாகும் எனக் கேள்வி எழுப்பினார்.

இனி என்ன நடக்கும்?: மசோதா மீதான விவாதத்தை எரிசக்தி நிலைக்குழு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தக் குழுவுக்குத் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்பி ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமை வகிக்கிறார். ஆகஸ்ட் 9 அன்று பாஜகவுடனான கூட்டணியை ஐ.ஜ.க முறித்துக்கொண்டுள்ளது. இதற்குப் பிறகும் எரிசக்தி நிலைக்குழுவில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்றாலும், இதுபோன்ற மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, தலைவரின் நிலைப்பாடு முக்கியப் பங்கு வகிக்கும். விவாதத்திற்குப் பின்னர், இந்த மசோதா தொடர்பாகச் சம்பந்தப்பட்ட துறையினர், அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துகளை இந்த நிலைக்குழு கேட்டறியும். அந்தக் கருத்துகளின் அடிப்படையில் நிலைக்குழு புதிய திருத்தங்களைப் பரிந்துரைக்கும். அவை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பப்படும். மக்களவையில் அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், அந்த மசோதா மக்களவையிலும் பின்னர் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு மசோதா சட்ட வடிவத்தைப் பெறும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in