Published : 24 Aug 2022 08:45 AM
Last Updated : 24 Aug 2022 08:45 AM

சுதந்திரச் சுடர்கள் | இலக்கியம்: சிற்றிதழ்கள் வளர்த்த தமிழ் இலக்கியம்

சுதந்திரத்துக்குப் பிறகான தமிழ் இலக்கியம் நவீனமடைந்ததில் தமிழ் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. இந்தக் காலகட்டம், சிற்றிதழ் இயக்கம் என இலக்கிய வரலாற்றில் அறியப்படுகிறது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு ‘மணிக்கொடி’ இதழ், நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு வித்திட்டாலும், அது விருட்சமாக வளர்ந்தது சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான். அந்த வகையில் ‘மணிக்கொடி’ காலகட்டத்தவரான எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் முதன்மையானது.

‘எழுத்து’, 1959இல் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவை ஆசிரியராகக் கொண்டு மாத இதழாக வெளிவந்தது. தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சிக்கு இந்த இதழ் களம் அமைத்துக்கொடுத்தது. க.நா.சுப்ரமண்யம், ந.பிச்சமூர்த்தி, நகுலன், சுந்தர ராமசாமி, பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன், சி.மணி போன்ற முதல் தலைமுறை கவிஞர்கள் பலரும் இந்த இதழில் தொடர்ந்து எழுதினர். வில்லியம் பாக்னர், ஜேம்ஸ் ஜாய்ஸ், ஆண்டன் செகாவ், ஹென்றி ஜேம்ஸ் போன்ற அயல் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘எழுத்து’ தொடர்ந்து வெளியிட்டது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ‘எழுத்து’ இதழ் ஓர் இயக்கமாக இருந்தது.

எழுத்தாளர் க.நா.சு. 1964இல் ‘இலக்கிய வட்டம்’ என்ற பெயரில் ஓர் இலக்கிய இதழை நடத்தினார். இலக்கியக் கோட்பாடுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். படைப்புரீதியான புதிய முயற்சிகளை அதில் பதிப்பித்தார். சுந்தர ராமசாமி, நகுலன், ஆர்.சூடாமணி, வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், தி.க.சிவசங்கரன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இதில் பங்களித்துவந்தனர்.

‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் நிருபராக டெல்லியில் பணியாற்றிய கி.கஸ்தூரிரங்கன் ‘கணையாழி’ இதழை 1965இல் தொடங்கினார். இந்த இதழ் இளம் எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தது. அசோகமித்திரன் இதன் ஆசிரியராக இருந்த கட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எழுத்து இதழில் எழுதிய கவிஞர் சி.மணி ‘நடை’ என்ற பெயரில் காலாண்டிதழை 1968இல் தொடங்கினார். இந்த இதழ், நவீன ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டது. கவிஞர்கள் ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன் தொடர்ந்து எழுதினர். நாடக ஆளுமையான ந. முத்துசாமியின் கதைகளும் ‘நடை’யில் வெளிவந்தன.

எழுத்தாளார் நா.கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு ‘கசடதபற’ இதழ் 1970இல் தொடங்கப்பட்டது. இந்த இதழில் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ஐராவதம், ந. முத்துசாமி, அசோகமித்திரன் ஆகியோர் பங்களித்துள்ளனர். பின்னால் பெரும் பெயர்பெற்ற எழுத்தாளர் பாலகுமாரனும் இந்த இதழில் பங்களித்துள்ளார். நூலகராகப் பணியாற்றிய தேவ சித்திரபாரதி ‘ஞானரதம்’ (1970) என்ற பெயரில் ஒரு சிற்றிதழைக் கொண்டு வந்தார். ஜெயகாந்தன் இதன் ஆசிரியராகச் சில காலம் இருந்தார். வனமாலிகையின் ‘சதங்கை’, சுந்தர ராமசாமியின் ‘காலச்சுவடு’, ராஜமார்த்தாண்டனின் ‘கொல்லிப்பாவை’ போன்ற இதழ்களும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

கோவையிலிருந்து வந்த ‘வானம்பாடி’ இதழ் (1970), தமிழ் இலக்கியச் சூழலில் ஓர் இயக்கமாகப் பார்க்கப்படுகிறது. மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், பா.செயப்பிரகாசம், கோ. ராஜாராம் போன்ற கவிஞர்கள் இந்த இதழ் மூலம் கவனம் பெற்றனர். இடதுசாரித் தலைவர் ப.ஜீவானந்தம் ஆசிரியராக இருந்து 1954இலிருந்து கொண்டுவந்த ‘தாமரை’ தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. ரஷ்ய, பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது. பிரபஞ்சன், வண்ணநிலவன், பூமணி, கந்தர்வன், பா.செயப்பிரகாசம், ஆர்.கே.லிங்கன், தனுஷ்கோடி ராமசாமி, கு.சின்னப்பபாரதி போன்ற எழுத்தாளர்கள் இந்த இதழில் தொடர்ந்து எழுதிவந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய இதழாக வெளிவரும் ‘செம்மலர்’ எழுத்தாளர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியது. ராஜேந்திர சோழன், தணிகைச் செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி உள்ளிட்டோர் இந்த இதழில் எழுதியுள்ளனர். எழுதுவதற்கு ஊடகம் இல்லாக் காலகட்டத்தில் தமிழில் இலக்கிய ரசனைமிக்க, அரசியல் சுரனைமிக்க போக்குகள் உருவாக சிற்றிதழ்கள் களமாக இருந்தன.

- ஜெயகுமார்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x