

இந்தியக் குடியரசின் தொடக்கம் - இந்நாட்டு மக்கள் மீதான உயர் நம்பிக்கையின் மீதான செயல்பாடு; நாட்டின் அனைத்து வளங்களையும் திறமையையும் பயனுள்ள நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கும் நடவடிக்கை. தன்னுடைய வலிமை, செயல்திறனை நாட்டுக்கு அதிகபட்சமாக அளித்து நாட்டின் பெருமையைக் காப்போம் என்ற உறுதிமொழியை மக்கள் எடுத்துக்கொள்வதை மறைமுகமாக வலியுறுத்துவதுதான் குடியரசு அறிவிப்பு. கவனச் சிதறலுக்கு ஆளாகிவிட்ட உலகுக்கு, தேவைப்படும்போது தனது ஆற்றலை ஒன்றுதிரட்டிச் செயல்பட்டு, அபயமளிக்கக் கூடிய நாடுதான் இந்தியா என்பதை உணர்த்தவே குடியரசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய அரசமைப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அதில் தனிநபரின் சுயம், கூட்டு உறுதிப்பாட்டில் கரைந்துவிடாது, மாறாக அதை தொடர்ந்து வளர்த்தெடுக்கும். அத்தகைய அரசியல் ஏற்பாட்டில் யாருமே ஊன்றுகோலுடன் நடை போட வேண்டிய அவசியம் இருக்காது. பொதுப் பிரச்சினையில் நான் கவலைப்பட ஏதுமில்லை என்று எவரும் ஒதுங்கிவிடவும் முடியாது.
நாட்டில் ஏதாவது சரியாக இல்லாமல் போனால், அதற்குத் தானும்தான் இறுதியாகப் பொறுப்பு என்பதை ஒவ்வொரு குடிநபரும் உணர வேண்டும். அதற்கு, ஜனநாயக அமைப்பில் அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் ஆழ்ந்து கவனித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். நல்லவிதமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் எதை, எப்படி, எங்கே செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு நிர்வாக இயந்திரம் சரியானபடி சுழல, தான் எப்படித் தோள்கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இதில் தன்னுடைய சக குடிமக்களின் அடியொற்றி நடக்க வேண்டும் – விலகிவிடக் கூடாது, குறுக்கு வழிகளை நாடக் கூடாது, பலியாடுகளை அடையாளம் காணும் போக்குக்கு இரையாகிவிடக் கூடாது.
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஆகஸ்ட் 1947, அதுநாள் வரையில் மக்களிடமிருந்த போராட்ட உணர்வை சாந்தப்படுத்தியது. சுதந்திரத்துக் காகப் போராடிய மக்கள் சுதந்திர நாட்டில் ஆற்ற வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் அடுத்து அணிவகுத்தன. அதுவரை நாடு ஒரே அமைப்பாக நீடித்ததே மிகப் பெரிய சாதனை. நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம். ஒரே சமயத்தில் பல கடமைகளை ஆற்றவும் முற்பட்டோம். நம்முடைய ஆவலாதிகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு, கடமைகளைச் செய்வதில் நாம் பயிற்சி பெற்றிருக்கவில்லை.
சுதந்திர நாட்டில் கிடைத்த பதவிகளும் அதிகாரமும் பலருக்கும் தலையில் போதையை ஏற்றிவிட்டன. இனிப்பை ஈ மொய்ப்பதுபோல அதிகாரம் தரும் பதவிகளுக்குப் பலரும் போட்டி போடுகின்றனர். சுயராஜ்யத்துக்காக காந்தி தலைமையில் போராடிய சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களுக்கு அடுத்த நிலையில் நாட்டை நிர்வகிக்க, நன்கு தயார் செய்யப்பட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களே இல்லை என்பது அம்பலமாகியிருக்கிறது. சுதந்திரச் சுடர் அணைந்துவிடாமல் காக்க, அடுத்த தலைமுறை தலைவர்கள் தயாராகவில்லை. சுதந்திரம் வேண்டும் என்ற குறிக்கோளுக்காக அயராமல் போராடிய முதல் தலைமுறையைப் போல நாட்டின் ஆக்கப் பணிகளுக்கும் உழைக்க பயிற்சிபெற்ற அடுத்த தலைமுறை அவசியம்.
இனி லட்சியத்துக்கான போராட்டம் எல்லாம் உள்நாட்டிலேயே இருக்கும் எதிரிகளுக்கு எதிராகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனநாயகம் என்ற கூட்டை அரசமைப்பு நமக்குத் தந்திருக்கிறது. நாம்தான் அதில் மூச்சுக்காற்றை ஊத வேண்டும். உலகம் எப்படி உருவானது என்று கூறும் புராணக் கதை, விராட புருஷன் தண்ணீரில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு படுத்திருந்ததாகக் கூறும். அந்த நீர்நிலையில் விராட புருஷனைவிட ஆற்றல் குறைந்த எவர் நுழைந்தபோதும் விராட புருஷன் அவர்களைக் கண்டுகொள்ளவேயில்லை. அனைவருக்கும் மேலான உச்சபட்ச ஆற்றல் கொண்டவர் நுழைந்த உடனே விராட புருஷன் இயங்க ஆரம்பித்தார் என்று புராணம் கூறும்.
நம்முடைய இப்போதைய அரசியல் நிலைமையை அப்படியே உணர்த்தும் உருவகக் கதையாக, இதை நாம் கொள்வோம். ஜெர்மனியில் வெய்மார் குடியரசு அற்புதமான அரசமைப்பை உருவாக்கியது. ஆனால் அந்தக் குடியரசுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத் தீ அடிவயிற்றில் மூளாததால் அரசமைப்பு முழுவதுமே வீணடிக்கப்பட்ட வெற்றுக் காகிதமாகிவிட்டது. இந்தியா சுதந்திரத்தை அடைந்திருந்தாலும், குடியரசாக தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டாலும் மட்டும் போதாது. நாட்டு மக்களுக்கு, நம் நாட்டை உன்னத நிலைக்குக் கொண்டுவர பாடுபட வேண்டும் என்ற உன்னதமான இலக்கு இருக்க வேண்டும். சோம்பிக் கிடக்கும் நாட்டு மக்களுடைய மனங்களில், சுதந்திரம் பெற்றுவிட்ட இந்திய குடியரசை உலகிலேயே முன்னணி நாடாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அடிவயிற்றுத் தீயாக மூள வேண்டும். நியாயமான, சமத்துவமான, தொடர்ந்து செயல்படக்கூடிய அரசியல் முறைமைக்கு அப்படியொரு தீ அவசியம்.
(1950 ஜனவரி 26 அன்று வெளியான ‘தி இந்து’ தலையங்கம்)
நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்
தமிழில்: வ. ரங்காசாரி